Saturday, July 30, 2011

மாவீரன் தீரன் சின்னமலை மற்றும் சாகித் உத்தம் சிங்


                                        ( ஏப்ரல் 17 , 1756 - ஜூலை 31 ,1805 ) 

 மாவீரன் தீரன் சின்னமலை இந்திய  விடுதலைப் போராட்ட மாவீரர் ஆவார்.கொங்கு நாட்டின் முதல் விடுதலைப் போராட்ட மாவீரர்.

இன்றைய ஈரோடு மாவட்டம் காங்கேயம்அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர். அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர், தாயார் பெயர் பெரியாத்தா.

இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது. இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார். இவர்கள் புவிக்கும் செவிக்கும் புலவோர்கள் சொல்லும் கவிக்கும் இனிமை செய்ததால் சர்க்கரை என பெயர் பெற்றார்.

தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம் ,தடிவரிசை ,வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம்  போன்ற போர்ப் பயிற்சியை  கற்றுத் தேர்ந்தார்.கொங்குநாடு  அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது.

ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகளுக்கு  விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் பெற்றார் .

இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனி  கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளாவிலும்  கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார்.

டிசம்பர் 7 1782 - இல் ஐதரலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார்.

மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தைஉண்டாக்கியது.

நெப்போலியனிடம்   படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காம் மைசூர்ப் போரில் மே 4, 1799-இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆனதிப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார்.

ஏப்ரல் 18, 1792-இல் தான் வாங்கிய சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும்   தயாரிக்கப்பட்டன. தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார்.

போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாட்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800   அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.

இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன. சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது. அவர் கூட்டமைப்பில்வேளாளர், நாயக்கர், தேவர்,, வேட்டுவர்,வன்னியர், நாடார், தாழ்த்த பட்டோர் மற்றும் இஸ்லாமியர்  பலர் இருந்தனர். ஓமலூர் சேமலைப் படையாச்சி, கருப்பசேர்வை, ஃபத்தே முகம்மது உசேன், முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர். எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர். 

வெற்றி

1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். ஓடாநிலைப் போரில் ஆங்கிலத் தளபதி கர்னல் மேக்ஸ்வெல் தலையைக் கொய்து மொட்டையடித்துச் செம்புள்ளி கரும்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டது குறிப்பிடத்தக்கது. சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.
தூக்கிலிடப்படல் 


போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31,1805   அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப சேர்வையும் உடன் வீரமரணம் எய்தினர்.

சின்னமலை நினைத்திருந்தால் கொங்குநாட்டு நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வரிவசூலில் பத்தில் மூன்று பங்கு பெற்றுத் தொடர்ந்து ஆட்சி செலுத்தி சுதேச சமஸ்தானம்போல 1947 வரை விளங்கியிருக்கலாம். ஆங்கிலேயரும் அவ்வாறே வேண்டிக்கொண்டனர். ஆனால் மாவீரன் சின்னமலை அதை மறுத்து வீரமரணம் அடைந்தார். மாவீரன் சின்னமலை ஆங்கில வெள்ளத்தைத் தடுக்கும் பெருமலையாக விளங்கினார்.

கௌரவிப்பு

முன்பு தீரன் சின்னமலை நினைவாக திருச்சிராப்பள்ளியை  தலைமையிடமாக கொண்டு போக்குவரத்துக் கழகமும், கரூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமும் இருந்தது. தீரன் சின்னமலைக்குத் தமிழக அரசு சென்னையில் உருவச்சிலை ஒன்றை அமைத்ததுள்ளது. தமிழக அரசின் சார்பில் ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தீரன் சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.ஏப்ரல் 17  அன்று அவர் பிறந்த நாளிலும், அவர் மறைந்த ஆடிப் பதினெட்டு நாளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொங்கு மக்கள் தங்கள் நன்றியைச் செலுத்துகின்றனர்.


 இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 31 ஜூலை 2005 அன்று தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.

                                                  சாகித் உத்தம் சிங்



சாகித் உத்தம் சிங்  இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் மறைக்கப்பட்ட இன்னுமொரு தியாகி என்றே சொல்லலாம்.

உத்தம் சிங் 1899ல் பஞ்சாப்பில் உள்ள ஒரு சுனம் எனும் கிராமத்தில் தலால் சிங்க்குக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். தலால் இரயில்வே கேட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் தந்தை வைத்த பெயர் சேர் சிங். சேர் என்றால் இந்தியில் சிங்கம் என்று அர்த்தம், 
அவர் அப்பாவிற்கு தன் மகன் பிறந்தபொழுதே தெரிந்துவிட்டது இவன் பெரிய ஆளாக வருவான் என்று. ஆனால் சேர் சிங் இரண்டு வயதில் தன் தாயை இழந்தார், 8 வயதில் தந்தையையும் இழந்து. அமிர்த்சரில் ஒரு அனாதை விடுதியில் வளர்ந்தார். அனாதை விடுதியில் இவரது பெயரை உத்தம் சிங் என்று மாற்றினார்கள். இவருக்கு 18 வயதாகும் பொழுதே இவரது அண்ணனும் 1917ல் இறந்துவிட்டார் .
அதன் பிறகு இந்த இந்திய நாடே இவருக்கு இருந்த ஒரே சொந்தமாகி போனது. அதன் பிறகு தனது சொந்தமான இந்தியாவுக்காக வாழ்ந்தார் உத்தம் சிங். 1919ல் தனது பள்ளி படிப்பை முடித்து அனாதை விடுதியில் இருந்து வெளியில் வந்து தனது வாழ்க்கையை தொடங்கினார்.

 1919ம் வருடம் ஏப்ரல் மாதம் 13ம் நாள் ஜாலியன் வாலாபாக்கில் நடந்த கூட்டத்தில் 20000 அப்பாவி மக்களுக்கு மாலை 5.15 க்கு அனைத்தும் தலைகீழானது
ஜெனரல் ரெஜினாலட் டயர் இவர்கள் அனைவரும் கூடியிருந்த மைதானத்திற்கு இருந்த ஒரே வழியினை அடைத்துக்கொண்டு வந்து நின்று. எந்தவித முன்னறிவுப்பும் இன்றி கூடியிருந்த 20000க்கும் அதிகமான மக்களின் மீது குண்டு மழை பொழிந்தான். இதுவே இந்திய சுதந்திர போராட்டத்தில் நாம் அனைவரும் படித்த ஜாலியன் வாலாபாக் படுகொலை.

இந்த படுகொலையில் கொல்லப்பட்டவர்கள் கணக்கு 379 பேர் கொல்லப்பட்டதாகவும், இதில் 337 பேர் ஆண்கள், 41 சிறுவர்கள், ஒரு ஆறுவார கை குழந்தை என்றும் கணக்கு காட்டியது அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம். ஆனால் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். குண்டுகளில் இருந்து தப்பிக்க மைதானத்தில் இருந்த கிணற்றில் குதித்தவர்களில் இறந்து போனவர்களின் உடல்களின் எண்ணிக்கையே 120யை தொட்டது. பிரிட்டிஷ் அரசாங்க கணக்கின் படி மொத்தம் 1500 குண்டுகள் சுடப்பட்டதாக சொல்கிறது.

இந்த சம்பவத்தை பற்றி சொல்லும் பண்டிட் மதன் மோகன் மாலவியா , லாலா கிரிதரி லால் போன்றவர் சொல்லுவது 1000த்துக்கும் அதிகமான மக்கள் இறந்துவிட்டனர் என்று. ஏன் அப்பொழுது அமிர்த்சர் மருத்துவமனையில் சிவில் சர்ஜனாக இருந்த மருத்துவர் ஸ்மித் சொல்லுவது இவர்கள் சொல்லுவதை விட அதிகம். 1800க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் என்கிறார். துப்பாக்கி சூடு முடிந்தவுடன் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் இதில் அடிபட்டவர்களை காப்பாற்ற முடியவில்லை அதனால் மேலும் உயிர் சேதம் அதிகமானதாக சொல்லுகிறார்கள். இன்று வரை ஜாலியன் வாலாபாக்கில் மரணித்தவர்களின் எண்ணிக்கையோ இல்லை காயம்பட்டவர்களின் எண்ணிக்கையோ முழுமையாக தெரியவில்லை.
இந்த சம்பவத்திற்கு பிறகு ஜெனரல் டயர் இங்கிலாந்து திரும்பினார் அவருக்கு ஒரு மணிபர்ஸில் 26000 ஸ்டெர்லிங்க் பரிசாக கொடுக்கப்பட்டது. அப்பொழுது பஞ்சாப் மாநிலத்தின் கவர்னராக இருந்தவர் ஓ' ட்வையர் இவர் ஜெனரல் ரெஜினாலட் டயரின் நடவடிக்கையை ஆதரித்தவர் மேலும் இவரும் சேர்ந்து தான் இந்த படுகொலைக்கு திட்டம் தீட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இருவரும் இங்கிலாந்து சென்றுவிட்டனர்

ஆனால் அந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட ஒருவர் நினைத்தால் எதையும் செய்யலாம் என்பதை நிருபித்தவர்தான் இந்த உத்தம் சிங்.

1919ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்திற்கு பலிவாங்குவது என்று முடிவெடுத்த உத்தம் சிங் தன்னாலான அனைத்து முயற்சிகளிலும் இறங்கினார். 

1920ல் நைரோபி சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்ல முயற்சித்து முடியாமல் 1921ல் இந்தியா திரும்பினபிறகு
இந்தியாவில் சுதந்திரத்திற்காக போராட தொடங்கினார்.

1924ல் அமெரிக்கா சென்று மூன்று வருடங்கள் அங்கிருந்து புரட்சிக்கு வித்திட்டார்.

1927 ஜூலை மாதம் மேலும் 25 பேர்களுடன் இந்தியா திரும்பினார், அப்பொழுது அமெரிக்காவில் இருந்து ரிவால்வார்களும் குண்டுகளும் பெருமளவு வாங்கி வந்தார்.

1927 ஆகஸ்ட் மாதம் ஆயுதங்களுடன் பிரிட்டிஸ் அரசிடம் மாட்டி சிறைச்சாலை சென்றார். இவருக்கு 5 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறைசாலையில் இருந்தார்.

1931ல் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட பொழுது இவரும் அதே சிறைச்சாலையில் தான் இருந்தார்.சிறை தண்டனைக்கு பிறகு வெளியில் வந்து விளம்பர பலகை வரைபவராக வாழ்க்கையை தொடர்ந்தார். ஆனால் இவரை பிரிட்டிஷ் காவல்துறை கண்காணித்துக்கொண்டே இருந்தது.

1933 - ல் பிரிட்டிஷ் காவல்துறை அனைவரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு காஷ்மீர் வழியாக இத்தாலி சென்று அங்கு 3 மாதங்கள் தங்கியிருந்து  1934 - ல் இலண்டன் சென்றடைந்தார். இதனிடையில் 1927ல் ரெஜினால்ட் டயர் மரணமடைந்துவிட்டார். ஆனால் ஓ' ட்வையர் விடுவதில்லை என்ற ஒரே குறிக்கோளுடன் காலம் கனிவதற்காக இலண்டனிலேயே காத்திருந்தார்.

1940 மார்ச் 13ம் தேதி இலண்டனில் உள்ள காக்ஸ்டன் ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் இஸ்ட் இந்தியா கம்பெனியும் ராயல் சென்ட்ரல் ஆசியாவும் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் முடிந்த பிறகு அங்கு பேச வந்திருந்த ஓ' ட்வையர்ரை சுட்டு கொன்றார். மேலும் அப்பொழுது இந்தியாவிற்கான ஸ்டேட் செகரட்டரியாக இருந்த லார்ட் ஜெட்லான்ட்டையும் சுட்டார். ஜெட்லான்ட் காயத்துடன் தப்பிவிட்டார்.

