Thursday, December 29, 2011

எஸ் பாலசந்தர்




 இந்தியாவின் புகழ்பெற்ற இயக்குனர் வி.சாந்தாராம், 1936-ல்சீதா கல்யாணம்” என்ற படத்தைத் தமிழில் தயாரித்தார். இதில் எஸ்.பாலசந்தரின் குடும்பமே நடித்திருக்கிறார்கள். தசரதராக நடித்தவர் பாலசந்தரின் அப்பா சுந்தரம் அய்யர் அவரது அண்ணன் எஸ்.ராஜம் ராமர் வேஷம். அக்கா ஜெயலட்சுமி சீதையாக நடித்திருக்கிறார், அப்படத்தின் ஒரு காட்சியில் கஞ்சிரா வாசிக்கும் சிறுவனாக பாலசந்தர் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாகத் துவங்கிய அவரது திரைப்பிரவேசம் தமிழ்சினிமாவில் பல்வேறு மாற்றங்களை. சாதனைகளை உருவாக்கியது, பின்னாட்களில் சினிமா உலகை உதறிவிட்டு வீணை வாசிப்பில் உலகப்புகழ் பெற்று வீணை எஸ் பாலசந்தர் என்று அறியப்பட்டார்.

1948 மார்ச் மாதத்தில் வெளிவந்த “இது நிஜமா”  என்ற  திரைப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல், கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடிக்கவும் செய்து, படத்திற்கு இசையும் அமைத்தார் எஸ்.பாலசந்தர் . இதுவே தமிழில் இரட்டை வேடம் இடம் பெற்ற முதல் சமூகப்படம். (கமல்ஹாசன் நடித்த கல்யாணராமன், இது நிஜமா வின் லேசான தழுவல்)

1950 -60 களில் வெளியான படங்கள் பெரும்பாலும், குடும்பக் கதைகளாகவும், புராணக் கதைகளையும் ஒட்டித்தான் இருந்தன. அதிலும் குறிப்பாக, சிவாஜிகணேசனின் உணர்ச்சிக் காவியங்களும், ஜெமினிகணேசனின் காதல் கதைகளும்,எம்.ஜி.ராமச்சந்திரனின் வரலாற்றுக் கதைகளும், வந்து கொண்டிருந்தன.

ஸ்ரீதர், பீம்சிங், பி,.ஆர்.பந்துலு போன்ற இயக்குனர்கள், குடும்பங்களில் நடக்கும் உறவுச் சிக்கல்களையும், மெலோடிராமா பாணியில், திரைக்கதை அமைத்து படங்களை உருவாக்கினார்கள்.

அந்தச் சமயத்தில், எஸ்.பாலசந்தரின் திரைப்படங்கள், ஒரு புதுவிதமான அலையைத் தோற்றுவித்தன . திகில் மர்மம் என்ற வகையில் அடங்கும் அவரது திரைப்படங்கள், ஆங்கில படங்களில்ன் கதையமைப்பை, கதைக் கருக்களை ஒட்டி அமைந்திருந்தன. அவற்றை, நம்முடைய சூழலுக்கு ஏற்ப, அப்போதைய கலாசாரச் சூழலை ஏற்ப  மாற்றி அமைத்துப் படங்கள் எடுத்தார். எஸ்.பாலசந்தரின் படங்கள், திகில், மர்மம் என்ற அடிப்படைகளை வைத்தே வந்தன என்றாலும், மலிவான பயமுறுத்தல் உத்திகள் இல்லாமல், நல்ல production value கொண்ட திரைப்படங்களாக எடுத்தார். ஸ்டுடியோக்களிலேயே மொத்தப் படங்களை எடுத்த அந்த காலத்தில், அவரது திரைப்படங்களில் வெளிப்புறப் படப்பிடிப்புக் காட்சிகள் அதிகமாக இடம் பெறும். வசனங்களில் ஆங்கிலம் அதிகமாகக் கலந்திருக்கும்.இன்றும் அவரது திரைப்படங்களைப் பார்க்கும் போது அவரது கேமிரா கோணங்களும். கதை சொல்லும் முறையும், பாடல்களும், பின்னணி இசையை கையாளும் விதமும், அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். அவ்வகையில் அவர் ஒரு முன்னோடி தமிழ் இயக்குனர்.

அழகான ஆங்கில பேச்சும்  அவரது ஸ்டைலான நடிப்பும் நமக்கு மேலும் வியப்பளிக்கின்றன . இப்படி  சினிமாவில் நடிப்பு, இசை, இயக்கம் என்று பன்முகத்தன்மையில்   சிறப்பித்த காரணத்தால் அவருக்கான தனியிடம் கிடைத்தது,

எஸ்.பாலசந்தர்  சொந்தப்பட நிறுவனமான எஸ்.பி.கிரியேஷன்ஸ்சைத் தொடங்கி, “அவனா இவன்”, “பொம்மை”, “நடு இரவில்” ஆகிய படங்களைத் தயாரித்தார். இதில் “பொம்மை”, “நடு இரவில்” ஆகிய திகில் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன.

அந்த நாள், பொம்மை, நடு இரவில் ஆகிய மூன்று படங்களையும் தமிழ் சினிமாவின்  முன்னோடி முயற்சிகள் என்றே சொல்லாம்.


இதில் அந்த நாள் அகிரா குரசோவாவின் ரோஷமான் படத்தின் பாதிப்பில் உருவாக்கபட்டிருக்கிறது.ரோஷமோன் போல ஒரு நிகழ்வின் மாறுபட்ட சாத்தியங்களைச் சொல்ல முயன்ற இயக்குனர் அதற்குப் பின்புலமாக யுத்த காலத்தை எடுத்துக் கொண்டது திரைக்கதை யுக்தி பிரமிக்கவைகிறது.


இந்தியாவில் தனக்கான அங்கீகாரம் கிடைக்காத ரேடியோ இன்ஜினியர் ராஜன் (சிவாஜி) ஆத்திரத்தில், அந்நிய நாட்டுக்கு உதவி செய்து, தேசத்துரோகி ஆகின்றான். அவனை அவனது மனைவியே ( பண்டரிபாய்) சுட்டுக் கொல்கிறாள் என்ற கதையை ரோஷமானின் கதைக்கு இணையாகத் தேர்வு செய்து படமாக்கியிருந்தார் , குறிப்பாக இந்த படத்தில் வரும் சிவாஜியின் எதிர்மறை கதாபாத்திரமான ரேடியோ என்ஜினியர் யாரும் நடிக்காத கதாபாத்திரம், அதன் இருண்ட மனநிலையும் கோபமும் மனக்கொதிப்பும் நன்றாக காட்சிப்படுத்தபட்டிருக்கும் ,படத்தில் பாடல்களே இல்லை.


அது போன்ற கதாபாத்திரம் எதையும் பின்னாளில் சிவாஜி நடிக்கவேயில்லை , ரோஷமானின் படத்தொகுப்பை போலவே இதிலும் படத்தொகுப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது, இப்படத்தை இயக்கும் போது எஸ். பாலசந்தருக்கு வயது 27, சம்பிரதாயமாக நம்பிக் கொண்டிருந்த திரைப்படத்தின் விதிகளை தூர எறிந்துவிட்டு மாறுபட்ட அழகியலோடு கதை முன்பின்னாக சென்று அவிழும் முறையில் திரைக்கதை  உருவாக்கியிருந்தார்.

பொம்மை மற்றும் நடுஇரவில் படத்தில் அவரது இயக்கமும் பரிசோதனை முயற்சிகளும் கூடுதல் வியப்பளிக்கின்றன,


ஒரே நாளில் நடக்கும் நிகழ்ச்சிகள் தான் பொம்மை படம், 1964-ல் வெளி வந்த இப்படத்தில் ஒரு பொம்மைக்குள் வெடிகுண்டை வைத்து ஒருவரைக் கொல்ல முயற்சிக்கிறார்கள், அந்த பொம்மை கைமாறிப்போய்விடுகிறது, அதைத் தேடியலைகிறார்கள் என்ற எளிய கதையை தனது திரைக்கதையின் வழியே மிக சுவாரஸ்யமாக்கியிருப்பார் பாலசந்தர்.


படத்தின் துவக்கத்தில் ஒரு மவுத் ஆர்கன் வாசிக்கும் காட்சி அறிமுகமாகிறது, அந்த இசை சிலிர்ப்பூட்டக்கூடியது,  படத்தின் முக்கியக் கதாபாத்திரமாக பாலசந்தரே நடித்திருக்கிறார், அவரது நடிப்பு அலாதியான ஒன்று, முகபாவங்களை வெளிப்படுத்தும் முறையும். நடையில் அவர் காட்டும் நளினமும். பேசும் போது ஸ்டைலான ஆங்கிலம் கலந்து பேசும் முறையும், உடையமைப்பும் யார் சாயலும் அற்ற தனிவகை நடிப்பாகவே இருக்கிறது, பொம்மை படத்தின் ஆரம்பக் காட்சியில் அவர் நடந்து வந்து  தனது சிங்கப்பூர் பயணத்தை பற்றி பேசும்போதே படம் வித்யாசமான ஒன்று என்று  நமக்கு    புரிந்துவிடுகிறது.

பொம்மை படத்தில் ஐம்பது வருஷத்தின் முந்தைய சென்னை நகரின் காட்சிகளை காண்பது வேடிக்கையாக இருக்கிறது, கூட்டமேயில்லாத விமானநிலையத்தில் பயணிகளை மலர்கொத்து தந்து வழியனுப்ப வந்தவர்கள், அன்றைய டாக்சிகள். பரபரப்பில்லாத சாலைகள்,  அக்கால பேஷன் உடைகள், உணவகங்கள். சாலையோர மனிதர்கள், சென்னையின் கடந்தகாலத்தை காண்பது பிரமிப்பாக  இருக்கிறது.

படத்தின் பின்ணணி இசை சிறப்பானது, எந்த இடத்தில் இசையே இல்லாமல் நிசப்தமாக விட வேண்டும் என்பதை அவர் சரியாக உணர்ந்திருக்கிறார், ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய படங்களில் காணப்படுவது போல  செயற்கையான பின்னணி இசையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இசைக்கோர்ப்பு அவருடையது.

ஒருபோதும் பாலசந்தர் டூயட் பாடல் காட்சிகளை  பயன்படுத்தவேயில்லை, பி.சுசீலா பாடி விஜயலட்சுமி நடனமாடியுள்ள எங்கோ பிறந்தவராம் பாடலையும், தத்தி தத்தி நடந்து செல்லும் தங்கபாப்பா பாடலையும் எஸ்.பாலசந்தர்  படமாக்கிய விதம் மாறுபட்டதாகவே இருக்கிறது.

பொம்மை படத்தில் எனக்கு மிகவும் பிடித்த  நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற ஜேசுதாசின் பாடல் உள்ளது,  இதுத்தான் அவருக்கு முதல் தமிழ்  பாடல். சாலையோரப் பிச்சைக்காரன் பாடும் பாடலது. பாடலின் வரிகள் கதையோடு இணைந்து செல்லும் அதே வேளையில் ஆழ்ந்த துயரத்தின் வெளிப்பாடாகவும் இருக்கும், அப்பாடலை ஜேசுதாஸ் பாடும் முறை கேட்பவரை மெய்மறக்க செய்துவிடும்.




இப்படத்தின் திரைக்கதை அமைப்பு ஓபன்  சஸ்பென்ஸ் வகையைச் சேர்ந்தது, பார்வையாளர்களுக்கு பொம்மையில் வெடிகுண்டு இருப்பது தெரிந்துவிட்டது, ஆனால் கதாபாத்திரங்களுக்குத் தெரியாது, எந்த நிமிஷம் குண்டு வெடிக்கப்போகிறது என்ற மர்மத்தை விறுவிறுப்பாக கையாளும் விதத்தில் திரைக்கதையமைப்பின் உச்சநிலையை உருவாக்கிக் காட்டுகிறார் பொம்மை படத்தின் இறுதி காட்சியில் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு பாலசந்தர் தனது படத்தில் பணியாற்றிய அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களையும் அறிமுகப்படுத்துகிறார், இன்று வரை யாரும் மேற்கொள்ளாத புதிய முயற்சியது.




தமிழ் ஊடகக்கலை பயிற்சியில் மௌனப்படங்களை பற்றி தனிப்பாடம்  இருக்கிறது. சார்லி சாப்ளின், பஸ்டர் கீட்டன், கிரிபித், என்று நூறு ஆண்டுகளுக்கு முந்திய அமெரிக்க சினிமாவின் சலனப்படங்களை மட்டுமே  நம் தமிழ் ஊடகக்கலை மாணவர்களுக்கு சொல்லிதறபடுகிறது.

ஐம்பது ஆண்டுகாலத்திற்கு முந்திய தமிழ்சினிமாவை பற்றி அதிகம் சொல்லித்தருவதில்லை .நமது முன்னோடிகளை நாம் புறக்கணிக்கிறோம், அவர்களை உதறித் தள்ளிவிட்டு எங்கிருந்தோ நமது அடையாளங்களை உருவாக்கிக் கொள்ள முயற்சிக்கிறோம் என்பது தான் இன்றுள்ள நமது பிரச்சனை என்பது வருத்ததிற்குரியது.

தமிழ்சினிமாவின் தனித்துவமான இயக்குனர்கள் குறித்து இன்றுவரை விரிவான ஆய்வுகளோ. முறையான கட்டுரைகளோ வெளியாகவேயில்லை, அப்படி வந்தால்  அந்தப் பட்டியலில் தனித்து ஒரு நூல் எழுதுமளவு முக்கியமானவர், தமிழ்த் திரைப்பட உலகில் வலம் வந்த அறிவுஜீவிகளில் ஒருவர் என்றும் இயக்குனர் எஸ் பாலசந்தர் அவர்களை சொல்லலாம் .

                                                என்றும் அன்புடன் ,
                           ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV
 

Wednesday, December 21, 2011

ஸ்ரீ ஸ்ரீநிவாச ராமனுஜன்




                    (December 22, 1887 – April 26, 1920)

 

ஈரோட்டில் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி 1887 வியாழக் கிழமை, மார்கழி 9ஆம் நாள்,  சீனிவாசன், கோமளத்தம்மாள் தம்பதியருக்கு ராமானுஜன் மகனாக பிறந்தார் .கோமளத்தம்மாள் ராமனுஜத்தை "சின்னச்சாமி" என்றுதான் அழைப்பார்.

 

கோமளத்தம்மாள் கோவிலில் பஜனை செய்வது வழக்கம். டிசம்பர் 1889ஆம் வருடம் அவர் பஜனைக்கு வராதது கண்டு பஜனைக் குழுவில் ஒருவர் வந்து பார்க்க, குழந்தை ராமனுஜனுக்கு அம்மை நோய் கண்டிருப்பதை அறிந்தார். தன் வாழ்நாள் முடிய அம்மை வடுவை ராமனுஜன் தாங்க வேண்டியதாயிற்று. 


ராமானுஜத்திற்குப் பிறகு நவம்பர் 1891ல் பிறந்த தங்கை இரண்டு மாதத்திற்குள்ளும், ஜுன் 1894ல் பிறந்த தம்பி ஒரு வருடத்திற்குள்ளும் காலமனார்கள். அதன் பிறகு, தம்பிகள் இருவர், 1898ல் லக்ஷ்மிநரசிம்மனும்,1905ல் திரு நாரயனனும் பிறந்தனர். 

ராமானுஜன் மூன்று வயது ஆகியும் பேசாததால், கோமளத்தம்மாள், குழந்தையுடன், காஞ்சீபுரத்திலிருந்த தன் தகப்பனார் வீட்டிற்கு வந்தார்.அங்கு, ராமானுஜத்திற்கு அக்ஷராப்பியாசம் செய்து வைத்தனர். ராமானுஜன் விரைவில் தமிழ் எழுத்துக்களைக் கற்றுக்கொண்டார். 


சம்பிரதாயப்படி அக்டோபர் 1ஆம் தேதி 1892ல் விஜயதசமி அன்று ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார். 1894ஆம் வருடத்திலிருந்து 1895ற்குள் இரண்டு மூன்று பள்ளிக்கூடம் மாறினார், காஞ்சீபுரம்,  சென்னை, கடைசியாகக் கும்பகோணம் என்று கும்பகோணம் காங்கயன் பிரைமரி பள்ளியில் படிக்கும் பொழுது, நவம்பர் 1897, 10வயதான ராமானுஜன் ஆங்கிலம், தமிழ், கணக்கு, பூகோளம், இவற்றில் ஜில்லாவில் முதன்மையாகத் தேறினார்.

மூன்றாம் ஃபார்ம் ( எட்டாம் வகுப்பு) படிக்கும்பொழுது, ஒரு நாள் உபாத்தியாயர், ஒரு எண்ணை அதனாலேயே வகுத்தால் ஒன்று விடையாக வரும் என்று சொல்லி உதாரணமாக மூன்று மாம்பழத்தை மூன்று பேருக்குப் பங்கிட்டு கொடுத்தால் தலைக்கு ஒன்று கிடைக்கும். 1000 பழத்தை 1000 பேருக்குக் கொடுத்தால் ஒவ்வொருவருக்கும் ஒன்று கிடைக்கும் என்றார். அதைக்கேட்ட ராமானுஜன் பூஜ்யத்தை பூஜ்யத்தால் வகுத்தால் ஒன்று வருமா? இல்லாத பழத்தை, இல்லாத ஆட்களுக்குப் பங்கிட்டால் ஒவ்வொருவருக்கும் பழம் ஒன்று கிடைக்குமா? என்று கேட்டாராம். 

கும்பகோணம் சாரங்கபாணி சன்னதித் தெருவில் ராமானுஜத்தின் வீடு இருந்தது. ராமானுஜத்திற்கு 11 வயது இருக்கும் பொழுது திருச்சிக்காரர் ஒருவரும், திருநெல்வேலிக்காரர் ஒருவரும், இவர்கள் வீட்டில் தங்கி காலேஜில் படித்தார்கள். அவர்கள் ராமனுஜத்திற்குக் கணக்கு சொல்லிக்கொடுத்தனர். சிறிது காலத்திலேயே அவர்களுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் ராமானுஜன் கற்றுக்கொண்டார். மேற்கொண்டு சொல்லித்தர இயலாததால் காலேஜ் புத்தக சாலையிலிருந்து எஸ்.எல். லோனியின் திரிகோணமிதி புத்தகம் கொண்டு வந்து தந்தனர். இது பெரிய படிப்பிற்கு உடையது. (With problem in advanced realm). ராமனுஜன் 13 வயதிற்குள் அதில் தேற்ச்சி பெற்றுவிட்டார். 

1900ஆம் ஆண்டு வடிவியல் சார்ந்த மேலும் எண் கணக்கியலிலும் தானே கணக்குப் போட ஆரம்பித்தார் (In 1900 he began to work on his own on mathematics summing geometric and arithmetic series.) 1902ல் அவருக்கு, க்யூபிக் சமன்பாடு கணக்குகள் போடுவது கற்றுக்கொடுக்கப்பட்டது. அதன் பிறகு quartic சமன்பாடு கணக்குகளைப் போட சொந்தமாக ஒரு முறை கண்டுபிடித்தார். quintic சமன்படு கணக்குக்கு முறை கண்டுபிடிக்கும் முயற்ச்சியில் தோல்வியுற்றார். 

1904ல் ராமானுஜர் தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டார், series (1/n) பற்றி ஆரய்ந்தார், மேலும் Euler's constantஐ 15 தசம ஸ்தானத்திற்கு கணக்கிட்டார். Bernoulli numbers பற்றிப் படித்தார். இது அவரே கண்டுபிடித்ததாகும்.
1904ல் ராமனுஜந்த்திற்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. கணக்கைத்தவிர மற்ற பாடங்களில் அவர் அக்கரை காட்டாததால் அந்த உதவி அடுத்த வருடம் புதுப்பிக்கப்படவில்லை. மறுபடியும் பணக்கஷ்டம். இதனால் யாரிடமும் சொல்லாமல் விசாகப்பட்டணத்திற்கு ஓடிவிட்டார். அங்கும் கணக்கைத் தொடர்ந்து படித்தார்.  Hyper Geometric Series - ''உயர் ஜியாமெட்ரிச் சீரினம்'' பற்றிய Integrals - “முழுமைப்பாடுகள்” Infinite Series -'' முடிவில்லாச் சீரினங்கள்'', Continued Fractions - ''தொடர்ப் பின்னங்கள்'' போன்றவை பற்றி அவர் ஆய்வுகள் செய்தார்.

கணிதத் துறையினர் இன்னும் அவரது கணித மேன்மையின் முழுத் தகுதியையும் அறிய வில்லை, அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் University of Illinois கணித வல்லுநர், Bruce C. Berndt ராமானுஜத்தின் கணிதக் குறிப்பு நூலைத் தொகுத்து வெளியிடும் பொறுப்பை மேற்கொண்டுள்ளார்.


1906ல் சென்னை வந்து பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்தார். அவருடைய குறிக்கோள் ஆர்ட்ஸ் பரிட்சை பாஸ் செய்து மதராஸ் சர்வகலாசாலையில் சேரவேண்டும் என்பது. தேர்வில் கணிதம் தவிர மற்ற பாடங்களில் தோல்வியடைந்தார். இதனால் அவர் சர்வகலாசலையில் சேர முடியவில்லை. 

ஆனால் கணித ஆராய்ச்சியை மட்டும் விடவில்லை. 1908ல் continued fractions and divergent series என்பதைப் படித்தார்.14ம் தேதி ஏப்ரல் 1909ல் அவருக்கு ரணசிகிச்சை நடந்தது. அவர் உடல் நலம் தேற சிறிது காலம் ஆகியது.ராமானுஜனுடைய வாழ்வையே புரட்டி போட்ட புத்தகம் ஜி.எஸ்.கார் எழுதிய  A Synopsis Of Results in Pure and Applied Mathematics ஆகும் இப்புத்தகத்தில் ஆய்லர், காஷி, பெர்னோலி, டயபான்டே,டெஸ்கார்ட்ஸ்.பூயூரியர், லெக்ராஞ்சி போன்ற கணிதமேதைகளின் சமன்பாடுகள் கொடுக்கப்பட்டு இருந்தன. 14ஆம் தேதி ஜூலை 1909 எஸ். ஜானகி அம்மாள் என்னும் 10 வயதுப் பெண்ணை மணந்தார். Journal of the Indian Mathematical Societyக்குக் கணக்குகள் அனுப்புவதும், விடைகள் தருவதும் வழக்கமாகக் கொண்டார். 1911ல் Bernoulli numbers பற்றிய அவருடைய ஆராய்ச்சிக் கட்டுரை Journal of the Indian Mathematical Societyயில் வெளிவந்ததும் அவருடைய திறமை எல்லோருக்கும் தெரியவந்தது. 

1912ஆம் வருடம் மார்ச் 1ஆம் தேதி, E W Middlemast the Professor of Mathematics at The Presidency College in Madras, அவர்களின் சிபாரிசினால் மதராஸ் துறைமுக அலுவலத்தில் (Madras Port Trust) வேலையில் சேர்ந்தார். மதராஸ் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக இருந்த CLT Griffith, ராமானுஜத்தின் திறமையை அறிந்தவர். லண்டன் சர்வகலாசையில் கணிதப் பேராசிரியராக இருந்த MJM Hill என்பவருக்கு 12-11-1912 ல் ராமானுஜத்தைப் பற்றி ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்துடன், ரமனுஜத்தின் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், 1911ல் Bernoulli numbers. பற்றி ராமானுஜன் எழுதிய கட்டுரையையும் இனைத்தார். MJM Hill ஊக்கமளிக்கும் வகையில் பதில் போட்டபோதிலும், மேற்கொண்டு அவர் ஒன்றும் செய்யவில்லை. ராமானுஜன் EW Hobson and HF Baker என்பவர்களுக்கும் கடிதம் எழுதினார். அவர்கள் இருவரும் பதில் அளிக்கவே இல்லை. GH Hardy என்பவருடைய Orders of infinity என்ற புத்தகத்தை ( 1910ம் வருடம் வெளியானது) பார்த்ததும் ஜனவரி 1913ல், GH Hardyக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் தன்னைப் பற்றி முழு விவரமும் கொடுத்திருந்தார். Hardy, மற்றும் ஒரு கணித பேராசிரியர் Littlewood என்பவருடன் சேர்ந்து, ராமனுஜன் எழுதிய தேற்றங்கள் [சான்றுகள் (proof) இல்லாதவை] யாவற்றையும் படித்தார். 

பிப்ரவரி 8ஆம் தேதி 1913, ஹார்டி, ராமனுஜத்திற்கு பதில் போட்ட்டார். உங்கள் முடிவுகள் தோராயமாக மூன்று பிரிவிகளுக்குள் அடங்குகின்றன. 

1. ஏற்கனவே தெரிந்தவை அல்லது தெரிந்த தேற்றங்கள் மூலம் சுலபமாக நிரூபிக்ககூடியவை.

2. எனக்கு தெரிந்த வரை சில புதியதும், அக்கறை ஏற்படுத்தக்கூடியவை, அதன் முக்கியத்தை விட, அதில் உள்ள ஆர்வமும், கடினமும்தான்.


3.சில முடிவுகள் புதியதாகவும், முக்கியத்வம் வாய்ந்ததாகவும் உள்ளன.



இந்தக் கடிதத்தினால் உற்சாகமடைந்த ராமானுஜன் ஹார்டிக்குத் தன்னுடைய் பொருளாதார நிலையை பற்றி எழுதி, உங்களிடமிருந்து ஆதரவாகக் கடிதம் வந்தால் எனகு ஸ்காலர்ஷிப் கிடைக்க உதவும் என்று தெரிவித்தார். 

1913ல் மதராஸ் சர்வகலாசலை ராமனுஜத்திற்கு இரண்டு வருடம் ஸ்காலர்ஷிப் கொடுத்தது, ஹார்டி (கம்பருக்கு சடையப்ப வள்ளல் போல் ராமனுஜத்திற்கு இவர்) ராமானுஜத்தை Trinity college cambridhgeக்கு அழைத்துக்கொண்டார். 

17ஆம் தேதி மார்ச் மாதம் 1914 இங்கிலாந்துக்குக் கப்பலில் புறப்பட்டார். ஏப்ரல் 14ஆம் தேதி 1914 லண்டன் போய் சேர்ந்தார். E H Neville என்பவர் ராமனுஜத்தைச் சந்தித்து, நான்கு நாட்கள் லண்டனில் தங்க வைத்து, பிறகு கேம்ப்ரிட்ஜுக்கு அழைத்துச் சென்றார். இரண்டு வாரங்கள் Neville வீட்டில் தங்கிவிட்டு பிறகு ஏப்ரல் 30ஆம் தேதியிலிருந்து Trinity College ரூமில் தங்கலானார். அவர் வெஜிடேரியன் ஆனதால் ஆரம்பத்திலிருந்தே அவருக்கு சாப்பாட்டு விஷயத்தில் சிறிது கஷ்டமாக இருந்தது. இந்த சமயம் முதல் மஹா யுத்தம் ஆரம்பமானதால் விஷேஷமான ஆகாரங்கள் கிடைப்பது சிரமமாகிவிட்டது. அதனால் அவர் உடல் நலம் கெட்டது. 

ஹார்டிக்கு ஒர் விஷயம் சங்கடமாக இருந்தது. அதாவது, ராமானுஜம் கணக்குப் போடுவதிலும் தேற்றங்கள் நிரூபிப்பதிலும் வல்லவராக இருந்தாலும், அதற்கான அடிப்படைப் படிப்பு இல்லையே என்று. ஆகையால் Littlewood என்பவரை, ராமானுஜத்திற்குக் கஷ்டமான கணக்கு முறைகளைக் கற்றுக்கொடுக்கும்படிக் கேட்டுக்கொண்டார். ஆனால் Littlewoodக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. பாடத்தை ஆரம்பித்தால் போதும், ராமானுஜன் தன் வழியில் வாதாட ஆரம்பித்து விடுவார். முதல் உலக யுத்ததில் சேவை செய்ய,Littlewood அழைக்கப்பட்டதால் கணக்கு கற்பிப்பது நின்று விட்டது. தகுந்த படிப்பு (proper qualification), இல்லாத போதிலும் ராமானுஜம் கேம்ப்ரிட்ஜ்ஜில் 1914ஆம் வருடம் அனுமதிக்கப்பட்டார். 16-3-1916ல் ராமனுஜன் கேம்ப்ரிட்ஜ் சர்வகலாசாலையிலிருந்து Bachelor of Science by Research (the degree was called a Ph.D. from 1920) பட்டம் பெற்றார். ஏழு ஆராய்ச்சிக் கட்டுரைகள் Highly composite numbers என்பது பற்றி இங்கிலாந்தில் பிரசுரமாயின. 

1917ல் ராமானுஜன் நோய்வாய்ப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்தார்.
 நோயுற்று சிகிச்சை பெற்று ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறார். அவரை பார்க்க, ஹார்டி வருகிறார். ஆஸ்பத்திரியில் ஒரு நோயாளியை பார்க்க போனால் நாம் என்ன செய்வோம்? நலம் விசாரிப்போம். ஹார்டி என்ன செய்த்தார் தெரியுமா ?  ராமானுஜத்தை பார்த்த உடனேயே, “ நான் ஒரு டாக்சியில் வந்தேன் அந்த டாக்சியின் நம்பர் 1729 , எனக்கு ஏனோ அந்த நம்பர் பிடிக்கவில்லை” என்று கூறுகிறார்! 

என்ன ஒரு அற்புதமான நலம் விசாரிப்பு! 

அத்ற்கு நாமாக இருந்தால் கோபமாக  ஏதாவது சொல்ல்லியிருப்போம்
ஆனால் ராமானுஜம் உடனே , உடனே என்றால் உடனே- “ ஏன் ஹார்டி அப்படி சொல்கிறீர்கள்? அது ஒரு அற்புதமான எண். It is that smallest number which can be presented in two different ways as addition of two cubes : ( 10 to-the-power 3 + 9 to-the-power 3 ) and ( 12 to-the-power 3 + 1 to-the-power 3 ).” என்று கூறினாராம்
இது அவரது மேதாவிலாஸத்திற்கு அவர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சிறு நிகழ்ச்சி  .செப்டம்பர் மாதம் சிறிது முன்னேற்றம் தெறிந்தது. பல நர்ஸிங் இல்லங்களில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். 


பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி,1918 fellow of the Cambridge Philosophical Society ஆக தேர்ந்தெடுக்கப்ப்ட்டார். மூன்று நாட்களுக்குப் பிறகு அவருடைய பெயர் fellow of the Royal Society of London பட்டியலில் , பரிந்துரைக்கப்பட்டது அவர் பெயரைப் பரிந்துரைத்தவர்கள் Hardy, MacMahon, Grace, Larmor, Bromwich, Hobson, Baker, Littlewood, Nicholson, Young, Whittaker, Forsyth and Whitehead. ஆவர். 2-5-1918 அவருடைய தேர்வு உறுதி செய்யப்பட்டு 10-10-1918ல் Fellow of Trinity College Cambridge, ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

27-2-1919 ராமானுஜன் தாயகத்திற்குப் புறப்பட்டார். மார்ச் 13ஆம் தேதி இந்தியா வந்து சேர்ந்தார். மீண்டும் நோயின் தாக்குதல் தீவிரமாயிற்று படுத்த படுக்கையானார் ராமானுஜன் மரணபடுக்கையில் இருந்த போதும் மாக்-தீட்டா மற்றும் மாடுலர் ஃபங்ஷன் பற்றியா ஆராய்ச்சி குறிப்புகளை தன் நண்பர் ஹார்டிக்கு அனுப்பினார்.

1920 ஏப்ரல் 26 ஏழ்மையோடும் , கடுமையான நோயோடும் இறுதிவரை போராடிய ராமானுஜன் 33 வயது முடிவதற்குள்ளே மரணத்தை தழுவினார் ஆம் இராமானுஜன் இறந்துவிட்டாலும் அவரது  கணித சமன்பாடுகளை நிரூபணம் செய்ய இன்றைய சூப்பர் கம்பியூட்டர்கள் கூட தடுமாறுகின்றன . இராமானுஜத்தின் கணித சமன்பாடுள் தலைமுறைகள்தோறும் தமிழனின் திறனை உலகிற்கு கூறிக்கொண்டே போகும்.



               "ஸ்ரீ வைஷ்ணவன்"ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV

Friday, December 9, 2011

சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரி


                        சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி
                           (10 டிசம்பர் 1878 - 25 டிசம்பர் 1972),

தமிழகத்தில் அப்போதைய சேலம் மாவட்டத்தில்  இருந்த தொரப்பள்ளி கிராமத்தில் சக்கரவர்த்தி வேங்கடார்யா, சிங்காரம்மா தம்பதியருக்கு 10 டிசம்பர் -1878ல் 3-வது மகனாக பிறந்தார். வாழ்க்கைத்துணைவர் அலர்மேலு மங்கம்மா.

ராஜாஜி என்றும் சுருக்கமாக சி.ஆர் என்றும் சேலத்து மாம்பழம் என்ற செல்லப் பெயர் கொண்டும் அழைக்கப்பட்டவர். சுதந்திரப் போராட்ட வீரர், வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர்.

இராஜாஜி ஓசூரில் அரசுப் பள்ளியிலும் பின்னர் பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியிலும் சென்னை பிரசிடென்சி கல்லூரியிலும் படிப்பை முடித்தார். 1900இல் தமது வழக்கறிஞர் தொழிலை நடத்தி வந்தார்.

சுதந்திரப் போராட்ட வீரராக :-


சுதந்திர வேட்க்கை கொண்டு ரௌலத் சட்டத்திற்கெதிரான இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம் போன்றவற்றில் ஈடுபட்டார்.

1930ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையை ஒட்டி வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடத்தி சிறை சென்றார்.

பிரிட்டன்  ஜெர்மனிடன் போர் தொடுத்த வேளையில் காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்ட முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.போர்க்காலத்தில் பிரிட்டனுக்கு  ஒத்துழைக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது.

இந்திய சுதந்திரத்திற்கு பின் பாகிஸ்த்தான் என்ற தனி நாடு வேண்டும் என போர்க்கொடி தூக்கிய முகமது அலி ஜின்னாவுடனும் அகில இந்திய முசுலிம் லீக்குடன் பேச்சுவார்த்தை நடத்தி  முடிவு காண முக்கிய பங்காற்றினார் இவரது திட்டம் ராஜதந்திரி  சி ஆர் பார்முலா என அழைக்கப்பட்டது.

அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர்.

அரசியல்வாதியாக :-

இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து கட்சியில் பெரும் பங்கு வகித்தார்.

காங்கிரசின் சோசலிச நோக்கிற்கும் எதிர்ப்பு தெரிவித்து ஜவகர்லால் நேருவுடன் கருத்து வேறுபாட்டின் காரணமாகவும் காங்கிரசிலிருந்து விலகினார்.

1962ல் ஸ்வதந்த்ராக் கட்சியினைத் துவங்கினார். காங்கிரசின் பெர்மிட்-கோட்டா ஆட்சிக்கு மாறான தாராளமயம் கொள்கையாகக் கொண்டதாக ஸ்வதந்த்ராக் கட்சி விளங்கியது.

1962, 1967 மற்றும் 1972 பொது தேர்தல்களில் போட்டியிட்டார்.

1967 தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிற்கு எதிரான அணியை ஒருங்கிணைத்து தமிழக அரசியலில் முதன்முறையாக காங்கிரசல்லாத ஆட்சி மலர துணை நின்றார்.
அவருடன் கூட்டணி கண்ட திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்த  சி. என். அண்ணாதுரை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

நாடாளுமன்றபொதுதேர்தலிலும் ஸ்வதந்த்ராக் கட்சி 45 இடங்களைப் பிடித்து முதன்மை எதிர்கட்சியாக விளங்கியது.

இராஜாஜி வகித்த பதவிகள் :-

சேலம் நகராட்சி உறுப்பினராகவும் பின்னர் நகரதந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1937ஆம் ஆண்டு மதராச மாகாணத்தின் முதன்மை மந்திரியாக பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார்.

1946ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில்,வழங்கல்,கல்வி மற்றும் நிதித் துறை அமைச்சராக பணியாற்றினார்.

1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுனராக பணியாற்றினார்.

1948 முதல் 1950 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும்பணியாற்றினார்.

1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

1952 -54 காலகட்டத்தில் கேரளம், தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகம் இணைந்த பகுதிகளைக் கொண்ட சென்னை மகாணத்தின்  முதலமைச்சராகப் பணியாற்றினார்.

1952 முதல் 1953 வரை சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக  பதவி வகித்தார். அப்போது அவர் இந்து கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய அனுமதிக்க 1939 ல் இராஜாஜி "Temple Entry Authorization and Indemnity Act" என்னும் சட்டத்தை கொண்டு வந்தார். அவர் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்திற்காக மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளானார்.

இராஜாஜி மதராஸ் மாநிலத்தின் முதல்வராக ஆட்சி செய்த காலத்தில் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தினார். அந்த மதுவிலக்குக் கொள்கை 30 ஆண்டுகளுக்குப் பின்னர்  முதல்வர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் தான் விலக்கிக் கொள்ளப்பட்டது.

ராஜாஜி அவர்கள் எழுத்தாளரா :-


தமது எழுத்தாற்றலால் ஆங்கில இலக்கியத்திற்கு சிறப்பாக பங்களித்துள்ளார். தமிழிலும் இராமாயணம் மற்றும் மகாபாரதம் காவியங்களை மொழிபெயர்த்துள்ளார்.

கல்கி மற்றும் இரசிகமணி டி.கே.சியுடன் இணைந்து குற்றாலத்தில் இலக்கிய ஆய்வுகள் நடத்தினார்.

புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடலான "குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா" இவர் இயற்றிய பாடலே.

ராஜாஜி அவர்கள் பெற்ற விருதுகள் :-


1954ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்றார். நம் நாட்டின் மிக உயரிய தேசிய விருதான பாரதரத்னா முதன்முதலில் இவருக்குத்தான் அளிக்கப்பட்டது.

1958ம் ஆண்டு இவரது "சக்ரவர்த்தி திருமகன்" காப்பியத்திற்காக  "சாகித்ய அகாடமி" விருது வழங்கப் பட்டது.

ராஜாஜி அவர்களின்  இறுதி காலம்  :-


ரத்தத்துடன் சிறுநீர் கலந்துவிடும் "யூரிமியா" என்ற நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக, 17_12_1972 அன்று சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் ராஜாஜி சேர்க்கப்பட்டார். தொடக்கத்தில் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டபோதிலும், பிறகு பின்னடைவு ஏற்பட்டது.

மூன்று நாட்கள் மரணத்துடன் போராடினார்.   டாக்டர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், குணம் ஏற்படவில்லை. டிசம்பர் 25_ந்தேதி மாலை 5_44 மணிக்கு தனது 95ம் வயதில் ராஜாஜி மரணம் அடைந்தார். உயிர் பிரியும்போது மகன் சி.ஆர்.நரசிம்மன், மகள்கள் நாமகிரி, லட்சுமி, பேரப்பிள்ளைகள், குடும்ப நண்பர் "கல்கி" சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் கதறி அழுதபடி இருந்தனர்.

அப்போதைய  தமிழக முதல்_அமைச்சர் கருணாநிதி, பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர் ஆகியோரும், அமைச்சர்களும், ஸ்வதந்த்ராக் கட்சி பிரமுகர்களும் கண் கலங்கிய படி அருகில் இருந்தனர்.


பெரியாருடன்  கொள்கைகளில் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் ராஜாஜி தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர். ராஜாஜியின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெரியார், மயானம் வரை சென்று அஞ்சலி செலுத்தினார். இராஜாஜியின் உடலிற்கு தீ வைக்கும் போது பெரியார் தேம்பித் தேம்பி அழுதது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கொள்கை ரீதியான தனது எதிரியாக திகழ்ந்த ராஜாஜி, பெரியாரின் மனதில் நாணயமான எதிரியாகவும் (அப்படித்தான் பெரியார் கூறியுள்ளார்), அதே நேரத்தில் அன்பு குன்றா நண்பராகவும் இருந்துள்ளார்.


நிகழ்வுகள் :-

 மூதறிஞர் ராஜாஜி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் தொரப்பள்ளியில் அவரது இல்லத்தை நினைவு இல்லமாகவும், உடல் அடக்கம் செய்யப்பட்ட சென்னை கிண்டியில் அவருக்கு நினைவு மண்டபமும்  தமிழக அரசு அமைத்துள்ளது. மேலும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழக அரசின் மண்டபத்திற்கு ராஜாஜி மண்டபம் என்று பெயர் சூட்டியுள்ளது.
                                              
                                                     என்றும் அன்புடன்,
                   "ஸ்ரீ வைஷ்ணவன்"ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV

Wednesday, November 2, 2011

வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியது.

சென்னை கோட்டூர்புரத்தில்  8 ஏக்கர் நிலப் பரப்பில் 180 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்ட அண்ணா நூலகத்தில் பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், குழந்தைகள் என பல தரப்பினருக்கும் பயன்படக்கூடிய நவீன கட்டமைப்புகள் உள்ளன. 



ஒரு நவீன நூலகம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கல்வியாளர்களின் கனவு குறிப்பிடத்தக்க அளவுக்கு நிறைவேற்றப்பட்ட கட்டிடமாகத் திகழ்கிறது.

12 இலட்சத்திற்கு மேற்பட்ட அறிவார்ந்த நூல்களையும்  1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய அரங்குகள், சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு, 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளன.

மாற்றுதிறனாளிகள் நூலகத்தில் எல்லா பகுதிகளுக்கும் சென்று பயன்படுத்தும் உள்கட்டமைப்பு கொண்டது என்பதும் இந்நூலகத்தின் சிறப்பு .


கடந்த சில மாதத்துக்கு முன்னர் வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரான கிலாரியே பார்த்து பெருமைப்பட்ட நூலகம் அது.
 
ஆசியாவிலேயே
இரண்டாவது பெரிய நூலகம் மற்றும் மிகச்ச்ச்சிறந்த நூலகங்களில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இது போன்ற பல  சிறப்புகொண்ட இந்த அண்ணா நூலகத்தை விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் என்றும் அந்த இடத்தில் உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனையாக (Super Specialty Paediatric Hospital) மாற்றி அமைக்கப்படும் என  ஜெயலலிதா அறிவித்துள்ளார் . 

குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவது என்பது வரவேற்கத்தக்கதே. ஒரு நூலகத்துக்கான கட்டிட அமைப்புக்கும் ஒரு குழந்தைகள் நல மருத்துவமனைக்கான கட்டிட அமைப்புக்கும் இடையிலான வேறுபாடுகளை அறியாதவர் போல் ஜெயலலிதாவின் நடிப்பு அபாரம்.

நூலகத்தின் உள்கட்டமைப்பு அனைத்தும்  முற்றிலுமாக இடித்து தான் மருத்துவமனை அமைக்க முடியும். உணர்ச்சி வசப்படுவதால் எதையும் சாதிக்க முடியாது.

நவீனத்துவத்தை நோக்கிய அறிவார்ந்த நூல்களையும் படித்தால் தான் நன்றாக அறிவும் வளரும். என்று ஒரு மாநிலத்தை ஆளும் முதலமைச்சருக்கு இது தெரியாதா?

மாறி வரும் கணினி  யுகத்துக்கு இணையாகவும், உலகத் தரத்திற்கு இணையாகவும் தமிழகத்தில் நூலகம் இல்லை என்ற குறையை நீக்கும் வகையிலும் கட்டப்பட்ட மிகப்பெரிய நூலகத்தை மருத்துவமனையாக மாற்றப் போகிறாராம்.


ஏன் மாற்றப் பார்கிறார் ? 2001 - 2006  ஜெயலலிதாவின் ஆட்சியின் போது  தலைமை செயலகம் கட்ட நினைத்த இடத்தில் நூலகத்தை உருவாக்கி கருணாநிதி தொடக்கி வைத்தார் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே . 

ஜெயலலிதாவால் கல்விச் சமூகத்திற்கு  எதிராக எடுக்கும்  இரண்டாவது  முட்டாள்தனமான முடிவு  இது.

முதலில் சமச்சீர் கல்வித் திட்டத்தை எதிர்க்கிறேன் என்று  மூக்குடைபட்டது  ஜெயலலிதா ஞாபகத்தில் இருக்கவில்லை போலும் ?

மறுபடியுமா வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது ?


இது ஜெயலலிதாவின் பைத்தியக்காரத் தனத்தை உலகுக்கு காட்டுவதாக  பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

ஜெயலலிதா இதுபோன்ற  சிறுபிள்ளைத் தனமான செயற்பாடுகளை அடியோடு விட்டு விடுவது அவருக்கும் அவரது கட்சிக்கும் நன்மை .

ஜெயலலிதா இம்முறை அறிவார்ந்த கல்வியாளர்களின் எதிர்ப்பை நிச்சயம் சம்பாதிப்பார். கல்வியோடும் கல்வியாளர்களுக்கும் எதிரான  முடிவுகளை டுப்பதை ஜெயலலிதா கட்டாயம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே 
அனைவரின் எதிர்பார்ப்பு . 

                                                                          என்றும் உங்கள் ,
                                                              ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV . 



Monday, October 10, 2011

பாபநாசம் சிவன்


பாபநாசம் சிவன்
(செப்டம்பர் 26, 1890 - அக்டோபர் 10, 1973)

 தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள போளகம் என்னும் ஊரில் ராமாமிருத ஐயர் - யோகாம்பாள் அம்மாள் ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பாபநாசம் சிவன் பிறந்தார்.

இவரது இயற்பெயர் ராமசர்மன். பெற்றோர் இவரை ராமைய்யா என அழைத்தனர். பாபநாசம் சிவன் என்னும் பெயரானது இவருக்கு தஞ்சாவூரில் உள்ள கணபதி அக்கிரகாரத்தில் உள்ளவர்கள் இட்ட பெயர்.

1912 இல் பாபநாசம் சிவன் அதிகாலையில் (வைகறையில்) சிவன் கோயிலின் முன் நின்று அரும் பொன்னே மணியே என்று உருகி நாள்தோறும் பாடியதால் சிவபெருமானே கைலாசத்தில் இருந்து இளைஞர் வடிவம் கொண்டு இரங்கிவந்ததாகப் போற்றி புகழ்ந்ததின் காரணமாக இப்பெயர் பெற்றார்.

கர்நாடக சங்கீத மும்மூர்திகளுக்குப் பிறகு வந்த இசைப்பாடல்கள் இயற்றியவர்களில் பாபநாசம் சிவன் முக்கியமானவர் அவர் கர்நாடக இசையில் பல இராகங்களில் 2500 க்கும் அதிகமான கிருதிகளை இயற்றி  உள்ளார்
 
பாபநாசம் சிவன் பாடல்களை எழுதும்போதே அவற்றிற்கான கர்நாடக சங்கீத மெட்டுக்களை அமைத்துவிடும் திறனையும்  இவருக்கு கலைமகள் தந்திருந்ததாள் .

அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர், முசிரி சுப்பிரமணிய ஐயர், செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், ஜி.என். பாலசுப்பிரமணியம், மதுரை மணி ஐயர் முதலான புகழ்பெற்ற அந்தகால கர்நாடக சங்கீத வித்வான்கள் முதல் இன்றைய ஸுதா ரகுநாதன் ,உன்னி கிருஷ்ணன் , மஹதி  வரை அனைவரும் தங்கள் இசை நிகழ்ச்சிகளில் (கச்சேரிகளில்) பாபநாசம் சிவன் பாடல்களைப் பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பாபநாசம் சிவன் அவர்கள் 10 ஆண்டுகள் உழைத்து 1952ல் வடமொழி சொற்கடல் (சம்ஸ்கிருத பாஷா சப்த சமுத்ரா) என்னும் நூலை இயற்றினார்.

இவருடைய கடைசி ஆக்கங்களாக இராமாயணத்தைச் சுருக்கி 24 இராகங்களில் 24 பாடல்களாக ஸ்ரீ ராம சரித கீதம் என்னும் நூலையும்,. அதே போல காரைக்கால் அம்மையார் சரிதம் என்னும் நூலையும் இயற்றினார் .

பாபநாசம் சிவன் அவர்கள் கிருதி, வர்ணம், பதம், இசைநாடகங்கள், ஜாவளி ஆகிய பல இசை வடிவங்களிலும் இயற்றியுள்ளார். இவருடைய ஆக்கங்களை ஆறு தொகுப்புகளாக இவருடைய மகள் முனைவர் ருக்மணி ரமணி அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

 பாபநாசம் சிவன் அவர்கள் பெற்ற  
விருதுகளும்,பட்டங்களும்:

இந்திய அரசு பத்ம பூஷன் பட்டம் அளித்துப் பெருமை செய்தது.

தமிழ் இசைச் சங்கம் இசைப் பேரறிஞர் பட்டம் அளித்தது.

1950ல்  சங்கீத சாகித்ய கலா சிகாமணி
என்னும் பட்டத்தை இந்திய பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி அளித்தது.

 1971ல் மியூசிக் அக்காடமி சங்கீத கலாநிதி பட்டம் அளித்தது.






Thursday, October 6, 2011

விவாஹத்தின் போது என்ன ? என்ன ? ராகங்கள் வாசிப்படுகிறது




1.) மாப்பிள்ளை அழைப்பின்  பொழுது
     1.கல்யாணி; 2.சங்கராபரணம்


2.) மாப்பிள்ளை வரும்பொழுது
    3.கரகரப்ரியா; 4.காம்போதி;5,தோடி--


3.) நிச்சயதார்தம்
     6.கானடா; 7.அடாணா 8. பியாகடை


4.) கல்யாணத்தன்று காலை
      9. கேதாரம்; 10. பூபாளம்; 11.பிலஹரி


5.) முகூர்த்தத்திற்கு முன்பு
      12. தன்யாசி; 13. நாராயணி


6.) முகூர்த்தம் நடக்கும்பொழுது
      14. நாட்டைக்குறிச்சி


7.) மாங்கல்யம் கட்டும் சமயத்தில்
     15. ஆனந்த பைரவி.

ஸ்டீவ் ஜாப்ஸ்



                                                         (24 -2 - 1955    5 -10 - 2011)


உலகின் பிரபல கணினித் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான, ஆப்பிள் நிறுவனத்தை கூட்டாக உருவாக்கியவர்களில் ஒருவரான, ஸ்டீவ் ஜாப்ஸ் ( 56 வயது)   சுமார் 7 வருடங்கள் புற்று நோயுடன் போராடி வந்த ஸ்டீவ் ஜாப்ஸ் புதன் அன்று (நேற்று  இரவு)  அவர் காலமானதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது.

ஸ்டீவ் ஜாப்ஸின் மரணத்தை கண்டு  தொழில்நுட்ப உலகே அதிர்ந்து  நிற்கிறது. மேலும் ஜாப்ஸின் மரணசெய்தி ஆப்பிள் தொழில்நுட்ப பயனாளிகளையும்  மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


ஆப்பிள் மேக் கணினி,ஐ-பாட், ஐ-போன், ஐ-பேட் போன்ற நுட்பமான தொழில்நுட்பங்களைக் கொண்ட கருவிகளை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய முயற்சிகளுக்கு அவர் தலைமைத்துவம் முக்கியமானதாக இருந்தது.
ஜாப்ஸின் அறிவு, உற்சாகம் மற்றும் தொழிலில் அவர் காட்டிய ஆர்வம் ஆகியவைதான், இந்த நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உந்துதலாக அமைந்தன என்று , ஆப்பிள் நிறுவனம் கூறியது.


ஆப்பிள் நிறுவனம் சிறந்த படைப்பாற்றல் மிகுந்த உலகின் மிக ஆச்சரியமான மனிதனை இழந்துவிட்டதாக அதன் இணையத்தளத்தில் ஸ்டீவ் ஜாப்ஸை கெளரவப்படுத்தியிருக்கிறது.

ஸ்டீவ் ஜாப்ஸின் மரணம் குறித்து பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக இணைய தளங்களில் அஞ்சலிக் குறிப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. சீனவில் ட்விட்டருக்கு இணையான சமூக இணைய தளம் ஒன்றில், அவரது மரணம் குறித்து 5 கோடிக்கும் மேலான அஞ்சலிக் குறிப்புகள் பதியப்பட்டுள்ள்ன.



ஸ்டீவ் ஜாப்ஸ் நமது வாழ்க்கையை மாற்றியவர், ஒட்டுமொத்தமாக பல தொழிலக்ளுக்கு புது அர்த்தம் தந்தவர் என்று தமது அஞ்சலியில் அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பிட்டார்.அவரது மரணம் குறித்து அவர் கண்டுபிடித்த கருவியிலேயே உலகில் பெரும்பாலோனோர் தெரிந்து கொண்டனர் என்பதைவிட அவருக்கு பெரிய அஞ்சலி எதுவும் இருக்க முடியாது என்றும் ஒபாமா கூறினார்.


ஆப்பிள் நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களின்  தலைவர்கள் மற்றும் தொழில்துறை சகாக்களிடமிருந்தும் அஞ்சலிகள் வந்திருக்கின்றன.


மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவியர்களில் ஒருவரான, பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் செலுத்திய தாக்க்ததைப் போல உலகில் வேறொருவரைக் காண்பது அபூர்வம் என்றார்.


பேஸ் புக் இணைய தளத்தின் நிறுவனரான, மார்க் ஸுக்கர்பெர்க், தனது பேஸ் புக் பக்கத்தில், ஸ்டீவ் ஜாப்ஸை தனது ந்ண்பர் மற்றும் ஆலோசகர் என்று குறிப்பிட்டு, " நாம் ஒன்றை உருவாக்குவதன் மூலம் உலகை மாற்ற முடியும்ென்று காட்டியதற்கு நன்றி" என்று கூறியிருக்கிறார்.


ஸ்டீவ் ஜாப்ஸை, தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் ஐன்ஸ்டீனோடு ஒப்பிட்டு புகழஞ்சலி செலுத்தினார் நியூ யார்க் மேயர் மைக்கேல் புளூம்பர்க்.


 அவரின் வாழ்க்கை குறிப்பு ;



1955 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ல் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் பிறந்த ஸ்டீவ் ஜாப்ஸ், அருகில் உள்ள ஒரு ஊரை சேர்ந்த தம்பதியரால் பிறந்த ஒரு வார காலத்திலேயே தத்தெடுக்கப்பட்டார்.

பள்ளி படிப்பின்போதே கம்ப்யூட்டர் விவகாரங்களில் ஆர்வம் காட்டிய ஸ்டீவ் ஜாப்ஸ், தாம் வசித்த நகருக்கு அருகில் உள்ள பாலோ ஆல்டோ என்ற ஊரில் இருந்த கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் கணினி நிபுணர்கள் உரையாற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஆர்வமுடன் சென்று வருவார்.பின்னர் கோடை விடுமுறையில் ஸ்டீவ் வாஸ்னிக் என்ற பொறியாளருடன் சேர்ந்து பணியாற்றினார். 

 
இந்நிலையில் போர்ட்லாண்டில் உள்ள கல்லூரி ஒன்றில் சேர்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ், முதல் செமஸ்டருடனேயே தமது படிப்புக்கு மங்களம் பாடிவிட்டு கம்ப்யூட்டர் தொடர்பான வடிவமைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் காட்ட தொடங்கினார். 

 
இந்த ஆர்வம் அவரை வீடியோ கேம் டெக்னீசியன்களில் முன்னோடி எனக் கூறப்படும் அடாரி என்பவருடன் சேர்ந்து பணியாற்ற வைத்தது.அதன் பின்னர் தம்மை போன்றே கல்லூரி படிப்பை பாதியில்விட்ட வோஜ்னியாக் என்பவருடன் சேர்ந்து கம்ப்யூட்டர் கிளப் ஒன்றில் சேர்ந்தார்.



கம்ப்யூட்டர் மீதான இவர்கள் இருவரது ஆர்வமும் ஒரே அலைவரிசையில் ஒத்துப்போன நிலையில், 1976 ஆம் ஆண்டு இருவரும் சேர்ந்து தொடங்கியதுதான் " ஆப்பிள் கம்ப்யூட்டர்".
இந்த நிறுவனத்தை தொடங்கியபோது ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு வயது 21; அவரது சகாவான வோஜ்னியாக்கின் வயது 26. 

 
பின்னர் 1980 ஆம் ஆண்டு இருவரும் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டரை உருவாக்கி வெளியிட, அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் கணினி தொழில் நுட்பத்தை மாற்றிய பெருமை இவருக்கே உரியது. சாதாரணமான கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமாக உருவாகிய ஆப்பிள் நிறுவனத்தில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஐ பாடு மற்றும் ஐ டியூன்ஸ், ஐபோன் உருவாக்கி மாபெரும் கண்டுபிடிப்பு புரட்சி நிகழ்த்தியவரும், இவரே. 



பொறியியல் படிப்பில் எவ்வித முறையான பட்டமும் பெறாத ஸ்டீவ் ஜாப்ஸின் 10 கண்டுபிடிப்புகள்தான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.


  
2003 ஆம் ஆண்டு ஐ பாடு உருவாக்கபட்ட பிறகு இசை உலகில் ஒரு மாற்றமே ஏற்பட்டது. சுமார் 20 கோடி பேர் இதில் பதிவு செய்து ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட பாடல்களை பதிவிறக்கம் செய்து ரசித்து வருகின்றனர்.

2007 ஆம் ஆண்டு ஐ‌ போனை இவர் உருவாக்கினார்.ஸ்மார்ட் போன் உருவாக இது ஒரு முன்னோடியாக விளங்கியது. 2011ல் உருவாக்கப்பட்ட ஐ டியூன்ஸ் சேவை மேலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து முழு கம்ப்யூட்டர் பயன்பாட்டை ‌கையடக்க வடிவில் கொண்டு வரும் வகையில் இவர் உருவாக்கிய ஐ பேடு வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பம், கணினி யுகத்தில் புதிய வரலாற்றைப் படைத்தது.

 
கடந்த ஆண்டு வரை பிரபலமாக இருந்த டேப்லட் பிசி என்ற கம்ப்யூட்டரை, ஐ பேடு பின்னுக்குத் தள்ளி, 2010 இறுதியில் ஒன்றரை கோடி விற்பனையானது. இவர் கடந்த ஆகஸ்ட் வரை அதன் ‌தலைவராகவும் இருந்தார். 



"உங்கள் வாழ்க்கைக்கான நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மற்றவர்களுக்காக வாழ்ந்து அதை வீணாக்காதீர்கள்"  என்பது ஸ்டீவ் ஜாப்ஸின் பிரபலமான வார்த்தைகளில் ஒன்று. 
 
சாதனையாளர்களை விதி அதிக நாட்கள் வாழவிடுவதில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது ஸ்டீவ் ஜாப்ஸின் மரணம். ஆனால் அவரது சாதனைகளுக்கு அழிவில்லை!



                                                 வாழ்க  அவர் புகழ்  


                                                                                               உங்கள்
                                                                        ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV 

Tuesday, October 4, 2011

தியாகி சுப்பிரமணிய சிவா




தியாகி சுப்பிரமணிய சிவா      ( 4 /10 /1884  --  23 / 7 /1925 )

சுப்பிரமணிய சிவா பிறந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு. இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள். இவருக்கு இரு சகோதரிகள் அவர்கள் ஞானாம்பாள், தைலாம்பாள். ஒரு சகோதரன் வைத்தியநாதன் என்று பெயர்.

சுப்பிரமணிய சிவா கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் படித்தார். மெட்ரிகுலேஷன் தேர்வில் தோற்றார். தூத்துக்குடியில் போலீஸ் ஆபீசில் அட்டெண்டராக வேலை பார்த்தார். வாழ்க்கையில் விரக்தியுற்று துறவியானார்.

அவர் நினைவாக அவ்வூரின் பேருந்து நிலையம் இவர் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த தியாகிக்குச் செலுத்தும் அஞ்சலி அது.

சிறு வயதில் வறுமைக்கு ஆட்பட்டு திருவனந்தபுரம் சென்று அங்கு இலவசமாக உணவு படைக்கும் ஊட்டுப்புறையில் உண்டு வசித்தார். அங்கிருக்கும் நாளில் இவருக்கு தேசபக்தி இயல்பாக உண்டாகியது. தன் உள்ளத்தில் ஏற்பட்ட தேசபக்தியை இவர் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்திய சுதந்திர வரலாற்றில், பால கங்காதர திலகர் காலத்தில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த மூவர் மறக்கமுடியாத தியாகசீலர்களாவர். இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் சுதந்திர தாகம் ஏற்பட காரணமாயிருந்த அம்மூவரில் ஒருவர் தான் சுப்பிரமணிய சிவா. மற்ற இருவர் எட்டயபுரம் தந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் , கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை, ஆகியோராவர்.

1906இல் கர்சான் வங்கத்தை மதரீதியில் இரண்டாகப் பிளந்தான். நாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் 'வந்தேமாதரம்' எனும் சுதந்திர கோஷம் எழுந்தது. அப்போது தூத்துக்குடியில் வக்கீல் ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனி தொடங்கினார். சிதம்பரம் எனும் காந்தம் சிவா எனும் இரும்பைத் தன்வசம் இழுத்துக் கொண்டது. இவர்களின் சுதேச உணர்வைத் தன் 'சுதேச கீதங்களால்' பாரதியார் தூண்டிவிட்டார்.

சிதம்பரம் பிள்ளை பேசும் கூட்டங்களில் எல்லாம் இவரும் வீரவுரையாற்றினார். அவர் பேச்சில் அனல் வீசியது. அந்த சமயம் சென்னை கடற்கரையில் தேசபக்தர் விபின் சந்திர பால் வந்து தொடர்ந்து சொற்பொழிவாற்றினார். தெற்கில் இம்மூவரின் மேடைப்பேச்சு, சென்னையில் பாலரின் சொற்பொழிவு இவை சேர்ந்து சுதந்திர நாதம் எங்கும் எதிரொலிக்கத் தொடங்கியது. 1907இல் சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு காங்கிரசில் திலகரின் கை ஓங்கியது. அப்போது தூத்துக்குடியில் சிவா தொடர்ந்து மேடைகளில் சுதந்திரம் கேட்டு முழங்கினார். அதோடு தூத்துக்குடி கோரல் மில் வேலை நிறுத்தம் வெற்றி பெறவும் பாடுபட்டார். தொழிலாளர் பிரச்சினையிலும் இவர் கவனம் சென்றது. அந்தக் காலத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தித் தலைவர்கள் பேசிவந்தார்கள். சிவாவும் தன் பேச்சு துவங்கு முன்பாக 'வந்தேமாதரம்', 'அல்லஹுஅக்பர்', என்று முழக்கமிடுவாராம்.

தெற்கே சுதந்திரக் கனல் பரவி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள், வ.உ.சி. சிவா உட்பட பலர் மீது வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் வ.உ.சி. தீவாந்தர தண்டனை பெற்றதும், அப்பீலில் அது குறைக்கப்பட்டது.

சிவா சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் முதலில் ஆறாண்டு காலம் சிறை தண்டனை பெற்று ஜுலை 1908 முதல் நவம்பர் 1912 வரை சிறையிலிருந்தார். இவருடைய சிறை வாழ்க்கையில் இவர் அனுபவித்தத் துன்பம் சொல்லத் தரமன்று. சிறை இவருக்கு அளித்த சீதனம் பார்த்தவர் அஞ்சும் தொழுநோய். இதனை அவர் "கொடியதோர் வியாதி கொல்லுது என்னை" என்று ஒரு பாடலில் குறிப்பிடுகிறார்.

1912இல் இவர் சென்னை மயிலாப்பூரில் குடியேறினார். சென்னையில் இவர் இருந்த நாட்களில் இவர் தன்னுடன் ஒரு தொண்டரை அழைத்துக் கொண்டு ஒரு மேஜை, நாற்காலி இவற்றையும் அத்தோடு ஒரு பெட் ரோமாக்ஸ் விளக்கையும் எடுத்துக் கொண்டு கடற்கரைக்குச் செல்வார். அங்கு மக்கள் கூடும் ஒரு நல்ல இடத்தில் மேஜையைப் போட்டு அதன் மீது ஏறி நின்று உரத்த குரலில் மகாகவி பாரதியின் பாடல்களைப் பாடுவாராம். அப்போது அங்கு கூடும் கூட்டத்தில் இவர் சுதந்திரப் பிரச்சார்ம் செய்வாராம். இப்படித் தன்னலம் கருதாத தேசபக்தனாக இவர் கடமையே கருத்தாக இருந்தார்.

இரண்டாம் முறையாக இவர் இரண்டரை வருடங்கள் நவம்பர் 1921 முதல் சிறையில் இருந்தார். இவர் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, நல்ல எழுத்தாளர், நல்ல பத்திரிகை ஆசிரியர். "ஞானபானு" எனும் பெயரில் இவர் ஓர் பத்திரிகை நடத்தினார். மகாகவி பாரதியும், வ.வெ.சு.ஐயரும் இந்த பத்திரிகையில் எழுதி வந்தார்கள். அதன் பின்னர் 'பிரபஞ்சமித்திரன்' எனும் பெயரிலும் இவர் ஒரு பத்திரிகை நடத்தினார். இரண்டாம் முறை இரண்டரை ஆண்டுகள் சிறை சென்று விடுதலையானபின் தொழுநோயின் கடுமை அதிகமாக இருந்ததாலும் இவர் மிகவும் வருந்தினார். சேலம் மாவட்டத்தில் அப்போது இருந்த பாப்பாரப்பட்டி எனும் கிராமத்தில் பாரதமாதாவுக்கு ஒரு ஆலயம் எழுப்ப இவர் பெரிதும் முயன்றார். அதற்காக சித்தரஞ்சன் தாசை கல்கத்தாவிலிருந்து அழைத்து வந்து 1923இல் அடிக்கல்லும் நாட்டினார்.

மறுபடியும் சிவா மூன்றாம் முறை சிறை செல்ல நேர்ந்தது. இது ஒரு ஆண்டு சிறைவாசம். அதுகுறித்து இவர் ஒரு வழக்கு தொடர்ந்து அதிலிருந்து விடுதலையானார். இவர் மகாத்மா காந்தியின் அகிம்சை வழிப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. தீவிர வாதமே இவரது எண்ணம். இவர் தொழுநோயினால் பாதிக்கப்பட்டதனால் இவரை அன்றைய பிரிட்டிஷ் அரசு ரயிலில் பயணம் செய்வதை தடை செய்திருந்தது. எனவே இவர் மதுரையிலிருந்து தன் உடல் உபாதையையும் பொருட்படுத்தாமல் பாப்பாரப்பட்டிக்கு வந்துவிட வேண்டுமென்று கால்நடையாகவே பயணம் செய்து வந்து சேர்ந்தார். இவருக்கு வயது அதிகம் ஆகவில்லையாயினும், தொல்லை தரும் கொடிய வியாதி, ஆங்கில அரசின் கெடுபிடியினால் கால்நடைப் பயணம் இவற்றல் ஓய்ந்து போனார்.

இவர் யாருக்காகப் போராடினாரோ அந்த மக்களும் சரி, சுதந்திரத்துக்காக முன்நின்று போராடிய காங்கிரசும் சரி, இவர் காந்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் இவர் ஒதுக்கப்பட்டார். மனம் உடைந்து போனார் .சிவா 23-7-1925இல் இவ்வுலக வாழ்க்கையை நீத்து அமரரானார்.

                                இன்று அவரின் பிறந்தநாள்

                     வாழ்க சுப்பிரமணிய சிவாவின் புகழ்!

                                                                            அன்புடன் உங்கள் ,
                                                                ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV

Saturday, October 1, 2011

பெஞ்சமின் பிராங்க்ளின் கற்றுக்கொடுத்த பாடம்



நேர நிர்வாகம்


பெஞ்சமின் பிராங்க்ளின் ஒரு புத்தக வெளியீட்டகம் நடத்தி வந்தார். ஒரு நாள் அந்த கடைக்கு வந்த ஒருவர் ஒரு புத்தகத்தை எடுத்து அங்கு பணியிலிருக்கும் பையனிடம் அந்த  புத்தகத்தின் விலையைக் கேட்டார்.

"ஒரு டாலர்" என்றான் அந்த பணியாள்.

வந்தவருக்கு அந்த விலை அதிகமாக தோன்றவே, "நான் அடிக்கடி இங்கு வந்து புத்தகங்கள் வாங்குவேன். எனக்கு விலையைக் குறைத்துத் தர வேண்டும்" என்றார்.

அதற்க்கு அந்த சிப்பந்தி "நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களிடம் பாரபட்சம் பார்ப்பது இல்லை. புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள விலைக்கே விற்க வேண்டுமென்பது எங்கள் உரிமையாளர் உத்தரவு" என்றார்.

"அப்படியானால் நான் உங்கள் உரிமையாளரைப் பார்க்க வேண்டும்" என்றார் வந்தவர்.

உரிமையாளர் உள்ளே முக்கியமான் வேலையில் இருப்பதாக சொன்னார் அந்த பணியாளர். வந்தவர் அவரை பார்க்காமல் செல்வதில்லை என்றார். அவர்களுக்குள் வாக்குவாதம் வளர்ந்தது.

இவர்களின் சத்தம் கேட்டு வெளிய வந்த பெஞ்சமின் பிராங்க்ளின், அந்த வாடிக்கையாளரிடம் என்னவென்று கேட்டார். அவரும் அந்தப் புத்தகத்தை காட்டி அதன்  விலையைக் கேட்டார்.

"ஒன்றேகால் டாலர்" என்றார் முதலாளி

கேட்டவர் அதிர்ச்சியடைந்து "பையன் ஒரு டாலர் தான் சொன்னான்" என்றார்

"ஆம் பையன் சொன்னது ஒரு டாலர் தான். நான் சொன்ன விலை ஒன்னேகால் டாலர். இப்போது அந்த விலைக்கும் தர முடியாது. ஒன்றரை டாலர் வேண்டும்" என்றார் பெஞ்சமின் .

அதிர்ந்துவிட்ட வாடிக்கையாளர் "என்ன இது இருக்க இருக்க விலையை ஏற்றிக் கொண்டே போகிறீர்களே" என்றார்.

"ஆம் இன்னும் தாமதித்தால் இன்னும் ஏறும்" என்றார் பெஞ்சமின்.

"ஏன் அப்படி?" என்றார் வந்தவர்

"ஏனென்றால் நீங்கள் என் பொன்னான நேரத்தை விரயம் செய்துகொன்டிருக்கிறீர்களே அதனை யார் ஈடு கட்டுவது?." என்றார் பெஞ்சமின் .

வந்தவர் எதுவும் பேசாமல் ஒன்றரை டாலரைக் கொடுத்துவிட்டு புத்தகத்தை எடுத்துச் சென்றார்.

நம்மில் பலரும் இப்படித்தான். ஐந்து ரூபாய் பத்து ரூபாய்க்காக பேரம் பேசி  அதனை விட மதிப்புமிக்க நேரத்தை வீணடிப்போம். நேரத்தின் மதிப்பை இந்த நிகழ்ச்சியின் மூலம் பெஞ்சமின் பிராங்க்ளின் நமக்குப் புரியவைத்து விட்டார்.

Sunday, September 18, 2011

ஆபிரகாம் லிங்கனும் கென்னடியும்.






ஆபிரகாம் லிங்கனும் கென்னடியும் எப்படி இறந்தனர்?

இந்த பதிவு நிச்சயம் உங்கள் புருவங்களை உயர்த்தும். அமெரிக்க அதிபர்கள் ஆபிரகாம் லிங்கன்,கென்னடி ஆகிய இருவருக்கும் பலவிதங்களில் ஒற்றுமை இருக்கிறது.


இது  குறித்து சிலர் ஏற்கனவே படித்திருக்கலாம், இருப்பினும் மீண்டும் ஒரு மீள்பார்வை..

ஒரு வரலாறு நூறு ஆண்டுகள் கழித்து மீண்டும் நடைப்பெற்றக் கதையிது!


ஆபிரகாம் லிங்கன் 1846-ஆம் ஆண்டில் சட்டசபை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

சான் எஃப். கென்னடி 1946-ஆம் ஆண்டில் சட்டசபை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.


ஆபிரகாம் லிங்கன் 1860-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.

சான் எஃப்.கென்னடி 1960-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.


இவர்களிருவரும் குடிமக்களின் உரிமைகளில் அதிக கவனம் செலுத்தியவர்கள்.


இவர்களிருவரின் மனைவிமார்களும் அமெரிக்க வெள்ளை மாளிகையில் வாசம் செய்த காலத்தில்தான் தங்கள் பிள்ளைகளை இழந்தனர்.


இவ்விரு அதிபர்களும் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நாள் வெள்ளிக் கிழமையாகும்.


இவ்விருவருமே தலையில் சுடப்பட்டு இறந்தனர்.


ஆச்சரியமாக இருக்கிறதா...?



லிங்கனின் செயலாளரின் பெயர் கென்னடி.

கென்னடியின் செயலாளரின் பெயர் லிங்கன்.


இவ்விரு அதிபர்களுமே தென் மாநிலங்களைச் சார்ந்த நபர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.


லிங்கனுக்கு அடுத்து அதிபர் பதவியையேற்ற அண்ட்ரூ சான்சன் 1808-ஆம் ஆண்டில் பிறந்தவாராவார்.

கென்னடிக்கு அடுத்து அதிபர் பதவியையேற்ற லிண்டன் சான்சன் 1908-ஆம் ஆண்டில் பிறந்தவராவார்.



லிங்கனைக் கொலைச் செய்த சான் வில்க்ஸ் பூத் 1839-ஆம் ஆண்டு பிறந்தவராவார்.

கென்னடியைக் கொலைச் செய்த லீ ஆர்வீ ஓஸ்வெல்ட் 1939-ஆம் ஆண்டி பிறந்தவராவார்.



இவ்விரு கொலையாளிகளின் முழுப்பெயர்கள் ஒவ்வொன்றிலும் மூன்றுப் பெயர்கள் அடங்கியுள்ளன.

இவ்விரு கொலையாளிகளின் பெயர்களுமே 15 ஆங்கில எழுத்துகளால் அமைந்தவை.

(John Wilkes Booth , Lee Harvey Oswald)

என்ன, படிக்கப் படிக்க ஆச்சரியமாக உள்ளதா?

லிங்கன் - 'ஃபோர்டு' என்றழைக்கப்படும் ஒரு திரையரங்கில் கொல்லப்பட்டார்.

கென்னடி - 'ஃபோர்டு' நிறுவனம் தயாரித்த 'லிங்கன்' எனும் மகிழுந்தில் பயணம் செய்யும்போது கொல்லப்பட்டார்.

திரையரங்கில் லிங்கனைக் கொன்ற கொலையாளி ஒரு கிடங்கில் சென்று ஒளிந்துக் கொண்டான்.

கென்னடியைக் கொன்ற கொலையாளி ஒரு கிடங்கிலிருந்து துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, பின் ஒரு திரையரங்கில் சென்று ஒளிந்துக் கொண்டான்.

இவ்விரு கொலையாளிகளும் (பூத், ஓஸ்வெல்ட்), நீதிமன்ற விசாரணைக்கு முன்பே கொல்லப்பட்டுவிட்டனர்.



இங்குதான் சுவாரசியமே உள்ளது... மேலும் தொடர்ந்து படியுங்கள்..



லிங்கன் இறப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்பு மான்றோ, மேரிலாண்ட் எனுமிடத்தில் இருந்தார்.

கென்னடி இறப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்பு மர்லின் மன்றோ எனும் நடிகையுடன் இருந்திருக்கிறார்.

Sunday, September 11, 2011

சுப்பிரமணிய பாரதி Samyuktha Singing Ninnai Charan Adaindhen


                                      சுப்பிரமணிய பாரதி
                           (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921)

1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார்.

பொருள் செய்வதையே நோக்கமாகக் கொண்ட தந்தை; பாரதி ஐந்து வயதுச் சிறுவனாய் இருக்கும் போதே உயிர்நீத்த தாய்; சிருங்காரச் சுவையில் ஈடுபட்டு அத்தகைய இலக்கியங்களைச் சுவைப்பதே வாழ்வெனக் கருதிய மன்னர்; தூதும் அந்தாதியும் கலம்பகமும்  பாடிப் பரிசில் பெற்றுக் கொண்டிருந்த புலவர் கூட்டம் என்ற சூழலில் வாழ்ந்த பாரதியின் வாழ்க்கையில் மேலும் பல துன்பங்களை கடந்துவந்தவர்.

1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார் பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார்.

பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட்  1906 வரை   பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகஸ்ட் 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியே மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆகஸ்ட். 1905-ஆகஸ்ட் 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906/செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (டிசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910),என்ற இதழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராக  துணிச்சலான பத்திரிகைக்காராக பணியாற்றினார்.

தமிழ்,சமஸ்கிருதம்,இந்தி, ஆங்கிலம்  மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளையும், பிற மொழி இலக்கியங்களையும், தமிழ்மொழியாக்கம் செய்துள்ளார். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்ட மாமேதை.


செல்வத்தையும் பணத்தையும் ஒருபொருட்டாகக் கருதாதவர்,
மன்னரையும் செல்வந்தரையும் மதிக்காத சுயமரியாதை உணர்வு கொண்ட மாமனிதன்.

தமிழ்க் கவிஞர்:

புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன் பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையை தமிழுக்குத் தந்தவன்.

தேசிய விடுதலைப் போராட்ட வீரர்:

அச்சமின்மையே இந்திய விடுதலைப் போரினை
உருவாக்கியது. அந்நிய அரசின் அடக்குமுறை பாரதியைக்
கட்டுப்படுத்த முடியவில்லை. உச்சிமீது வான் இடிந்து வீழினும்
அச்சமில்லை என்ற பாரதியின் பெயர் விடுதலை வரலாற்றில் நிலைத்து விட்டது.
சூரத்நகரில் நிகழ்ந்த காங்கிரஸ்மாநாட்டுப் பணி, வ.உ.சிதம்பரம்
பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீதான வழக்குகள் ஆகியன பாரதியின் புகழைப் மேன்மேலும் பெருக வைத்தன.

ஜாதி மதம் பாராதவர்:

புதுவையில் கனகலிங்கம் என்ற தாழ்த்தப்பட்ட இளைஞருக்கு அவர் பூணூல் போட்டுவிட்டதும், தம்போலா என்ற தோட்டி வீட்டில் போய் உட்கார்ந்து காற்று வாங்கியதும்,

தேசமுத்து மாரியம்மன் கோயிலில் சென்று பாட்டிசைத்ததும், வசன கவிதைகளுக்கு அடித்தளம் அமைத்ததும், எளிய நிகழ்ச்சிகளல்ல. வரலாற்றில் இவை பெரிய மாற்றங்களையும் திருப்பங்களையும் உண்டாக்கிவிட்டன.

பெண்களின் உரிமையை வற்புறுத்தியவர்:

தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதி தான் .
பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினான். போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான் என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றான்.
பெண்களின் கல்வியறிவுக்காகவும் சட்டங்களை செய்திடவும் கனவு கண்ட பாரதி.

கட்சி அமைப்புகளுக்குக் கட்டுப்படாதவர்:

தமிழ்நாட்டிலிருந்த காங்கிரஸ் இயக்கத்தோடு கூட அவர் உறவுடையவராக இல்லை; அவர் தாமே ஒரு தனி இயக்கமாக விளங்கினார். எவரிடமும் அனுமதி பெறாமல் நேரே சென்று காந்தியடிகளைக் கண்டு தாம் நடத்தும் கூட்டத்திற்கு வர இயலுமா என்றும் கேட்டார்.

தமிழைப் பெரிதும் போற்றியவர்:

பாரதியார் இன்றும் பேசப்பெறுவதற்குரிய நிலையில் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று அவரது எளிமையான நடை. பாரதிக்கு முன்‘பாட்டு இலக்கியம்’ இல்லை. செய்யுள் இலக்கியமே இருந்தது. அந்தச் செய்யுளுக்கு உரை இருந்தால்தான் புரிந்து கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. செய்யுட்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உரைகள் எழுந்தன. எவ்வளவுக் கெவ்வளவு எளிமையாக இல்லாமல் இருக்கிறதோ அவ்வளவுக் கவ்வளவு செய்யுள் இலக்கியம் மதிப்புடையதாகக் கருதப்பட்டது. பாரதிக்கு இந்தக் கருத்து உடன்பாடாக இல்லை. மக்கள் அனைவருக்கும் விளங்கும் எளிய தமிழில் பாட்டு இலக்கியப் படைப்பு இருக்க வேண்டுமென்று பாரதி கருதினார். பாரதியார் புதுவையில் அரவிந்தரிடம் ரிக் வேதப் பாடல்களை முறையாகக் கற்றுக் கொண்டார். அவற்றைத் தமிழில் மிக எளிமையாகப் பாட்டு வடிவத்தில் கொண்டு வந்தார்.

கவிதை
சக்திப்பாடல்கள்,
கண்ணன் பாட்டு,
குயில்பாட்டு,
பாஞ்சாலி சபதம்,
பெண்விடுதலைப் பாடல்கள்.
ஆகியன அவர் படைப்புகளில் சில.

இவைகளில் எனக்கு பிடித்தது இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த பாஞ்சாலி சபதம்  படைப்புதான். அழகிய இலக்கிய நயத்தையும், மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது.

 தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில்பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.

விடுதலை போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளை படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார்.

ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.

                                     வாழ்க பாரதி ! வளர்க அவர் புகழ் !
                                                                      

                                                   என்றும் அன்புடன்
               "ஸ்ரீ வைஷ்ணவன் "ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV 

Thursday, September 8, 2011

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே !




படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
கொடுத்தானே கொடுத்தானே பழரசம் ஆண்டவன் கொடுத்தானே
பிரித்தானே பிரித்தானே மனதையும் கவலையும் பிரித்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை
குடும்பம் மனைவி அண்ணன் தம்பி கூட்டம் சிறிதுமில்லை
ஆசை பாசம் காதலில் விழுந்தான் அமைதியைக் காணவில்லை
அலைந்தான் தவித்தான் துடித்தான் மடிந்தான் யாருக்கும் லாபமில்லை
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
தன்னந்தனியே பிறந்தவன் நெஞ்சில் சஞ்சலம் இல்லையடா
இன்னொரு உயிரை தன்னுடன் சேர்த்தால் என்றும் தொல்லையடா
இத்தனை சிறிய மனிதனின் தலையில் எத்தனை சுமைகளடா
இருபதில் தொடங்கி எழுபது வரைக்கும் என்றும் மயக்கமடா
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
மனதினில் கவலையை வளர்த்தானே
ம்...ம்ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்.

பாடல்: படைத்தானே படைத்தானே
திரைப்படம்: நிச்சய தாம்பூலம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
ஆண்டு: 1961 .


Thursday, September 1, 2011

ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி

விநாயகா ! விநாயகா !!




                             ''ஓம் வக்ர துண்டாய ஹும்''

ஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு சிறுவனை உருவாக்கி உயிர்கொடுத்து காவலுக்கு நிக்கச்சொன்னார். யாரையும் உள்ளே விடவேண்டாம் எனவும் கட்டளையிட்டார். அப்போது அங்கே வந்த சிவபெருமானை தடுத்தான் அந்தச் சிறுவன். கோபமுற்ற சிவபெருமான் அவன் தலையை துண்டித்தார். பின்னர் பார்வதியின் மைந்தன் என்பதை அறிந்த சிவபெருமான் கோபம் தணிந்து , தன் பூதகணங்களை அழைத்து அவர்கள் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து எடுத்துவருமாறு கூறினார். அவர்கள் முதலில் பார்த்ததோ ஒரு யானையை. சிவபெருமானின் கட்டளைப்படி அந்த யானையின் தலையை துண்டித்து எடுத்துவந்தனர். அதனை சிவபெருமான் அந்த சிறுவனின் உடம்பில் ஒட்டவைத்து மீண்டும் உயிர் கொடுத்தார். அப்போது வெளியே வந்த பார்வதி பிள்ளை யாரு? எனக் கேட்டார். அதுவே அச்சிறுவனுக்கு பெயராகிவிட்டது. அச்சிறுவன் தான் பிள்ளையார் ஆவணியில் பிள்ளையார் அவதரித்த நாளையே விநாயக சதுர்த்தியாக கொண்டாடி மகிழ்கிறோம்.இவரது ஜன்ம நட்சத்திரம் அஸ்தம்,கன்னிராசி விருச்சிகம் இவருடைய லக்னம். முதற்கடவுள் என்பதால் விநாயகரின் ஜாதகத்தை எல்லாருமே வழிபாடு செய்து வரலாம்.

முழுமுதல் கடவுள்:


மூலாதாரத்திற்கு உரியவராக விளங்கும் விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். இவரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவர். எந்த சுபவிஷயத்தை செய்யத் தொடங்கினாலும், தொடங்கும் செயல் தடையேதும் இல்லாமல் இனிதே நிறைவேற்றி அருள்வாய்! என்று வணங்கிவிட்டே செயல்படுவர். எழுதத் தொடங்கினாலும், பிள்ளையார்சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு என்று குழந்தைகளுக்கு வீட்டுப் பெரியவர்கள் வழிகாட்டுவர்.

விநாயகரும் சிறந்த எழுத்தாளராகப் பணியாற்றி இருக்கிறார். தன் தந்தத்தை ஒடித்து எழுத்தாணியாக்கி வியாசர் சொல்ல மகாபாரதத்தை எழுதியவர் விநாயகர். சதுர்த்திநாளில் வணங்குவோருக்கு விநாயகப் பெருமானின் அருளால் செல்வாக்கும், சொல்வாக்கும் உண்டாகும்.

விநாயகப் பெருமான், மந்திரமூர்த்தியாகவும் இருக்கிறார். எந்த தெய்வத்திற்குரிய மூல மந்திரமாக
இருந்தாலும், அம்மந்திரம் ஓம் என்னும் பிரணவத்தோடு தான் தொடங்கும். ஓம் என்னும் பிரணவத்தின் சொரூபம் விநாயகர். வி என்றால் மேலான என்று பொருள்.இவருக்கு மேலான நாயகர்(தலைவர்) வேறு இல்லை என்பதால் தான் இவரை விநாயகர் என்று வணங்குகிறோம்.  எட்டெழுத்து, ஆறெழுத்து, ஐந்தெழுத்து, என்று எத்தனை எழுத்துகள் அடங்கிய மந்திரங்களாக இருந்தாலும் ஓம் உடன் சேர்த்து சொல்வதே மரபாகும்.

ஐந்து கைகள் ஏன்?



இறைவன் செய்யும் தொழில்கள் பஞ்சகிருத்யங்கள் எனப் பெயர் பெறும். அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாகும். விநாயகர் 4 கரங்களுடன், தும்பிக்கை என்னும் ஐந்தாவது கரத்தையும் கொண்டுள்ளவர். அதனால் ஐங்கரன் என்று பெயர் பெற்றார். விநாயகர் தன் நான்கு கரங்களில் அங்குசம், பாசம், எழுத்தாணி, கொழுக்கட்டை ஆகியவையும், ஐந்தாவது கரமாகிய தும்பிக்கையில் அமுத கலசமும் வைத்திருப்பார். இதில் எழுத்தாணி உலகை சிருஷ்டி செய்வதையும், கொழுக்கட்டை காத்தல் தொழிலையும், அங்குசம் அழித்தலையும், பாசம் மறைத்தலையும், தும்பிக்கையில் ஏந்தி யிருக்கும் அமுதகலசம் அருளலையும் காட்டுகின்ற குறியீடுகளாகும்.

நிவேதனம் அதன் தத்துவம் :




அப்பா சிவனுக்கு அபிஷேகம் என்றால் பிரியம். மாமா திருமாலுக்கு அலங்காரம் என்றால் பிரியம். அதுபோல, விநாயகருக்கு நைவேத்யம் என்றால் பிரியம்.

பெரும்பாலான வீடுகளில் விநாயகர் சிலை இருக்கும் . அது அளவில் பெரிதோ, சிறிதோ அதுபற்றி கவலையில்லை.  அந்தப் பிள்ளையாருக்கு கட்டாயம் ஏதாவது ஒரு நைவேத்யம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு பழமாவது வைக்க வேண்டும். சதுர்த்தி திதிகளில் முடிந்தவரை மோதகம், கோதுமை அப்பம், பழவகைகள், பொரி ஏதாவது ஒன்றை வைக்க வேண்டும்.

மோதகம்: இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் படைக்கப்படுகிறது.

கரும்பு: கடிப்பதற்கு கடினமானாலும் இனிப்பானது. வாழ்க்கையும் இப்படித்தான். கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்ற தத்துவத்தின் படி படைக்கப்படுகிறது.

அவல், பொரி: ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

யானை முகத்துடன் குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டும் விநாயகருக்குரிய எல்லா நைவேத்யங்களுமே, குழந்தைகளுக்கு தான் முன்னுரிமை அவர்களுக்கு போக மீதித்தான் பெரியவர்களுக்கு ; விநாயகருக்கு சிதறுகாய் உடைக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இப்படி சிதறிப்போகும் காயை பெரியவர்கள் எடுக்கலாமா என்றால் கூடாது. அதுவும் குழந்தைகளுக்கே சொந்தம்.

வழிபாடுகளும் பலன்களும் :



1. வெள்ளிக்கிழமை விரதம்
2. செவ்வாய்க்கிழமை விரதம்
3. சதுர்த்தி விரதம்
4. குமார சஷ்டி விரதம்
5. தூர்வா கணபதி விரதம்
6. சித்தி விநாயகர் விரதம்
7. துர்வாஷ்டமி விரதம்
8. நவராத்திரி விரதம்
9. வெள்ளிப் பிள்ளையார் விரதம்
10. செவ்வாய்ப் பிள்ளையார் விரதம்
11. சங்கடஹர சதுர்த்தி விரதம்.
இதில் ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி விரதம் முக்கியமானதாகும்.

குட்டுவதற்குரிய ஸ்லோகம்: விநாயகரை வணங்கும் போது, தலையில் குட்டிக் கொள்வது வழக்கம். அப்படி குட்டும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் மிகவும் இலகுவானது. இதோ, அந்த ஸ்லோகம்.

சுக்லாம்பரதரம், விஷ்ணும்,
சசிவர்ணம், சதுர்புஜம்!
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோபசாந்தயே!!

இந்த ஸ்லோகத்தைச் சொல்லும் போது, சுக்லாம்பரதரம் துவங்கி ப்ரஸந்ந வதநம் வரையான ஐந்து சொற்கள் வரை தலையில் ஐந்துமுறை குட்டிக் கொள்ள வேண்டும். இந்த ஸ்லோகம் விநாயகருக்கு ரொம்பவும் பிடிக்கும். இதைச் சொன்னால், நாம் துவங்கும் செயல்கள் தங்குதடையின்றி நடக்கும்.

எளிமையான பிள்ளையார் வழிபாடு ! இருக்கிற இடத்திலேயே மூன்றே மூன்று தோப்புக்கரணம் போட்டால் போதும்.

இந்த தோப்புக்கரணத்தை முதன்முதலில் போட்டவர் விநாயகரின் மாமனரான திருமால் தான். ஒருமுறை, இவர் தன் சக்கரத்தை கையில் சுழல விட்டு விநாயகருக்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தார். குழந்தை விநாயகன், அதை தும்பிக்கையால் பிடுங்கி வாயில் போட்டுக் கொண்டார். திரும்பக் கேட்டால் தர மறுத்து அடம் பிடித்தார். மருமகனை சிரிக்க வைத்தால் சக்கரம் கீழே விழுந்து விடும் என்ற அனுமானத்தில், காதுகள் இரண்டையும் கை மாற்றி பிடித்துக் கொண்டு, அமர்ந்தார், எழுந்தார், அமர்ந்தார். இந்த வேடிக்கையைப் பார்த்து சிரித்த விநாயகரின் வாயில் இருந்து சக்கரம் கீழே விழ மீண்டும் எடுத்துக் கொண்டார். இந்த வேடிக்கை விளையாட்டே சமஸ்கிருதத்தில் தோர்பிகர்ணம் என்ற பெயர் பெற்றது. தோர்பி என்றால் கைகளால். கர்ணம் என்றால் காது. கைகளால் காதை பிடித்துக் கொள்ளுதல் என்பது இதன் பொருள். தமிழில் இது தோப்புக்கரணம் ஆகிவிட்டது.

விநாயகரை வெள்ளிக்கிழமை மற்றும் சதுர்த்திதிதிகளில் வணங்கும் போது, நம்  நினைவிற்கு வரவேண்டியவர் அவ்வையார். அவர் சீதக்களப செந்தாமரைப்பூம் என்று துவங்கும் விநாயகர் அகவல் என்னும் பாமாலையை எழுதியவர். இதை சதுர்த்தியன்று பாடினால், நீங்கள் பிள்ளையாரிடம் ஏதாவது வேண்டினால், அவர் இரட்டிப்பாகத்தருவார்.

விநாயகப் பெருமானை சதுர்த்தியன்று அஷ்டோத்ர நாமாக்கள் (108 பெயர்கள்) சொல்லி வழிபடுவது மரபு. அது முடியாவிட்டால் பரவாயில்லை. 16 நாமாக்கள் கொண்ட ஒரே ஒரு எளிய ஸ்லோகத்தைச் சொன்னாலே அஷ்டோத்ரம் சொன்ன பலன் கிடைக்கும்.

ஸுமுகச்ச ஏகதந்தச்ச கபிலோ கஜகர்ணக:!
லம்போ தரச்ச விகடோ விக்நராஜோ விநாயக:!!
தூமகேதுர் கணாத்யக்க்ஷ பாலசந்த்ரோ கஜாநந:!
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ!!


நாம் முற்பிறவியில் செய்த செயல்களின் அடிப்படையில் இப்பிறவியில் கிரகங்கள் நன்மை தீமைகளை வழங்கி வருகின்றன. கிரக சஞ்சாரம் நமக்கு சாதகமாக இல்லாவிட்டால், அதிலிருந்து நம்மை விடுவித்து காத்தருள்பவரே நவக்கிரகவிநாயகர். இவர் நவக்கிரக நாயகர்களை தன் உடம்பில் அடக்கிக் கொண்டு அருள்பாலிக்கிறார். இவரை சதுர்த்திநாளில் வழிபட்டவர்கள் கிரகதோஷம் நீங்கப்பெறுவர். நவக்கிரக விநாயகரின்
நெற்றியில் சூரியன்,
நாபிக்கமலத்தில்  சந்திரன்,
வலது தொடையில் செவ்வாய்,
வலது கீழ்க்கையில் புதன்,
தலையில் குரு,
இடது கீழ்க்கையில் சுக்கிரன்,
வலது மேல்கையில் சனி,
இடது மேல்கையில் ராகு,
இடது தொடையில் கேது வீற்றிருக்கின்றனர்.
வாரத்தின் எந்த நாளில் இவரை வழிபட்டாலும் பலன் உண்டு .

விநாயகருக்கு மந்திரபிரதிஷ்டை கூடத் தேவையில்லை. மஞ்சள், சாணம், அரிசிமாவு, வெல்லம், களிமண் என்று எதில் செய்தும் இவரை வழிபட்டாலும் பலன் தரக்கூடியவர். இதனை, பிடிச்சு வைத்தால் பிள்ளையார் என்றே குறிப்பிடுவர். அருகம்புல்லும், எருக்கம்பூவும் விரும்பிஅணிபவர். எளிமையும், பக்தியும் அவர் விரும்பும் ஆராதனை

மஞ்சளில் பிடித்த பிள்ளையாரை வழிபட்டால் திருமண தடை நீங்கும்.
மண் பிள்ளையாரைப் பூஜித்தால் நல்ல பதவி கிடைக்கும்.
புற்று மண்ணில் செய்த பிள்ளையாரை பூஜித்தால் வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடையலாம்.
வெல்லத்தால் செய்த பிள்ளையாரை பூஜித்தால் சகல பாக்கியத்தையும் அடையலாம்.
பசுஞ்சாணியால் செய்த பிள்ளையாரை  பூஜித்தால் எண்ணிய காரியங்கள் கைகூடும்.
உப்பினால் செய்த பிள்ளையாரை வணங்கினால் எதிரிகளை வெல்லலாம்.
வெள்ளெருக்குப் பிள்ளையாரை பூஜித்தால் ஞானம் பெறலாம்.
வெண்ணெயில் பிள்ளையார் செய்து பூஜித்தால் நோய்கள் நீங்கும்.

சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது :




சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்று சொல்வதற்கு காரணம் உண்டு, சதுர்த்தியன்று அதாவது பிறந்த நாள் ஒன்றின் போது விநாயகரை தேவலோகத்தினரும், பூலோக மக்களும் வாழ்த்தியும், வழிப்பட்டும் வந்தார்கள். இவ்வாறு வழிபாடு நடப்பதை கண்ட விநாயகர், ஆனந்தத்தில் தன் மனமகிழ்ச்சியை நடனமாக வெளிப்படுத்தினார். அவர் நடனமாடியதை கண்ட சந்திரன்,விநாயகரைப் பார்த்து கேலியாக சிரித்தான். இதைப் பார்த்து கோபம் கொண்ட விநாயகர் தனது கொம்புகளில் ஒன்றை ஒடித்து அதை சந்திரனை நோக்கி எறிந்தார். விநாயகர் சதுர்த்தியன்று சந்திரனை யாரும் பார்க்க கூடாது என்று சபித்தார். அவ்வாறு பார்த்து விட்டால் அன்றைய நாள் முழுவதும் விக்னேஸ்வரனுக்கு செய்த பூஜையும் பெற்ற புண்ணியமும் பலன் இல்லாமல் போய்விடும்.

அதனால் தெரியாமல் நாம் விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனை  பார்த்துவிட்டால், அதற்கு பரிகார நிவர்த்தியாக சங்கடகர சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் தந்து வணங்கினால், தோஷம் நிவர்த்தியாகும்.

அவருடைய அருளால் வீடெங்கும் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் தவழட்டும் என உங்களுக்கும் எனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளுடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.


                           என்றும் அன்புடன் உங்கள் ,
    "ஸ்ரீ வைஷ்ணவன்"ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV