Thursday, August 4, 2011

வைணவர்களுக்கு மிக முக்கியமான பாசுரம் எது ?

வைணவர்களுக்கு மிக முக்கியமான பாசுரம் எது ? அதைமட்டும் தெரிந்து கொண்டால் திவ்யப்ரபந்தத்தையே தெரிந்துகொண்டமாதிரி. அப்படி ஒரு பாசுரம் இருக்கிறதா என்று இந்த அவசர உலகத்தில் கேள்விகள் கேட்கிறவர்களுக்கெல்லாம் திருமங்கையாழ்வாரின் இந்தப் பாசுரத்தைப் பாடினால் நன்மை ! ‘இந்தப் பாசுரம் ஒன்றே போதும். திவ்யப் பிரபந்தத்தின் சாரம், திருமந்த்ரார்த்தம் இதுதான்’ என்பார்கள். இறக்கும் தருவாயில் இந்த ஒரு பாசுரத்தை காதில் சொன்னால் போதும் என்று கூடச் சொல்வார்கள்.


திருமங்கை ஆழ்வார் திவ்யப் பிரபந்தத்தில் அதிகம் எண்ணிக்கையுள்ள பாடல்களைப் பாடினவர். அதிகம் வைணவத் தலங்களுக்குச் சென்று தரிசித்தவர். வடநாட்டில் தேவப் பிரயாகை, நைமி சாரண்யம் பத்ரிகாசிரமத்திலிருந்து துவங்கி தென்னாட்டில் அத்தனைக் கோயில்களையும் தரிசித்துப் பாடியுள்ளார். அவர் பாடாத வைணவக் கோயில் இருந்தால் அது சமீபத்தியதாக இருக்கும்.

குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்
அருளோடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணன் என்னும் நாமமே.


நாராயணன் என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. எளிமையானது — கடலில் சயனித்திருப்பவன்.

நாரா — உலகத்தின் அத்தனை சேதன அசேதனப் பொருள்களையும் தன்னையும் சேர்த்து அயனன் இருப்பிடமானவன் திருமால் என்பதே இதன் ஆழமான பொருள்.

அந்தச் சொல்லை கைகண்டு கொண்டுவிட்டால் போதும். நமக்கு நல்ல குலம் அமையும்; செல்வம் பெருகும். அடியவர்களுக்கு ஏற்படும் துயரங்கள் எல்லாம் மட்டமாகும் (நிலந்தரம்) பரமபதத்தைக் காட்டும். பெற்ற தாயை விட அதிகமாகச் செய்யும். நாராயணன் என்ற ஒரே சொல்லை மட்டும் கண்டு கொண்டால் போதும். இதெல்லாம் உத்தரவாதம் என்கிறார்.

No comments:

Post a Comment