Wednesday, October 17, 2012

கவியரசு கண்ணதாசன்



(ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981)

  ''நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை.
நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.

முதற்கட்டம் வரவு என்றால்,
அடுத்தக் கட்டம் செலவு.

முதற்கட்டம் இன்பமென்றால்,
அடுத்தக்கட்டம் துன்பம்.

முதற்கட்டமே துன்பமென்றால்,
அடுத்த கட்டம் இன்பம் .

இறைவனது தராசில் இரண்டு தட்டுக்களும் ஏறி ஏறி இறங்குகின்றன.


“இடுக்கண் வருங்கால் நகுக; அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்”

என்றான் வள்ளுவன்.

நீ நினைப்பது எல்லாமே நடந்துவிட்டால்,
தெய்வத்தை நம்ப வேண்டாம்.

எப்போது நீ போடும் திட்டம் தோல்வியுறுகிறதோ
அப்போது உனக்கு மேலானவன் அதை நடத்துகிறன் என்று பொருள்.

எப்போது உன் திட்டங்கள் வெற்றி பெறுகின்றனவோ,
அப்போது இறைவன் உனக்கும் அனுமதியளித்து விட்டான் என்று பொருள்.''

                                                                 
 :- கவிஞர் கண்ணதாசன்
(அர்த்தமுள்ள இந்துமதம் - என் மனம் தெளிவடைந்தது கவிஞரின் இவ்வரிகளில்த்தான். )

 

    
கண்ணதாசன் பற்றிய சில குறிப்புகள் :-

கண்ணதாசன் பெற்றோர் வைத்த பெயர் முத்தையா 

சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன்

முதல் மனைவி பெயர் பொன்னம்மா,அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள். 50-வது வயதில் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் விசாலி. மொத்தம்
15 பிள்ளைகள்!

ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால், சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்தில்;
 பராசக்தி,
ரத்தத்திலகம்,
கறுப்புப்பணம்,
சூரியகாந்தி .  உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.

கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம், நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்ததுதான் என்பார்.

வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதைவரிகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்!

கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று `கன்னியின் காதலியில்’ எழுதியது முதல் பாட்டு. 

மூன்றாம் பிறையில் வந்த, `கண்ணே கலைமானே’ கவிஞரின் கடைசிப் பாட்டு.

முத்தான முத்தல்லவோ’ பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார். 

அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது. `நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை!

சமஸ்கிருத மொழியில் வரும் விவாமந்திரத்தில் ‘நான் மனமாக இருந்து நினைப்பேன்… நீ வாக்காக இருந்து பேசு’ என்று ஒரு வரி வரும். அதையே கருவாக கொண்டு 
“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்” என்று பாடல்வரிகளாக கண்ணதாசன் எழுதியபோது பெரும்பாலான சமஸ்கிருத மொழி தெரியாத மக்களை சென்று அடைந்தது.

கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல், `திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா,’ தனக்குப்பிடித்த பாடல்களாக, `என்னடா பொல்லாத வாழ்க்கை,’’ `சம்சாரம் என்பது வீணை’’ ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.

காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர்,கருணாநிதி ஆகிய நான்கு பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும், திட்டியவரும் இவரே!

தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர்,`வனவாசம்,மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள்’ என்றார்.

பிர்லாவைப்போலச் சம்பாதித்து ஊதாரியைப்போலச் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது’ என்பது அவர் அளித்த வாக்குமூலம்.

உங்கள் புத்தங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன? என்று கண்ணதாசனிடம் கேட்டபோது, அவர் சொன்ன பதில்... புத்தங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!

தொட்டிலுக்கு அன்னை, கட்டிலுக்குக் கன்னி, பட்டினிக்குத் தீனி, கெட்டபின்பு ஞானி – என்ற வரிகளை கேட்கையில் கண்ணதாசனின் அனுபவப் பாடம்தான் நமக்கு நினைவில் வரும். கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்று சொல்வதைப்போல, கெட்ட பின்புதான் கண்ணதாசனுக்கு ஞானமே பிறந்தது. அனுபவப் பள்ளி அவருக்கு பயிற்றுவித்த பாட ம(மா)து.

ஒருவன் எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்.
ஆகவே இப்படித்தான் வாழ வேண்டுமென்று சொல்கிற யோக்கியதை எனக்குத்தான் இருக்கிறது” என்று உரைத்தவர் அவர்.

  கண்ணதாசன் இறந்துவிட்டார் என்று அவரே பலருக்கும் போன் செய்து வதந்தியைக் கிளப்பி, வீடு தேடிப் பலரும் அழுது கூடிவிட, பிறகு இவரே முன்னால் தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது . அவர் இறப்பதற்க்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிவைத்துக்கொண்டார்.

கண்ணதாசன் அவர்கள் படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர்.

He came. He saw, He conquer and He has gone” என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
“அவன் வந்தான், வென்றான், சென்றான்” என்று.

தமிழில் நாம் சொல்லுவோம் 
வந்தார், வென்றார், நின்றார்என்று
ஆம் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
நம் நெஞ்சில் நின்ற வண்ணம்தானிருப்பார்.

''அவர்  நிரந்தரமானவர் அவருக்கு அழிவில்லை''


கண்ணதாசனே ! – என்
அன்பு நேசனே !

நீ தாடியில்லாத தாகூர் !
மீசையில்லாத பாரதி !


சிறுகூடற் பட்டியில்
சிற்றோடையாய் ஊற்றெடுத்து
சிக்காகோ நகரில்
சங்கமித்த ஜீவ நதியே !


உனக்கு
மூன்று தாரமிருப்பினும் – உன்
மூலா தாரம் முத்தமிழே !


திரைப் பாடல்கள்
உன்னால் -
திவ்வியப் பிரபந்தங்களாயின !


படக் கொட்டகைகள்
உன்னால்
பாடல் பெற்ற ஸ்தலங்களாயின !

நீ  ஆண் வேடத்தில்
அவதரித்த சரஸ்வதி !


கண்ணனின் கைநழுவி 
மண்ணில் விழுந்த
புல்லாங்குழல் !

அயல் நாட்டில்
உயிர் நீத்த
தமிழ்நாட்டுக் குயிலே !


பதினெட்டுச்
சித்தர்களுக்கும் 
நீ ஒருவனே
உடம்பாக இருந்தாய் !

நீ பட்டணத்தில் வாழ்ந்த
பட்டினத்தார் !

கோடம்பாக்கத்தில்
கோலோச்சிக் கொண்டிருந்த
குணங்குடி மஸ்தானே !

நீ தந்தையாக இருந்தும் 
தாய் போல்
தாலாட்டுக்களைப் பாடியவன் !

இசைத் தட்டுகளில் மட்டுமல்ல -
எங்கள் நாக்குகளிலும்
உன் படப் பாடல்கள்
பதிவாகி யிருக்கின்றன !

உன் மரணத்தால்
ஓர் உண்மை புலனாகிறது..

எழுதப் படிக்கத் தெரியாத
எத்துணையோ பேர்களில் -
எமனும் ஒருவன்.

அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !

(கண்ணதாசன் மறைந்தபோது கவிஞர் வாலி எழுதிய இரங்கல் கவிதை)


கண்ணதாசனே இந்நாளில் மட்டும் இல்லை உமது நினைவு என் வாழ்நாள் முழுவதும்.


                                                              என்றும்  அன்புடன்.,
                                                             ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா.SRV

No comments:

Post a Comment