Wednesday, August 31, 2011

விநாயகர் அகவல்


பாடல் ஏழுதியவர் :ஔவையார்       பாடல் பாடியவர் : திரு.சீர்காழி  கோவிந்தராஜன் ,

 

சீதக் களபச் செந்தா மரைப்பூம் 

பாதச் சிலம்பு பலவிசை பாடப் 

பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)
எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!


Monday, August 29, 2011

ஆர்.வி (எ) ஆர். வெங்கட்ராமன்

              ஆர். வெங்கட்ராமன் (டிசம்பர் 6, 1919 - ஆகஸ்ட் 29, 2008)

தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 1918-ம் ஆண்டு டிசம்பர் மாதம்,6-ம் தேதி ராமையா-சீதாலஷ்மி தம்பதியருக்குப் மகனாக பிறந்தார் ஆர். வெங்கட்ராமன் பிற்காலத்தில்,  அன்புடன் தமிழ் பத்திரிகை உலகால் ஆர்வி என்று அழைக்கப்பட்டவர்

1941-ல் தனிநபர் சத்தியாகிரத்தில் பங்கு கொண்டு கைதாகி, பாபநாசத்தில் இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார் ஆர்வி.

1942 இல் சென்னை வந்த பின்பு மயிலாப்பூரில் இருந்த ''கலைமகள்'' காரியாலயத்தில் கி. வா. ஜகந்நாதனைச் சந்தித்து பத்திரிகைத் துறையில் தனக்கிருந்த ஈடுபாட்டைக் கூறினார்.பத்திரிகைக்கு வரும் கதைகளைப் பதிவு செய்வதோடு அவற்றைப் படித்துவிட்டு, தேறக்கூடிய கதைகளை ஆசிரியரின் பார்வைக்காக எடுத்து வைக்கும் வேலையை முதலில் தந்தார்கள்.

அதைத் தொடர்ந்து 1950 இல் சிறுவருக்கென்று கண்ணன் பத்திரிகையும் தொடங்கப்பட்டு அதன் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். "கண்ணனில்" ஆர்வி ஏராளமான சிறுகதைகளையும், சித்திரக்கதைகளையும், தொடர்கதைகளையும் மற்றும் புதினக்களையும் எழுதினார். இவரின் எழுத்துக்கள் வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இவரது புதினங்கள் கல்கி, சுதேசமித்திரன் ஆகிய வார இதழ்களிலும் வெளியாகியிருக்கின்றன. இவரது மிகச் சிறந்த நாவல்கள் என்று பலராலும் பாராட்டப் பெற்ற அணையா விளக்கு, திரைக்குப் பின், ஆதித்தன் காதல் போன்ற நாவல்கள் சுதேசமித்திரனில் வெளியானது. பதினெட்டுக்கு மேற்பட்ட நாவல்கள், பதினான்கு சிறுகதைத் தொகுப்புகள், சிறுவர்களுக்காக பத்துக்கு மேற்பட்ட புதினங்கள், பதினைந்துக்கு மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு மொழி பெயர்ப்பு நூல்கள், பதினைந்துக்கு மேற்பட்ட வானொலி நாடகங்கள், கட்டுரைகள் என எழுதிக் குவித்திருக்கிறார் ஆர்வி.

ஆர்வி அவர்களின் எழுத்தை இன்று படித்தாலும் ஆச்சரியமாக இருக்கும் . அறுபது ஆண்டுகளுக்கு முன்னால், அழகு தமிழில் நாம் எளிதாக புரியும்படியான மென்மையான உரையாடல்கள் மூலம் கதைகளை நகர்த்திச் செல்லும் பாங்கே தனித்தான்  கொஞ்சம் கூடச் சலிப்பேற்படுத்தாத ஆர்ப்பாட்டமில்லாத  அர்த்தமுள்ள வார்த்தை லாகவம்; புன்முறுவல் பூக்கவைக்கும் சொல்லாடல்கள்; சுருக்கமாகச் சொன்னால், தமிழ்மொழியின் சகல சிறப்புகளையும் பளீரிடும் வகையிலான நடையழகுக்குச் சொந்தக்காரர் எழுத்தாளர் ஆர்வி.

பொழுது போக்குக்காகவும், அல்லது மொழிமேல் இருக்கும் ஆளுமைக்காகவும் எழுத்தாளர் ஆனவர்கள் உண்டு.சிலருக்கு நிரந்தர வருமானம் கொடுக்கக்கூடிய வேறு தொழில்கள் இருக்கும்.  ஆனால் ஆர்வி அவர்கள் அப்படிப்பட்டவர் இல்லை.

பாரதி சொன்னது போல, 'எழுத்து எமக்குத் தொழில்' என்று ஒரு குடும்பத்தையும் நடத்திக்கொண்டு எழுத்தை நம்பியே வாழ்ந்து காட்டியவர். முப்பத்துமூன்று ஆண்டுகளுக்கு மேலாக 'கலைமகள்' பத்திரிகைக் குழுமத்தில் ஒருவராய் இருந்ததோடு, கலைமகள் வெளியீடான 'கண்ணன்' சிறுவர் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர் .

அவர் எழுத்து 'தமிழால் எதையும் சாதிக்கமுடியும்' என்று சாதித்த எழுத்து.கலைமகள் அவருக்கு அப்படி ஒரு வரம் கொடுத்து இருந்தாள். அதற்கேற்ப 'கலைமகள்' பத்திரிகைக் குழுமம் அவருக்கு எல்லா பத்திரிகையிலும் ஏழுத முழுச்சுதந்திரம் கொடுத்திருந்தது. அரைநூற்றாண்டுக்கு முன்னால் ஒரே நேரத்தில் நாலைந்து பத்திரிகைகளில் தொடர்கதை எழுதிய ஒரே எழுத்தாளர் ஆர்வியாகத்தான் இருக்க முடியும். " "கண்ணன்" சிறுவர் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து சிறுவர் இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்கு மகத்தானது.

இன்று பிரபலமாகத் திகழும் பலருக்கும் குழந்தைக் கவிஞர் பலருக்கும் ஆரம்பப்பள்ளிக்கூடம் "கண்ணன்" தான்! தமது ஆசிரியர் பணியில் எத்தனை எத்தனை இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து, உற்சாக மூடடி, தட்டிக்கொடுத்து, பாராட்டி எழுத்துலகத்திற்கு அறிமுகப்படுத்தி ஆசிர்வதித்திருக்கிறார் தெரியுமா ?

இளையவன், மாயூரன் குருமூர்த்தி, அம்பை, சரஸ்வதி ராமநாதன், ஜெயலஷ்மி, லெமன், ஜே.எம்.சாலி, இலக்கியவீதி இனியவன், ரமணீயன், டாக்டர் ஹரிஹரன் (ரேவதி), ஜோதிர்லதாகிரிஜா,தங்கமணி,  தே.பார்த்தசாரதி, டி.கே.ஜெயராமன என்று பட்டியல் நீளும்............

இவர் ஆசிரியராய் இருந்த 'கண்ணன்' பத்திரிகையில் எழுத்துலக ஜாம்பவான்கள் கிட்டதட்ட அத்தனை பேரும் குழந்தைகளுக்காக எழுதியிருக்கிறார்கள்.

திருவாளர்கள் இராஜாஜி, சி.சுப்ரமணியம், பக்தவத்சலம், ஆர்.வெங்கட்ராமன், மு.வ., கவிமணி, கி.வாஜ.,கி.சந்திரசேகரன், வாரியார் பெ.நா.அப்புஸ்வாமி, அழ.வள்ளியப்பா, அம்பை, ஆதவன்,  சபாநாயகம், சுறாமீன் ராமநாதன், சுகி சுப்ரமணியன், ச.கு.கணபதி, சரஸ்வதி, குகப்பிரியை,கொத்தமங்கலம் சுப்பு, தம்பி சீனிவாசன், ராஜ சூடாமணி, கவிஞர் தமிழ் ஒளி, கே.பி.நீலமணி, மண.அரங்கசாமி, கிருஷணன் நம்பி, ராது, கி.ரா., ஜே.எம்.சாலி, புவனைக்கலைச்செழியன் என்று பட்டியல்  நீண்டு கொண்டே போவதைப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது.