உத்தம் சிங் சுட்டுவிட்டு தப்பிக்க முயற்சிக்காமல் அங்கேயே நின்றார். காவலர்கள் வந்து அவரை பிடித்து சிறையில் அடைத்தனர். நீதிமன்றத்தில் வழக்கு வந்த பொழுது உத்தம் சிங் நான் செய்த செயலுக்காக வருத்தப்படவில்லை, மேலும் இந்த தண்டனை ஓ' ட்வையர்  கொடுக்க படவேண்டியதே என்று தெரிவித்தார். இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு
1940ல் ஜூலை மாதம் 31ம் தேதி  துக்கிலடப்பட்டு இலண்டனிலேயே கொல்லப்பட்டார்..


ஓ' ட்வையர் கொலை செய்யப்பட்டது இந்தியாவிலும் அரசியல்வாதிகளால் விவாதிக்கப்பட்டது காந்தி முதற்கொண்டு அனைவரும் இதற்கு கண்டணம் தெரிவித்தனர் 1940ல். நேரும்  இந்த சம்பவத்திற்கு ஓ' ட்வையர் கொல்லப்பட்டது தவறு இது தவறான முன்னுதாரணம் என்றார்.

 1962ல்  நேருவே முழுவதுமாக தனது கருத்தை மாற்றி அதுவும் சிறந்த சுதந்திர போராட்ட வீரகள் பகத்சிங், ராஜ்குரு போன்றவர்களுக்கு வழங்கப்பட்ட  சாகித் என்ற பட்டத்தை வழங்கி. சாகித் உத்தம் சிங்கின் எதிரியின் மூக்கின் கீழ் சென்று நடத்திய போராட்டமே இந்தியாவின் விடுதலைக்கான மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும் என்று சொன்னார் .

1940ல் தூக்கிலடபட்டு இலண்டனில் புதைக்கப்பட்ட சாகித் உத்தம்சிங்கின் உடல் 1974 பஞ்சாபை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏவின் முயற்சியாலும் இந்திய அரசின் முயற்சியாலும் இந்தியா கொண்டு வந்து சேர்க்கப்பட்டது அப்பொழுது அந்த மாவீரனின் உடலை வரவேற்க அப்போதைய காங்கிரஸ் கட்சியின் தலைவரான சங்கர் தயாள் சர்மா, அப்போதைய பஞ்சாப் மாநில முதல்வர் ஜெயில் சிங் (இருவரும் பின்னாளில் ஜனதிபதியாக பதவி வகித்தார்கள்) அப்பொழுதைய பிரதமர் இந்திரா காந்தியும் விமானநிலையம் வந்து வரவேற்றார்கள்.

சாகித் உத்தம் சிங் ஜாலியன் வாலாபாக்கில் தனது மக்களை சுட்டு கொன்ற ஜெனரல் டயர் எந்தளவுக்கு எதிரியோ அதே போல் அன்று கவர்னராக இருந்த ஓ' ட்வையர்ரும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பொறுப்பு என்றே நினைத்தார். எய்தவன் இருக்க அம்பை நோவானேன் என்பது தமிழில் நாம் அறிந்த ஓர் பழமொழி அதையே சாகித் உத்தம் சிங் செய்தார். அதாவது அம்பான ஜெனரல் டயர் கொல்லப்படுவது எவ்வளவு முக்கியமோ அதற்கு காரணமான கவர்னர் ஓ' ட்வையர்க்கு தண்டனை கொடுப்பதே அதைவிட முக்கியம் என்று முடிவெடுத்தார் அவரை முடிக்கும் வரை தொடர்ந்து போராடி வெற்றியும் கண்டார்.

                       இந்நாளில்  இவ்வீரர்களை  போற்றி  நினைவு கூறுவோம் .

                                                              அன்புடன் உங்கள் ,
                                                    ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV

1 comment:

  1. அருமையான பதிவு.
    நிறைய விபரங்கள் கற்றுக் கொண்டேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete