Friday, August 12, 2011

வரலட்சுமி விரதம்




சிரவண மாதம் எனப்படும் ஆடி அல்லது ஆவணி மாதத்தில், பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சுமங்கலிகள் அனுஷ் டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது. இதைச் செய்வதன் மூலம் சுமங்கலித்துவம் வளரும்; குடும்ப நலன் பெருகும்.

கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் சிறப் பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர்.

மகாலட்சுமி துளசியிலும் வாசம் செய்பவள் ,அதனால் தான் நம் முன்னோர்கள் வீட்டில் துளசிமாடம் அமைத்து பெண்களை வழிபட செய்வித்தனர் .

மகாலட்சுமி, பாற்கடலில் அவதரித்தவள். மகாவிஷ்ணுவை மணந்தாள். விஷ்ணு பூமியில் அவதாரம் செய்த நாட்களில் சீதாவாகவும், ஆண்டாளாகவும். இன்னும் பல வடிவங்கள் எடுத்து வந்தவள். பூலோகத்திலும், அவள் மகாவிஷ்ணுவை கரம்ப்பிடித்தாள்.

நித்தியசுமங்கலியான மகாலட்சுமி பொறுமையே வடிவானவள். காக்கும் கடவுளாகிய தன் கணவர் விஷ்ணுவின் இதயத்தில் குடியிருக்கும் இவள், பெண்களை துன்பங்களில் இருந்து காப்பவளாக திகழ்கிறாள். மஞ்சள் நிற பட்டு அணிந்திருக்கும் இவள் கருணை, அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியாவாள்.

அதர்வண வேதத்தில் லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று கூறப்பட்டுள்ளது. பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதால், அஷ்ட லட்சுமிகளும் மகிழ்வதாக ஐதீகம்.

பூஜை முறைகள் :

திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம்.

பெண்கள் தான் மணம்முடிந்த வீட்டில் வரலட்சுமி விரத பூஜையை எடுத்துக் கொள்ளும் போது, அவர்களது பிறந்த வீட்டினர் சீர்வரிசைகளைச் செய்வார்கள்.

விரதம் மேற்கொள்ளும் வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு முன் - ராகு காலத்துக்கு முன் (சிலர் மாலை வேளையிலும் செய்வர்) வரலட்சுமி விரதம் இருப்பவர்கள் வீட்டின் தென்கிழக்கு மூலையில் சிறு மண்டபம் அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்விடத்தில் ஒரு பலகையை வைத்து அதில் சந்தனத்தில் செய்த லட்சுமியின் வடிவத்தை வைக்கவேண்டும். வெள்ளி சிலைகளும் வைக்கலாம். சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவித்து, தாழம்பூவால் அலங்காரம் செய்யவேண்டும்.

லட்சுமியின் வடிவத்தின் எதிரில் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். புனித நீர் நிரம்பிய வெள்ளி அல்லது தாமிரக் கும்பத்தை அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். அதனுள் சிறிது அரிசி, காசு, மஞ்சள், குங்குமம் போட்டு மாலைகளை கும்பத்தின் வாயில் வைத்து, அதன் மீது தேங்காயை வைத்து, கும்பத்தின் நான்கு புறங்களிலும் குங்குமப் பொட்டு வைத்து, வரலஷ்மி முகத்தை அமைக்கவேண்டும்.அதன் மேல் பட்டுத் துணியை வைத்து அலங்கரிக்கவேண்டும் .

தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பழங்கள், தங்கநகை , பூக்கட்டிய மெல்லிய மஞ்சள் கயிறு ஆகியவற்றையும் இலையில் படைக்க வேண்டும்.

அதன் பிறகு வீட்டின் வாசற்பக்க சுவரில் சிறிய கோலம் போட்டு, அலங்கரித்த கும்பத்தை அங்கே வைத்து விடவேண்டும்.

பூஜை செய்பவர்கள் கும்பத்தை மெல்ல எடுத்துக் கொண்டு ''லஷ்மி ராவே மாயிண்டிக்கு'' (''லஷ்மியே என் வீட்டிற்கு வாம்மா'') என்று பாடி அழைத்து, மண்டபத்துக்குள் வைத்து, அதன் பின் பூஜிக்கவேண்டும். லஷ்மி தேவியை வாசலிலிருந்து வீட்டுக்குள் அழைப்பதாக இதற்கு ஐதீகம்.

பூஜையைத் துவக்குவதற்கு முன், முதலில் விநாயகர் பூஜை செய்ய வேண்டும்.

லட்சுமியை பூஜிக்கும் போது அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிப்பது நல்லது. இதனால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும்.
மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்வது நல்லது .

சாஸ்திரோக்தமாக விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூஜை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோ த்ரம், தோரக்ரந்தி பூஜை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும்.

அஷ்டலட்சுமிகளுக்கு விருப்பமான அருகம்புல்லை சிலை மீது தூவி பூஜிப்பது நல்லது.

நிவேதனப் பொருள்கள்:
பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு.
நைவேத்யம் செய்ய வேண்டும்.

பழ வகைகள்: 
ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை.


பூஜை முடிந்து  தீபாராதனை செய்த பின்,  பூக்கட்டி வைத்த மெல்லிய மஞ்சள் கயிறை எடுத்து கணவரோ, வீட்டில் உள்ள பெரியவர்களோ பெண்கள் கையில் கட்டி விடுவார்கள்.

ஏழை சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் கயிறை வலது கையில் கட்டி, தேங்காய், குங்குமம், புதிய ஆடைகள் கொடுக்க வேண்டும்.

பூஜைக்கு பிறகு, கும்பத்திலுள்ள புனிதநீரை செடி அல்லது மரங்களுக்கு ஊற்றிவிட்டு, கும்பத்தை ஒரு பெட்டியில் வைத்து பத்திரப் படுத்தி  சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும்.வேறு பூஜைகளுக்கு இதைப் பயன்படுத்தும் போது மட்டுமே எடுக்க வேண்டும். அது நெளிந்து விட்டாலோ, பிற பழுது ஏற்பட்டாலோ யாருக்காவது தானமாகக் கொடுத்து விட வேண்டும். சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடாது.

பலன்கள் :

வரலட்சுமி விரதத்தன்று, புண்ணய நதிகளில் நீராடுவது, ஒரு வருடம் தொடர்ந்து வரலட்சுமி விரதம் இருப்பதற்கு ஒப்பான பலன்களைத் தரும். கங்கை, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய நதிகளில் அன்று நீராடினால் செல்வச்செழிப்பு உண்டாகும் என்பது நம்பிக்கை.

வரலட்சுமி விரதம் இருப்பதால் திருமணதோஷம் உள்ள கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.

சுமங்கலி பெண்களுக்கு  மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.செல்வம், தான்யம், தைரியம், வெற்றி, வீரம், புத்திர பாக்கியம், அவர்களின் புத்திரர்களுக்கு கல்வி செல்வங்கள் போன்ற அனைத்தும் கிடைக்கும்.

குடும்ப விவகாரத்தில் மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு வரலட்சுமி விரதம் அனுஷ்டிப்பது மனபாரத்தை குறைக்கும் மருந்தாக இருக்கும்.

புகுந்த வீட்டு உறவினர்களை மதித்து நடக்கும் பெண்கள், வரலட்சுமி விரதம் இருந்த பலன்களை பெறுவதாக ஐதீகம்.

உங்கள் வீடு , மங்களகரமாக மாறட்டும் . உங்கள் கடன் முற்றிலும் தீரட்டும் . வெகு வேகமாக பொன்னும், பொருளும் குவியட்டும் .


                  வாழ்த்துக்கள் !  அனைவரும் பலன் பெருக !

                                              அன்புடன் உங்கள்,
            ''ஸ்ரீ வைஷ்ணவன்'' ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா.SRV

1 comment:

  1. மிகவும் அருமையான கட்டுரை மற்றும் விளக்கங்கள்...நீங்கள் "என் கடன் பணி செய்து கிடப்பதே என்று"...அரிய தகவல்களைத் திரட்டி...மிகுந்த ஆர்வத்துடன், எழுதி வருகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி இளைய சகோ...:-)rs

    ReplyDelete