ஆர்வி எழுதியதில், கல்கியில் தொடராக வந்த 'தேன்கூடு', 'காணிக்கை', சுதேசமித்திரனில் தொடராக வந்த 'திரைக்குப்பின்', 'அணையாவிளக்கு', மேம்பாலம், முகராசி, சொப்பனவாழ்க்கை, பனிமதிப்பாவை', 'மனிதநிழல்கள்',சந்தனப்பேழை', 'யெளவனமயக்கம்', 'வெளிவேஷங்கள்', 'லீடர் மணி', 'சந்திரகிரி கோட்டை', 'அசட்டுப் பிச்சு', 'காலக்கப்பல்', 'அலை ஓய்ந்தது' மற்றும் காவிரிபூம்பட்டினம் தொடர்பாக எழுதிய 'இருளில் ஒரு தாரகை', பல்லவ பிற்கால சோழர் காலத்தை ஒட்டி எழுதப்பெற்ற 'ஆதித்தன் காதலி'-- ஆகிய நாவல்கள் ஆகும் .

இவரது 'குங்குமச்சிமிழ்' சிறுகதைத் தொகுப்புக்கு தமிழ் வளர்ச்சிக் கழகம் சார்பாக தமிழ்நாடு அரசு பரிசளித்துப் பெருமைப்பட்டிருக்கிறது. 'இலக்கிய சிந்தனை' பரிசு, கம்பன்விழாவில் பொற்கிழி என்று பரிசுகள், பாராட்டுகள் !

ஒரு எழுத்தாளருக்கு ஒரு நூல் மணிமகுடம் என்பார்களே ! அப்படி ஆர்வி என்றவுடன் விமர்சகர்கள் குறிப்பிடும் நூல்,'அணையாவிளக்கு'.

இவரும்,'மோகமுள்' தி.ஜானகிராமனும் பால்ய காலத்திலிருந்து நண்பர்கள். ஆர்வியின் எழுத்து லாகவத்தைக் கண்டு தி.ஜா.வுக்கு அவர்மீது மிகுந்த பாசம். தி.ஜா. சென்னை தவிர்த்து வேறு எந்த ஊரில் இருந்தாலும், பிற்காலத்தில் டில்லியில் இருந்த போதும், ஆர்வியின் ஒவ்வொரு நாவலையும் பாராட்டி உடனுக்குடன் கடிதம் எழுதிவிடுவாராம்.

பதினெட்டுக்கு மேற்பட்ட நாவல்கள், பதினாங்கு சிறுகதைத் தொகுப்புகள், சிறுவர்களுக்காக பத்துக்கு மேற்பட்ட புதினங்கள்,பதினைந்துக்கு மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு மொழிபெயர்பு நூல்கள், பதினைந்துக்கு மேலான ரேடியோ நாடகங்கள் கட்டுரைகள் என்று நிறைய எழுதிக்குவித்திருக்கிறார்.வானதிப் பதிப்பகம் இவரது நூல்களை வெளியிட்டிருக்கிறது.

1946-ல் கல்கி தலைவராய், ஆர்வி செயலாளராருமாய் தமிழ் எழுத்தாளர் சங்கம் துவக்கியது,
1960-ல் தி,ஜானகிராமன், கி.ரா., ந.சிதம்பர சுப்ரமணியன், தி.ஜ.ர., க.சோமசுந்திரம், நாரண துரைக்கண்ணன் ஆகியோரைக் கூட்டி தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கத்தை உருவாக்கியது, குழந்தை எழுத்தாளர் சங்கத் தலைவராக மூன்று ஆண்டுகள் பணியாற்றி அன்றைய துணை குடியரசுத் தலைவர் மேதகு ஜாகிர்ஹூசேன் அவர்களைக் கொண்டு மூன்றாவது குழந்தை இலக்கிய மாநாட்டைத் தொடங்கச் செய்தது,சென்னையில் தேசிய பத்திரிகையாளர் சங்கத்தை அரும்பாடுபட்டுத் தொடங்கியது,இந்திய எழுத்தாளர் அமைப்பின் சென்னைக்கிளை உருவாக செயல்பட்டு, அதன் செயல் உறுப்பினராய் பணியாற்றியது, என்று எழுத்து, மொழிவளர்ச்சி தொடர்பாக எத்தனையோ பணிகள்
எல்லாவற்றையும் தன் துறைசார்ந்த பணிக்கடமைகள் என்று செய்து முடித்து, வெகுசாதாரணமாய் வாழ்ந்தவர்

ஆர்வி, அவர்கள் அவரது கடைசி காலத்தில் அவரது மாம்பலம் வீட்டில்  நித்யானுஷடானங்களைச் செய்து கொண்டு அவர் உண்டு அவர் குடியிருப்பின் முன் இருக்கும் அவர் கட்டிய பிள்ளையார் கோயில் உண்டு என்று , வெள்ளை மனத்துடன் 'நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர்' அதற்கும் ஒரு வரம் வேண்டும்.

ஆர்வி அவர்களிடம் அவர் எழுதியதில் ஒரு நாவல் கூட கடைசி காலத்தில் அவர் கையில்  இல்லை என்பது நம் மனதை கலக்கும் ஒரு விஷயம்.

ஆர்வி அவர்களின் சிறுவர் இலக்கியப் புதினங்களை விரிவாக ஆய்வு செய்து 'சிறுவர் இலக்கியத்தில் ஆர்வி படைத்த கண்ணன் நாவல்கள்' என்ற பெயரில்  நூலாக்கியிருக்கிறார். ஆர்வி எழுத்துலகத்திற்கு அறிமுகப்படுத்தி ஆசிர்வதித்த "ரேவதி" என்ற புனைபெயரில் குழந்தைகளுக்கான ஏராளமான கதைகளையும், நாவல்களையும் எழுதிய குழந்தை எழுத்தாளர் ஈ. எஸ். ஹரிஹரன்.

          ''முடிந்தால் நீங்களும் அந்த புத்தகத்தை வாங்கி படித்து பாருங்கள் நண்பர்களே''

                 ''கலைமகள் புதல்வனே வாழ்க உன் புகழ் ''


                                               என்றும் அன்புடன் ,
                                  ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV

Thursday, August 25, 2011

திருமுருக கிருபானந்த வாரியார்

                         திருமுருக கிருபானந்த வாரியார்
                           (ஆகஸ்ட் 25, 1906 - நவம்பர் 7, 1993)

தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது மகனாக கிருபானந்த வாரியார் ஆகஸ்ட் 25, 1906 அன்று பிறந்தார்.

செங்குந்த வீர சைவ மரபினர். ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில் வீர சைவ குல முறைப்படி பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பெற்றார்.
வாரியார் சுவாமிகள் அமிர்தலட்சுமியை தனது 19ஆவது வயதில் திருமணம் புரிந்துகொண்டார்.

இவரது தந்தையார் இசையிலும் இயலிலும் வல்லவர், மாபெரும் புராண வல்லுநர். தந்தையாரே வாரியாருக்கு கல்வி, இசை, இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தந்தார்.

8வயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர்.
12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர்.
18 வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார்.
23 வயதானபோது, சென்னை ஆனைகவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம்  நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார்.

சொற்பொழிவு ஆற்றல் : 

15-ஆம் வயதிலிருந்தே தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள்  சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார்.

19-ஆம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார்.

அவரது  சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார்.

தமிழோடு சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர்.அவருடைய சொற்பொழிவுகள் அநேகமாக நாடக பாணியில் இருக்கும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும்.

நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்புகளாகும்.

அவரது "ஆன்மிக மொழி" பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறியது.

கிருபானந்த வாரியார் சிறந்த முருக பக்தர் 1936-ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த போது  , சத்திய ஞான சபையில் அமர்ந்து "திருப்புகழ் அமிர்தம்' என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி "கைத்தல நிறைகனி' என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது.

அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதப்பட்டன. அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின.

எழுதிய நூல்கள்: இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.

வாரியார் சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.

குழந்தைகளுக்கு "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் எழுதினார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.

வாரியார் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும்.
அவற்றுள்
சிவனருட்செல்வர்,
கந்தவேள் கருணை,
இராமகாவியம்,
மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.

தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர்.

சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றறிருந்த காரணத்தால்,"அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் போற்றபட்டார்.

அவருடைய சங்கீத ஞானத்தைப் பாராட்டி, சென்னைத் தமிழிசை மன்ற வெள்ளி விழாவின் போது "இசைப் பேரறிஞர்' பட்டம் வழங்கி கௌரவித்தார்கள்.


1993 அக்டோபர் 19-ஆம் தேதி வாரியார் சுவாமிகள் லண்டன் பயணமானார்,
ஆன்மிகத்துக்காகவே பாடுபட்ட வாரியார் சுவாமிகள்,
1993-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி விமானப் பயணத்திலேயே காலமானார்.


                                     அன்புடன் உங்கள் ,
              "ஸ்ரீ வைஷ்ணவன்"ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV

Classical hit 'Neerodum vaigaiyile...நீரோடும் வைகையிலே

Monday, August 22, 2011

ப்ரம்மம்

இந்துக்களாகிய நாம் உணவை"அன்னம்" என்கிறோம். 
அதனை "அன்னலக்ஷ்மி " என்றும்  அதனை நமக்கு 
குறைவின்றி வழங்க "அன்னபூரணி" தேவியையும்  
வணங்குகின்றோம். 

உபநிஷத்துக்களில் ஒன்றான " ஐதரேய உபநிஷதம்" நாம் 
உண்ணும் உணவே "ப்ரம்மம்" என்கிறது. 

நம் உயிரைக்காப்பாற்றக்கூடிய உணவுப்பொருள்களே
ப்ரத்யக்ஷமான கடவுள் என்று " ஐதரேய உபநிஷதம்"
விரிவாக எடுத்துக்கூறுகிறது. இதனை வருணபகவான்
ன் மகனான ப்ருகுவிற்கு உபதேஸித்தாராம். 





எல்லா ஜீவராசிகளும் உயிர்வாழ்வதற்கு அத்யாவசியமான 
ஒன்று . “ உணவு ” உணவில்லையேல் உயிரில்லை. 
உயிரில்லையேல் உடல்யில்லை கீழே வீழ்ந்துவிடும். 
ஆக உடலும் நன்றாக இருக்கவேண்டும். அதற்கு 
சத்தான உணவுகளையே நாம் உண்ணவேண்டும்.

இத்தகய சிறப்புகள் வாய்ந்த உணவை அந்தநாளில் 
நம் முன்னோர்கள் தரையில் அமர்ந்துதான் சாப்பிட்டனர் . 
 இன்று நாம் டைனிங் டேபிளில் அமர்ந்துதான் 
 சாப்பிடுகின்றோம். 

இன்றய தலை-முறையினர் உணவை அலக்ஷியம் 
செய்கின்றனர். மேலும் அலுவலகத்தில் அல்லது 
உணவகத்தில்  உணவருந்ததும் போதும் காலில்
அணிந்திருக்கும் ஷூ அல்லது செருப்பை கழட்டாமல்    
உட்கார்ந்து சாபிடுகின்றனர்.

சிலர் இடது கையில் தட்டைவைத்துக்கொண்டு 
வலது கையால் நடந்தபடியேயும், வேறுசிலர் 
கட்டிலில் அமரந்து மடியில் தட்டை-வைத்துக்கொண்டு
டிவி பார்த்தபடி சாப்பிடுகின்றனர்.

சிலர் அன்னத்தை எறிவது-போன்ற செயல்களையும் 
செய்கின்றனர். இவையெல்லாமே பாப காரியங்கள். 
ஆகவேதான் பலர் வசதியிருந்தும் வாய்க்கு ருசியாக 
சாப்பிடமுடியாமல் திண்டாடுகிறார்கள். 

உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கற்று தரவேண்டிய 
ஒழுக்க நெறிகளில் அன்னத்தை சாப்பிடும் முறை 
அதற்க்கு நாம் தரவேண்டிய முக்கியத்துவம் 
பற்றியும்  கட்டாயம் அறிவுறுத்துங்கள். 

                                                    அன்புடன் உங்கள் ,
              "ஸ்ரீ வைஷ்ணவன் "ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV

Sunday, August 21, 2011

கோகுலாஷ்டமி ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ணன் பிறந்தநாளை  கிருஷ்ண ஜெயந்தி, ஜென்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, கிருஷ்ணாஷ்டமி, காலாஷ்டமி, கோபால்காலா என்று நம்மால் பலவிதமாகக் கொண்டாடப்படும் இப்பண்டிகை, ஆவணி (ஷ்ராவண) மாசத்தில் ரோகிணி நட்சத்திரம்,மற்றும் பிறந்த திதியான அஷ்டமியைக் கணக்கிட்டு கொண்டாடப்படுகிறது.




சூரிய சித்தாந்தம் என்ற புண்ணிய நூலில்: கலியுகம் கி.மு.3102 லிருந்து துவங்கியதாகக் கூறப்படுகிறது. பாகவதத்தில் பிரம்மன் கூறியுள்ளபடி பார்த்தால் பகவான் கிருஷ்ணர் இப்பூமியில் 125 வருடங்கள்  வாழ்ந்ததாகத் தெரிகிறது.

யதுவம்ஷோ(அ)வதீர்ணஸ்ய பவத புருஷோத்தம ஷரச்சந்தம் வ்யதீயாய பஞ்சகிம்ஷாதிகம் ப்ரபோ (பாகவதம் - 11/6/2)

இதனடிப்படையில் சரியாக கணக்கிட்டால் பகவான் கிருஷ்ணர் இன்றிலிருந்து 5228வருடங்களுக்கு முன் அவதாரங்கண்டார். அதாவது கி.மு.3228 ஆம் ஆண்டு, சிராவண மாதம் தேய்பிறை எட்டாம் நாள் (பகுள அஷ்டமி) அன்று நள்ளிரவில் ரிஷப லக்னத்தில் ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார்.

கோகுலாஷ்டமி கொண்டாடும் விதிகளின் படி, சிராவண மாஸ பகுளாஷ்டமி, ரோகிணி நட்சத்திரம் ஹரிஷண யோகம் ரிஷப லக்னம் சேர்ந்ததே ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஆகும்.

கர வருடம் ஆவணி மாதம் 4ம் தேதி, 21-08-11 ஞாயிற்றுக்கிழமை மதியம்12.09க்கு அஷ்டமி திதி துவங்கி, 22.8.2011 திங்கள் மதியம் 12.28க்கு முடிகிறது.

ரோகிணி நட்சத்திரம் 22.8.2011 திங்கள் மதியம்12.32க்கு துவங்கி 23.8.2011 செவ்வாயன்று மதியம் 2.01க்குமுடிகிறது.

ஹரிஷண யோகம் 22.8.2011 திங்கள் மதியம் துவங்கி 23.8.2011 செவ்வாயன்று மதியம் முடிகிறது.

(செவ்வாய் அன்று காலை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி வழிப்பாடு மிகுந்த பயன்தரும்)

 அறிவாற்றல், நற்புத்தி, நேர்மை, சமயோஜித புத்தி (presence of mind) ஆகியவற்றின் மொத்த வடிவமான பகவானை வழிபட்டு அவர் காட்டிய கீதை வழி நடக்க முயற்சிப்பதே இப்பண்டிகையின் தத்துவார்த்தம்.

பூஜை முறைகள் :

நம் வீட்டைச் அலங்கரித்து , கண்ணனின் விக்ரகம் அல்லது படத்திற்கு மாலை அணிவித்து, சந்தன, குங்குமம் இட வேண்டும். அன்று கண்ணன் லீலைகளை சித்தரிக்கும் பொம்மைகளை
வைத்து வீடுகளில் கொலு பிரதானமாக இடம்பெறவேண்டும் .

கோகுலாஷ்டமி தினத்தன்று ஒவ்வொரு வீட்டிலும் கண்ணனை வரவேற்பது வழக்கம். வாசலில் இருந்து பூஜை அறை வரையில், சின்னக்கண்ணன் நடந்து வருவது போல், பாதச்சுவடுகளை மாக்கோலமாக இடுவர்.இதைப் பார்க்கும்போது, சின்னக்கண்ணன் வீட்டிற்குள் வந்து விட்டது போன்ற உணர்வு தோன்றும்.

குழந்தைகளுக்கு கண்ணன் போல் வேடமிட்டும் அவர்களின்  பாதச்சுவடுகளை மாக்கோலமாக கூட இடலாம்.




இது, ஏதோ அலங்காரத்துக்காக அல்ல; இதற்கு, அருமையான ஆன்மிக காரணம் இருக்கிறது. கோவிலுக்குச் சென்றால், முதலில் நாம் பார்க்க வேண்டியது இறைவனின் திருவடியைத் தான். ஆழ்வார்கள் கண்ணனின் திருவடியைப் பாடினர். அருணகிரிநாதர், முருகப் பெருமானின் திருவடியில், தஞ்சமடையும் பாக்கியம் கிடைக்காதா என உருகுகிறார். மாணிக்க வாசகர், தன் உள்ளம் உருக்கும் திருவாசகத்தில், "திருவடி தீட்சை தந்தவனே... எங்கே போனாய், மீண்டும் உன் திருவடி தரிசனம் எப்போது கிடைக்கும்...' எனக் கதறுகிறார். இப்படி, எந்த தெய்வத்தை வணங்குவோராக இருந்தாலும், இறைவனின் திருவடியைப் பற்றிக் கொள்ளவே ஆசை கொள்கின்றனர்.

ஒருவன் தவறு செய்து விட்டான். அவனை அடிக்க, பலர் ஓடி வருகின்றனர். அவன் அப்படியே தடாலென அவர்கள் கால்களில் விழுந்து விட்டால், அவர்களால் கையை ஓங்க முடிவதில்லை. "காலில் விழுந்து விட்டான்... விட்டு, விடுங்கள்...' என்கின்றனர்.

அது போல், "என் வாழ்வில் நடக்கும் இன்ப, துன்பங்களையெல்லாம் நீயே பார்த்துக் கொள் 'கிருஷ்ணா...' என்று, பகவான் காலில் விழுந்து விட்டால், அதைத்தான், "சரணாகதி தத்துவம்' என்கிறது ஆன்மிகம்.

நிவேதனங்கள்

பிரப்பம் பழம், நாவல் பழம்,அவல்,வெண்ணெய்,நாட்டுச்சர்க்கரை.
பத்ரம், புஷ்பம், பலம், தோயம் என்று பகவானே தன் விருப்பத்தைக்
குறிப்பிட்டபடி துளசி இலை, ஒரு பூ, ஒரு பழம், சிறிதளவு நீர்.

நைவேத்திய பட்சணங்கள்

சுகியன்,அப்பம்,தட்டை,வெல்லச் சீடை,உப்புச் சீடை,முறுக்கு.

கிருஷ்ண ஜெயந்தியன்று, கண்ணபிரானை, ""கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, திரிவிக்கிரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மநாபா, தாமோதரா, வாசுதேவா, பாற்கடல்வாசா, சங்கர்ஷணா, புருஷோத்தமா, பாண்டுரங்கா, பார்த்தசாரதி, நரசிம்மா, அச்சுதா, ஜனார்த்தனா, ஹரி, ஸ்ரீகிருஷ்ணா'' என்ற பெயர்களால் துதிக்க வேண்டும்.


பாவம் போக்கும் கோவிந்தா !

"பார்வதி பதியே'' என்று ஒருவர் சொன்னால், மற்றவர்கள் அவளது துணைவரான சிவபெருமானை "ஹர ஹர மகாதேவ' என்று சொல்வது வழக்கம். ஆனால்,




கோவிந்தநாமத்தைச் சொல்லும்போது முதலில் சொல்பவர் "சர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்' என்று கோவிந்தன் பெயரைச் சொன்னால் கேட்பவர்களும் ""கோவிந்தா கோவிந்தா'' என்று தான் சொல்வர். "சர்வத்ர' என்றால் "எல்லாக் காலத்திலும்', "எல்லா இடத்திலும்', "எங்கும்' என்பது பொருள். காணும் இடத்தில் எல்லாம் அந்த கோவிந்தனே இருக்கிறான். சர்வலோக சக்கரவர்த்தியாக இருக்கும்  இறைவன், பரம எளியவனாக பசுக்கூட்டத்தோடு பால கிருஷ்ணனாக திரிந்த வேளையில் ஏற்பட்ட பெயர் "கோவிந்தன்' என்பதாகும்.

ஆலிலையில் மிதக்கும் கண்ணன்:

மகாவிஷ்ணு, குழந்தை கிருஷ்ணனாக ஆலிலையின்மீது சயனம் கொண்டிருக்ரும் காட்சி பார்ப்பவரை ஈர்க்கக் கூடியதாகும். கிருஷ்ணன் கோகுலத்திலோ, மதுராவில் ஆட்சி செய்யும்போதோ ஆலிலையில் சயனம் கொள்ளவில்லை.




மார்க்கண்டேய  முனிவருக்கு, தன் மாயசக்தியைக் காட்டுவதற்காக பிரளயத்தை (உலகம் அழிவது போன்ற தோற்றம்) ஏற்படுத்தினார். அந்த பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்த ஆலிலையில் குழந்தையாக தன்னை மாற்றிக் கொண்டு படுத்துக் காட்சி தந்தார். அப்போது உலகசிருஷ்டி அனைத்தும் குழந்தை பாலகிருஷ்ணனுக்குள் ஒடுங்கிக் கிடந்தது. ஆலிலைக் கண்ணனை "முக்தி தருகின்றவன்' என்னும் பொருளில் "முகுந்தன்' என பெயர் வந்தது  .

தாமரைப் பூப்போன்ற தன் கால் கட்டை விரலை தாமரைப் பூப்போன்ற தன் கையினால் பிடித்து இழுத்து, வாயிதழால் சுவைத்தபடி  சயனித்திருக்கும் இக்கோலத்தை வழிபட்டால் பிறவித் துன்பம் நீங்குவதோடு வைகுண்டத்திலும் வாழும் பாக்கியம் உண்டாகும். ""சாப்பிடுவது பிரம்மம். சாப்பிடப்படுவது பிரம்மம். சாப்பாடு போடுவதும் பிரம்மம்,'' என்றொரு மந்திரம் உண்டு. அந்த மந்திரத்தை மெய்ப்பிக்கும் வகையில் கண்ணனே இந்த மாயாலீலையைச் செய்து  மகிழ்ந்ததாகச் சொல்வார்கள்.

கோகுலத்தின் மன்னன்:

மழைக்கடவுளான இந்திரனுக்கு ஒருமுறை தன்னால் தான் ஆயர்களும், பசுக்கூட்டங்களும் சுகமாக வாழ்கிறார்கள் என்ற கர்வம் உண்டானது. அவனுக்கு பாடம் கற்பிக்க நினைத்த கிருஷ்ணர், தான் வசித்த ஆயர்பாடியில் இருந்த மக்களிடம் இந்திரனை வழிபடாமல், தங்களுக்கு பிழைப்பு தரும் கோவர்த்தனகிரியை (மலை) வழிபடும்படி கூறினார்.




கோபம் கொண்ட இந்திரன்,  ஆயர்பாடியில் கடுமையாக மழை பெய்வித்தான். கிருஷ்ணர், அந்த மலையைக் குடையாகப் பிடித்து ஆயர்களையும், பசுக்களையும் காப்பாற்றினார். மமதை அடங்கிய இந்திரன், கிருஷ்ணனுக்குப் பட்டாபிஷேகம் செய்து பிராயச் சித்தம் தேடினான். அன்றுமுதல் "கோகுலத்தின் மன்னன்' என்னும் பொருளில் கிருஷ்ணருக்கு "கோவிந்தராஜன்' என்ற பட்டம் உண்டானது. "கோவிந்தா' என உள்ளத்தூய்மையோடு,  தினமும் மூன்றுமுறை சொன்னால் பாவங்கள் தொலையும் என்பார்கள் .

பார்வை ஒன்றே போதும் !

கடவுளுக்கு உருவம் கிடையாது. உருவமின்றி ஒளிவடிவாக காட்சிதரும் அவனை நாமும்  அந்நிலையில் வழிபாடு செய்வது மிக உயர்ந்த நிலையாகும். ஆனால், நம்மைப் போன்ற பாமரர்களால் இவ்வாறு இறைவனை வணங்க முடியாது. எனவே தான் பகவானே நம் மத்தியில்  பாலகிருஷ்ணனாக அவதரித்தான்.  மதுசூதன சரஸ்வதி என்னும் அடியவர் குழந்தை கண்ணன் மீது ""ஆனந்த மந்தாகினி ஸ்தோத்திரம்'' என்னும் பெயரில் நூறு  ஸ்லோகங்களைப் பாடியுள்ளார்.




அதில்,"" ஞானிகள் தம் மனதை அடக்கி தங்களுக்குள் இறைனை ஜோதிவடிவில் பார்த்துவிட்டுப் போகட்டும். நம்மால் அப்படி யோகம், தவம் எல்லாம் செய்ய  முடியவில்லையே என்று யாரும் வருந்த வேண்டாம். அந்த ஜோதியே நீலஒளியாக, கார்மேகவண்ணனாக, யமுனாநதிக்கரையில் ஓடி விளையாடுகிறது. அந்த கண்ணனைப் பாருங்கள். அது, நம் கண்களுக்கு ஆனந்தத்தை தருவதோடு, முக்தியையும் தந்துவிடும்'' என்கிறார்.  அதனால், மகான்கள் கூட கண்ணனின் வடிவழகில் மயங்கி அவனைப் போற்றியிருக்கிறார்கள். தியானம், தவம் போன்ற உயர் பக்தியைக் காட்டிலும், கண்ணனைக் காண்பதே கூட நம்மைக் கரைசேர்க்கும் என்பது மகான்களின் முடிவு.


உலகத்தை  விஷ்ணுவும்,சிவனும் ஆறு ஆறு மாதமாக ரக்ஷிப்பதாக சொல்வது
வழக்கம்.கிருஷ்ணஜயந்தியிலிருந்து சிவராத்திரி வரை ஆறு மாதம் விஷ்ணுவும் சிவனும்,
சிவராத்ரி முதல் கிருஷ்ணஜயந்தி வரை ஆறுமாதம்  உலகத்தை ரக்ஷிக்கிறார்கள்.


எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் பூமியில் தலையெடுக்கிறதோ அப்போதெல்லாம் நான் தோன்றுவேன். கொடியவர்களை அழித்து பக்தர்களைக் காப்பதற்காகவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் யுகம்தோறும் அவதரிப்பேன், என்பது கீதைநாயகன் கிருஷ்ணரின் அருள்வாக்கு.



இப்படியொரு நிலையைச் சீர்படுத்துவதற்காக துவாபரயுகத்தில் அவர் அவதரித்தார். தர்மநெறிதவறி நடந்த கொடிய அரசர்களிடம் இருந்து உலகைக் காப்பதற்காக குருசேக்ஷத்திர யுத்தத்தை நடத்தினார். முழுமுதற்கடவுளாகிய மகாவிஷ்ணுவே கிருஷ்ணராக வசுதேவரின் மகனாகப் பிறந்தார்.

பலன்: கிருஷ்ண ஜெயந்தியன்று பிள்ளை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை இன்றும் உள்ளது.

ஜெயந்தி சபதம்:-

நாம் புண்ணியம் செய்தாலும், பாவம் செய்தாலும் அதற்குரிய நற்பலனை  அனுபவிக்க மீண்டும் பிறவி எடுக்கத்தான் வேண்டும். அதனால் தான், விவேகானந்தர் புண்ணியத்தை தங்கச்சங்கிலி என்றும், பாவத்தை இரும்புச்சங்கிலி என்றும் குறிப்பிடுவார். தங்கமோ, இரும்போ அந்தச் சங்கிலி கைக்கு இடும் விலங்கு. அது நம்முடைய சுதந்திரத்தைப் பறிக்கத் தான் செய்யும். அதிலிருந்து தப்பிக்கும் வழி ஒன்று உண்டு.

அதுதான் "ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்'' என்பதாகும். எந்தச்  செயலைச் செய்தாலும் அதன் பலனை கிருஷ்ணருக்கே சமர்ப்பணம் செய்து விட வேண்டும். இதனால் பிறவித்துன்பத்தில் இருந்து விடுபடலாம். "போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே!' என்ற சபதத்தை கிருஷ்ணஜெயந்தி நாளில்எடுத்துக் கொள்வோம்.

                                                    என்றும் அன்புடன் உங்கள்,
                    ''ஸ்ரீ வைஷ்ணவன் '' ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV


Friday, August 19, 2011

உயர்திரு ௪௨௦ அன்னாஹசாரே.

அன்னாஹசாரே
இன்றைய ஊடகங்களின் தலைப்புச் செய்தியைப் பிடித்திருப்பவர். ஒரு காந்தியவாதியின் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பது  இவரது  நடவடிக்கைக்குக் கொடுக்கப்படும்  விளம்பரம்.

இவரது போராட்டம் குறித்து பல்வேறு கருத்து நிலைகள்  எழுந்துள்ளன
அவைகளில் சில :-

ஊழலுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத நிலையில் ,ஒரு துருப்புச் சீட்டாக அவரைப் பயன்படுத்தி அரசின் அராஜகத் தன்மைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை முன்னெடுப்போம் என்கின்ற வாதப்பிரதிவாதங்களும் சமஅளவில் எழுந்தவண்ணமிருக்கின்றன.

அவர் முக்கியமல்ல அவர் முன்னெடுத்திருக்கும் போராட்டம் முக்கியமானது என்பது வரையில் எழும் கருத்துக்கள் எதுவும் நிராகரிக்கப்படக் கூடியதல்ல.

காந்திக் குல்லாயுடன் போராட வந்திருக்கும் அன்னாஹசாரே ஒரு நேர்மையான காந்தியவாதி அல்ல. இவர் ஒரு போலிக்காந்தியவாதி என்பது முதல், அவருக்குப் பின்னால் அணிதிரளும் மக்கள் ஏமாற்றப்பட்டு விடுவார்கள் என்ற எச்சசரிக்கைக் குரல்களும் உண்டு .

 அன்னா ஹசாரே யார் ?

கிஷன் பாபுராவ் ஹசாரே  இதுத்தான் அவரது முழு பெயர் . அன்னா ஹசாரே, முன்னாள் ராணுவ வீரராம். அங்கிருக்கும்போதுதான் அவர் மகாத்மா காந்திவினோபா பாவே, விவேகானந்தரையெல்லாம் படித்தாராம்! அவரது கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதை ஒழித்தாரம். தீண்டாமையை இல்லாமல் ஆக்கினாராம்பசுமைப் புரட்சி செய்தாராம். இப்படி அவரது புராணங்கள் நீள்கின்றன

இந்த தேசத்தில் மதக் கலவரங்கள் தாண்டவமாடிய போது, விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலை செய்து கொண்ட போது, நம் நாட்டில் அந்நிய நிறுவனங்கள்  நுழைந்து  நம் வளங்களைச் சுரண்டுகிற போதெல்லாம் அன்னா ஹசாரே எங்கிருந்தார் என்ற குறிப்புகளைக் காணோம். அப்போதெல்லாம் மௌனவிரதம் கடைப்பிடித்த இந்த அன்னா ஹசாரே திடுமென சிலிர்த்துக்கொண்டு ஊழலுக்கு எதிராக மட்டும் ஏன்  உண்ணாவிரதம்  இருக்க ஆரம்பித்தார்.

இவரது ராலேகாவ் சித்தி கிராமத்தை எல்லாரும் கொண்டாடுகிறார்கள் என்பது நிஜம். அந்த சிறிய கிராமத்தில் தன்னிறைவு ஏற்பட்டு உள்ளதா ? அண்ணா சாரே நிறைய பாடுபட்டிருக்கிறார் என்பது நிஜமா?ராலேகாவ் சித்தியின் இன்னொரு பக்கத்தை சில ஊடகங்கள் ஏன்  வெளியிடாமல் இருக்கின்றன?

அன்னா ஹசாரே எப்படிபட்டவர் ?

ராலேகாவ் சித்தியின் வளர்ச்சிக்கு அண்ணா சாரே ஒருவர் மட்டும் காரணமல்ல. புஷ்பா பாவே, பாபா ஆதவ், கோவிந்த்பாய் ஷ்ரோப், மோஹன் தாரியா, அவினாஷ் தர்மாதிகாரி என்று பலரும் இருந்திருக்கிறார்கள். மேலும் வளர்ச்சிக்கு நிதியளித்தவை மத்திய மாநில அரசுகள்
 
யாராவது குடித்துவிட்டு வந்தால், அவர்களை தூணில் கட்டிப்போட்டு, ராணுவ பெல்ட்டால் அடிப்பாராம் அண்ணா சாரே! "இப்படிச் சொன்னால்தான் இவர்கள் திருந்துவார்கள்," என்பது இவரது வாதம். என்று; ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகை சொல்கிறது.

இவரது கிராமத்தில் புகையிலைப் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளன; நல்லது. அத்துடன் அசைவ உணவும் தடை செய்யப்பட்டிருக்கிறது எத்தனை பேருக்குத் தெரியும்

ஆடு, மாடுகளை மேய்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்

இவ்வளவு ஏன் முட்டாள் தனமான ஒன்றும் உண்டு , ஊருக்குள் ஒருத்தரும் வீட்டில் கோடாரி வைத்திருக்கக் கூடாது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்

அட, கேபிள் டிவி தடை செய்யப்பட்டிருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

கிராமத்தில் இவரிடம் பணிபுரிபவர்களுக்கு அடிமாட்டுக்கூலி கொடுத்து வேலை வாங்குகிறார். கிராமத்து மக்கள் யாரும் இடம்பெயர்ந்து நகரத்துக்குச் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு விதித்திருக்கிறார்

தன்னிறைவு, விவசாய வளர்ச்சி என்ற கவர்ச்சியான வார்த்தைகளுக்குப் பின்னால், உலகம் தெரியாத கிணற்றுத்தவளைகளாய் தம் கிராமத்து மக்களை இவர் வைத்திருக்கிறார். அங்கிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களை மேற்படிப்புக்கே வாய்ப்பில்லாமல் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்ட வைத்திருக்கிறார்.

காங்கிரசுக்கும் ஷரத்பவாருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைப் பயன்படுத்தி, தனக்குத் தேவையான நிதியைப் பெற்றிருக்கிறார். ஷரத் பவார் ஒதுக்கியதும், சிவசேனாவுக்கு ஆதரவு; பிறகு மீண்டும் ஷரத் பவாருக்கு ஆதரவு என்று பச்சோந்தித்தனம் செய்து காரியங்களைச் சாதித்திருக்கிறார். இன்றுவரையிலும், அவரது உறவினர்கள் பல அரசியல் கட்சிகளில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?

அண்ணா சாரேயின் ஒரு தம்பிடி கூட செலவழிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஆரம்பப்பள்ளிக்கென்று வழங்கப்பட்ட நிதியை, தான் தங்கியிருக்கும் கோவிலைப் புதுப்பிக்க அண்ணா சாரேதான் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இதுவா காந்தீயவாதம்? பெல்ட்டால் அடிக்கிறவரா அஹிம்சாவாதி?

ராலேகாவ் சித்தி கிராமத்திலிருக்கும் மக்கள் இவரது பிடியிலிருந்து விடுபடத் துடிப்பதாக, பல மராட்டியப் பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்கள்; இன்னும் எழுதி வருகிறார்கள்.

மகாராஷ்டிராவில், ராஜ் தாக்கரேவின் கொள்கைகள் எனக்குப் பிடிக்கும், அவரது வழிமுறைகள் (violence) தான் எனக்கு ஒத்துவராது என தெரிவித்தார். violence இல்லையென்றால் அது காந்தீயம் போலும் அவருக்கு.

மண்ணின் மக்கள்என்ற கோஷத்தோடு தமிழ், பீகாரிஇந்தி பேசும் பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடும் அவரது எந்தக் கொள்கைகள் அன்னா ஹசாரேவுக்குப் பிடித்துத் போனது

இனத் துவேஷம், மொழித் துவேஷம் கொண்டு அரசியல் நடத்தும் ராஜ்தாக்கரேவிடம் என்ன காந்தீயத்தை  கண்டார்

பின்னாளில் நரேந்திர மோடியைப் பாராட்டி கடிதம் எழுதினார். "நரேந்திர மோடியைப் பாராட்டினால் உங்கள் போராட்டத்திற்கு எங்களது ஆதரவு இல்லை," என்று மல்லிகா சாராபாய் ஒரு கடிதம் எழுதியதும் ஆடிபோய்விட்டார்  .

மெனக்கெட்டு அஹமதாபாத் சென்று, மெனக்கெட்டு நரேந்திர மோடியின் ஆட்சியை விமர்சித்து "நான் ரொம்ப நல்லவன்," என்று எல்லாரையும் நம்ப வைக்க முயன்றவர் அல்லவா இந்த காந்தீயவாதி?

"ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும்  தூக்கில் போட வேண்டும்," இது அண்ணா சாரே என்ற காந்தீயவாதி உதிர்த்த இன்னொரு முத்து

அரசியல் காரணங்களுக்காக மட்டுமல்ல, மனிதாபிமான அடிப்படையிலே கூட தூக்குத்தண்டனை என்பதே கூடாது என்று வாதாடுகிற மனித உரிமைக் காவலர்கள் அண்ணாவின் கருத்தை ஏற்றுக்கொள்வார்களா

அருந்ததி ராய், மேதா பாட்கர், தீஸ்தா சேத்தல்வாட், மல்லிகா சாராபாய், நீதிபதி.வி.ஆர்.கிருஷ்ண ஐயர் ஒப்புக்கொள்வார்களா?

அன்னா ஹசாரே நான் காந்தீயவாதிதான். ஆனால், அப்பப்போ சத்ரபதி சிவாஜியின் கொள்கைகளையும் கடைபிடிப்பேன்," என்று இதற்கு  ஒரு விளக்கம் வேறு!

அன்னா ஹசாரேதான் ஊழல் பூனைகளுக்கு மணி கட்டப் போகிறார் என்கிறார்கள். ஆனால் அவரோ  காந்தியின் கொள்கைகளையும் கடைபிடிப்பேன் ,சிவாஜியின் கொள்கைகளையும் கடைபிடிப்பேன் என்று அவரே இப்போது மதில் மேல் பூனையாகி இருக்கிறாரே....!

இவரை எப்படி காந்தீயவாதி என்கிறார்கள்? இவரை எப்படி இந்த நாடு கொண்டாடுகிறதுமந்திரம்தான்

ஊழல் பற்றி  :- 

மத்தியில் இருக்கிற காங்கிரஸ் ஆட்சி ஊழலில் புதிய வரலாறு படைத்தது என்பது நமக்கு தெரிந்த விஷயம்.

ஊழல், இந்த தேசத்தின் பெரும் நோய். சகல இடங்களிலும், மட்டங்களிலும்  ஊடுருவி நிற்கிறது. எதைத் தொட்டாலும் அங்கு அழுகிப்போன தார்மீக நெறிகளின் நாற்றமடிக்கிறது

ஊழலுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதிலோ, அவ்வாறான போராட்டங்களை நடத்துவதிலோ தவறில்லை

ஆனால் அதனை முன்னெடுக்கும் தலைவராக அறியப்படுபவர் நியாயமானவராக இருக்க வேண்டும். அவரது செயல் சரியானதாக இருக்க வேண்டும்.

இல்லையெனில், அவர் பின்னால் திரளும் மக்கள் ஏமாற்றப்பட்டுவிடுவார்கள். போராட்டங்களுக்கான முறையான தீர்வு எட்டப்படாமல், சந்தர்பவாதச் சமரசங்களுக்குள்  முடக்கப்படுவார்கள், இதனால் மக்கள் போராட்டத்தின் மீதான நம்பிக்கை அற்றுப் போய்விடும் என்பது கவனிக்கவேண்டிய ஒரு விஷயம் .

 ஊழல் அரக்கனின் உயிரையெடுக்கும் ஆயுதமாக ஒரு சட்டம் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.ஆனால் லோக்பால் மசோதாதான் சரியானது என்பதாகச் சித்திரம் தீட்டப்படுகின்றன

சட்டங்கள் தேவையென்றாலும், அவற்றை உறுதியோடு அமல்படுத்துகிற அரசு வேண்டும். அது எப்போது சாத்தியம் ?

 மசோதா வரைவு  குழுவில் யார் யார் ?
 
இந்த மசோதா  நிறைவேற்றப்பட்டால்ஊழலையே தோலாகவும், ஆடையாகவும் கொண்டிருக்கிற காங்கிரஸ் ஆட்சியாளகளை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தவும் கூடும். ஆனால், மசோதாவை வரைவு செய்கிற குழுவில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?

சமூக ஆர்வலர்கள் ஐவரோடு, தன் தொகுதியில்  ஊழல் செய்து வெற்றி பெற்ற மத்திய அமைச்சர் .சிதம்பரம், ஊழல் பேர்வழி பி.ஜே.தாமஸை முன்மொழிந்த வீரப்ப மொய்லி, ஸ்பெக்ட்ரமில் ஊழலே நடக்கவில்லை என்று சத்தியம் செய்த கபில் சிபல் என்று அணி திரண்டு நிற்கிறார்கள் 

 இன்னொரு புறம். "இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்" நிதியிலிருந்து பணம் கையாடல் செய்ததாக பி.பி.சாவந்த் கமிட்டியால் குற்றம் சாட்டப்பட்ட அண்ணா சாரே.

அண்ணா சாரேவும் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்  என்று  மணீஷ் திவாரி குறிப்பிட்டதும்சாரேவுக்கு வந்ததே கோபம் உடனே .

"எனது பெயரை நீக்கும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்," என்று தன் சுயலாபதிற்க்காக போராட்டம் அறிவித்து இருக்கிறார் .

அடுத்த சில நிமிடங்களில் எல்லா தொலைக்காட்சிகளுக்கும் பேட்டியளித்த நீதிபதி.பி.பி.சாவந்த், "ஆமாம், அண்ணா சாரே ஊழல் செய்ததை நான் குறிப்பிட்டிருக்கிறேன்.(I have indicted Anna Hazare for corruption) என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னதும்சாரேவின் வாய் மௌனித்து போனது ஏன் ?

பி.பி.சாவந்த் அறிக்கை 2003-ல் சமர்ப்பிக்கப்பட்டது. எட்டு வருடமாக அதுபற்றி வாயே திறக்காமல் மவுனம் சாதித்த அண்ணா சாரேவுக்கு இப்போது ஏன் கோபம்?

இவர்கள்தாம் இந்தச் சட்டத்தை  அமல்படுத்தப் போகிறவர்கள் ரொம்ப நல்லவங்க ?

பி.பி.சாவந்த் அறிக்கையினால் பதவியிழந்த முன்னாள் மகாராஷ்டிர அமைச்சர் சுரேஷ் ஜெயின், அண்ணா சாரே மீது தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் அண்ணாவுக்கு எதிராகத் தீர்ப்பு அமைந்தது

 "சுரேஷ் ஜெயின் போன்ற வசதிபடைத்தவர்களால் நீதிபதிகளை விலைக்கு வாங்கி சாதகமான தீர்ப்புக்களைப் பெற முடியும்," என்று அப்போது அண்ணா தெரிவித்த கருத்துக்களால், அவர்மீது வழக்கு தொடரப்பட்டு மிக அண்மையில்தான் அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியிருக்கிறார். (ஜூலை 2011 -ல் இன்னொரு வழக்கை சமரசமாகப் பேசி, திரும்பப் பெற வைத்திருக்கிறார் )

சுரேஷ் ஜெயின் தொடுத்த மானநஷ்ட வழக்கில் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை பெற்று, சிவசேனாவின்  மனோகர் ஜோஷியின் தலையிட்டால் ஒரே நாளில் விடுதலையானவர் அல்லவா காந்தீயவாதி அண்ணா சாரே?

இவர்களுக்கு அரசியல் சட்டத்தைப் பற்றிப் பேச என்ன யோக்யதை இருக்கிறது? அதை மதிப்பவர்களாயிருந்தால் இப்போது இவர்கள் செய்து கொண்டிருப்பது என்ன? அரசியல் சட்டத்தை மதிக்காதவர்களுக்கும், பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏளனம் செய்பவர்களுக்கும் உரிமை கேட்க என்ன தகுதி இருக்கிறது?

அரசு லோக்பால் - ஜன் லோக்பால் என்றால் என்ன

அன்னா ஹசாரேவிற்க்கு அரசியல் சட்டம், அரசு லோக்பால் பாராளுமன்றம் மீதெல்லாம் நம்பிக்கையில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும்

 இவர் சொல்லும் ஜன்லோக்பால் சட்டம் வந்து விட்டால் எல்லாம் மீண்டும் புனிதமாகி விடுமா?

இவையிரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களைப் பற்றிப் பலர் எழுதி விட்டனர். இரண்டில் எது வந்தாலும் அது ஊழலை முற்றிலும் ஒழித்து விடாது என்பது ஒரு புறம் இருக்கட்டும்

அரசின் லோக்பால் மசோதா மிகவும் பலவீனமானது என்பதில் துளியும் சந்தேகமில்லை
 
ஆனால்

ஹசாரேவின் வரைவு மிக உன்னதமா? அதன் அடிப்படை என்ன...?

"ஊழல் என்றால் என்ன?" என்று பிரிவு 2(4) -ல் கீழ்க்கண்டவாறு விளக்கியிருக்கிறார்கள்.
"to include anything made punishable under Chapter IX of the Indian Penal Code or under the Prevention of Corruption Act (PCA), 1988."
ஆக, இதன் அடிப்படை ஏற்கனவே உள்ள சட்டங்கள் தான் என்பது புரிந்திருக்கும்

 ஆகவே, அந்த சட்டங்களில் இருக்கிற அனைத்து குறைபாடுகளும் அண்ணா  ஹசாரேயின் ஜன் லோக்பாலுக்கும் இயல்பாகவே பொருந்தும் என்பதுதானே உண்மை...? ’

இருக்கிற சட்டங்கள் போதாது; புதிதாய்ச் சட்டம் கொண்டு வருகிறோம்," என்று புறப்பட்டவர்களே, இது யாரை ஏமாற்றுகிற வேலை?

Prevention of Corruption Act (PCA) என்ற ஊழல் ஒழிப்புச் சட்டம் எல்லாக் குடிமகன்களுக்கும் பொருந்தாது. அது மக்கள் சேவகர்கள் (Public Servants) என்ற ஒரு பிரிவை மட்டுமே கருத்தில்கொண்டு இயற்றப்பட்ட சட்டம். அத்துடன், ஜன் லோக்பால் வரைவில் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 410 முதல் 424 வரையிலான சட்டப்பிரிவுகள் விலக்கப்பட்டுள்ளன. பொது சேவகரோ அல்லது தனியாரோ மோசடி அல்லது ஏமாற்று போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் தண்டிப்பதற்குரிய பிரிவுகள் அவை

அவற்றை ஜன் லோக்பால் மசோதாவிலிருந்து விலக்கியதால் என்ன விளைவு ஏற்படும்?

ராமலிங்க ராஜு போன்ற பணமுதலைகளயோ, ஹர்ஷத் மேத்தா, கேதன் தேசாய், தெல்கி போன்றவர்களையோ அண்ணாவின் ஜன் லோக்பால் சட்டத்தால் தண்டிக்க முடியாது. இவ்வளவு ஏன், .ராசா, சுரேஷ் கல்மாடி போன்றவர்கள் மீது கூட "மோசடி" என்ற குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது.

ஏன்? ஏன்?? ஏன்???
 
சரி, அரசு லோக்பால் சட்ட வரைவில், அரசல்லாத நிறுவனங்கள் (Non Government Organisations) மீதும் நடவடிக்கை எடுக்க வழிவகைகள் உள்ளன

ஆனால்

அவற்றை அண்ணா சாரேயின் ஜன் லோக்பால் குழு வன்மையாக எதிர்த்தது. ஏன்? தன்னார்வத்தொண்டு நிறுவனங்களில் ஊழல் நடப்பதில்லையா? அண்ணாவின்இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்டிலேயே நடந்தது என்பது தானே பி.பி.சாவந்த் அறிக்கையின் சாரம்?

மும்பையில் அமைந்துள்ள லீலாவதி ஹாஸ்பிடல் மிகவும் பழமையானது மட்டுமல்ல; பிரம்மாண்டமானது கூட! இது ஒரு சேவை நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மிக அண்மையில் இந்த டிரஸ்டில் ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கில் அந்நியச்செலாவணி மோசடி நடந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு எல்லா ஊடகங்களிலும் செய்திகள் வந்தனவே?

தன்னார்வத்தொண்டு நிறுவனங்களில் பல என்ன செய்கின்றன? மக்கள் சேவை என்று சொல்லிக்கொண்டு அரசுகளிடமிருந்து நிதி வசூலிக்கின்றன; வெளிநாடுகளிலிருந்து நன்கொடை மற்றும் நிதியுதவி பெறுகின்றன. "நான் தான் தலைவர், நீ செயலாளர், நீ பொருளாளர்," என்று சுயேச்சையாக (adhoc) நிர்வாகத்தை உருவாக்கி, வருகிற நிதிகளை மனம்போலச் செலவழிக்கின்றனர்

விரல்விட்டு எண்ணக்கூடியவை தவிர மீதமிருப்பவை மிக மோசமான நிர்வாகம், பணமோசடி என்ற அளவிலே தான் இருக்கின்றன.
இவற்றை லோக்பாலின் கீழ் கொண்டு வர வேண்டாம் என்று அண்ணா சொல்வது ஏன்?

தொண்டு நிறுவனங்களை விடுங்கள்; அவை நடத்தப்படுகிற லட்சணம் எல்லாருக்கும் தெரியும். ஜாதி, பதவி, சமூக அந்தஸ்து, பணவசதி போன்ற அடிப்படையில் இயங்கும் பெரும்பாலான தொண்டு நிறுவனங்கள், அடிக்கடி செய்தித்தாள்களில் புகைப்படம் போட்டு, பேனர் தூக்கியது தவிர என்ன கிழித்திருக்கிறார்கள்?


 ஹசாரே முன்னிறுத்தும் வடிவம், அரசு முன்னிறுத்தும் வடிவம் இரண்டில் எது சட்ட வடிவமானாலும் உயர் நீதி மன்றத்தில் ஓர் எளிய ரிட் மனு மூலம் அது பொடிப் பொடியாகும் சாத்தியம் அதிகம். அதிலும் ஹசாரே முன்னிறுத்தும் வடிவம் சொல்லவே வேண்டாம் .

ஹசாரேயின் உண்ணாவிரதம் ஏன் என்ன பயன் ?

அண்ணா  ஹசாரே, தனது உண்ணாவிரதத்தால் சமூகத்தையே இரு கூறாகப் பிளந்திருக்கிறார். இவருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களில் பெரும்பாலானோர் அரசியல் சட்டம், பாராளுமன்றம், ஜனநாயகம் எல்லாவற்றையும் உதவாக்கரைகள் என்று விரக்தியோடு சொல்லுமளவுக்கு நாட்டில் ஒரு எதிர்மறையான மனப்போக்கை உருவாக்கியிருக்கிறார்.

இயலாமையில் உழன்று கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கமும், மெத்தப்படித்த புத்திசாலிகளின் கூட்டமும் ஊழலுக்கு எதிரான தங்களது கண்டனங்களைத் தெரிவிக்க அண்ணா  ஹசாரே  போராட்டத்திற்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள்; இவராவது வந்தாரே என்ற பெருமூச்சுடன்

ஆனால் ஹசாரேவின் போராட்டம் போகிற திசையைப் பார்த்தாவது, இது சத்யாகிரஹம் இல்லை; வேறு என்னவோ திட்டமிருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டாமா?

 ஒன்றை கவனிக்க வேண்டும்! காவல்துறை விதித்த 22 நிபந்தனைகளில், வெறும் 6 தான்  ஹசாரேவின் கோஷ்டியால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் மிக முக்கியமானதாக இவர்கள் சொன்னதென்ன?

"5000 பேர்கள் என்ற கட்டுப்பாடெல்லாம் கூடாது: மூன்று நாட்கள் தான் என்பதையும் ஒப்புக்கொள்ள முடியாது," என்றுதான்  பேட்டிகளில் கிரண்பேடி மாய்ந்து மாய்ந்து சொல்லிக்கொண்டிருந்தார்.

"தேவைப்பட்டால் உச்சநீதி மன்றத்தை அணுகுவோம்," என்று அர்விந்த் கேஜ்ரிவால் மார்தட்டினார். ஆனால்திடீரென்று அடுத்த திருப்பம். புதிதாக நான்கு நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள்

காரணம், அதிகபட்சம் 5000 பேர்கள், மூன்று நாட்கள் என்பதெல்லாம் தில்லி உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதி மன்றம் இதற்கு முன்னர் தெரிவித்திருந்த வரைமுறைகளுக்கு (guidelines) ஏற்ப விதிக்கப்பட்டிருப்பதாக தில்லி காவல்துறை தெரிவித்திருக்கிறார்கள்

முன்னாள் சட்ட அமைச்சரான சாந்திபூஷணும், முன்னணி வழக்குரைஞரான பிரசாந்த்பூஷணும் உடனிருக்கும்போதே இப்படியொரு சொதப்பல்! இதுதான் அண்ணா  ஹசாரே குழுவிலிருக்கிற மெத்தப்படித்தவர்களின் லட்சணம்!

ஆக, மொத்தம் 22-ல் 6 நிபந்தனைகளை, "அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது(unconstituitional)" என்று  ஹசாரேவின் குழு தெரிவித்திருக்கிறது. இது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படுமா இல்லையா என்று சட்டநிபுணர்கள்தான் சொல்ல முடியும்

அப்படியே இருந்தாலும், அதுகுறித்து  ஹசாரே கவலைப்படப் போவதில்லை. காரணம், ஏற்கனவே அவர்மீது ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் இருக்கிறது.

ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை. ஆனால், அதை


 ஹசாரே ஒருவரால் தான் முடியும் என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை!

வாசிக்கிறவர்கள் என்ன நினைக்கிறார்கள்  அவரை  ஆதரிப்பதை  நிறுத்துவிட்டு யோசிப்பவர்கள் எத்தனை பேர், நான் சொன்னதை சரியாக புரிந்துகொள்ளது என்னை திட்டப்போகிறவர்கள் எத்தனை பேர் என்பது  பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை.

ஏன் என்றால் இதை ஏற்ப்பதும் ,மறுப்பதும் அவரவர் விருப்பம் .என்னை பொறுத்தவரை  ஊழலுக்கு ஏதிரான  இந்த போராட்டம் தவறில்லை அதை வழிநடத்தும் நபர் சரியில்லை என்பது மட்டுமே , தவறான நபரை ஆதரித்தது  நம் மக்கள் என்ற தீராத பழிக்கு ஆளாக வேண்டாம் என்பதே என் ஆதங்கம் .

எனது ஐயம் :-
மணிப்பூரில் பத்து வருடங்களுக்கு மேலாக மேற்கொண்ட மனிதாபிமான கோரிக்கை கொண்ட உண்ணாவிரதம் இருக்கும் ஐரோம் சர்மிளா சானுவுக்கு ஏன் ஊடகங்களில் இந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை?

மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்து நிற்கும் மருத்துவர் பினாயக் சென் சத்தீஸ்கர் அரசால் சிறையில் அடைக்கப்பட்டாரே, இந்திய நடுத்தர வர்க்கம் அப்போது  ஏன் கிளர்ந்து எழவில்லை

அரசாங்கமும் , அரசியல் கட்சிகளை சார்ந்து இருக்கும் பரபரப்பு ஊடகங்களும்  அன்னா ஹசாரேயை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால், அந்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தால் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்ற முடிவுக்கே வர நேர்கிறது .இது ஒரு நூறு சதவிகிதம் அரசியல் நாடகம்.! என்பதை மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது.

 ஊழலுக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. கொடுக்கல்-வாங்கல்! முதலில் நம் கொடுப்பதை நிறுத்துவோம் என்று உறுதி மேற்கொண்டாலொழிய, ஊழல் ஒழியவே ஒழியாது - எத்தனை ஆயிரம் லோக்பால் சட்டங்கள் வந்தாலும் சரி!

                                              அன்புடன் உங்கள் ,
                                  ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV