Saturday, July 30, 2011

மாவீரன் தீரன் சின்னமலை மற்றும் சாகித் உத்தம் சிங்


                                        ( ஏப்ரல் 17 , 1756 - ஜூலை 31 ,1805 ) 

 மாவீரன் தீரன் சின்னமலை இந்திய  விடுதலைப் போராட்ட மாவீரர் ஆவார்.கொங்கு நாட்டின் முதல் விடுதலைப் போராட்ட மாவீரர்.

இன்றைய ஈரோடு மாவட்டம் காங்கேயம்அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர். அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர், தாயார் பெயர் பெரியாத்தா.

இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது. இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார். இவர்கள் புவிக்கும் செவிக்கும் புலவோர்கள் சொல்லும் கவிக்கும் இனிமை செய்ததால் சர்க்கரை என பெயர் பெற்றார்.

தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம் ,தடிவரிசை ,வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம்  போன்ற போர்ப் பயிற்சியை  கற்றுத் தேர்ந்தார்.கொங்குநாடு  அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது.

ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகளுக்கு  விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் பெற்றார் .

இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனி  கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளாவிலும்  கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார்.

டிசம்பர் 7 1782 - இல் ஐதரலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார்.

மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தைஉண்டாக்கியது.

நெப்போலியனிடம்   படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காம் மைசூர்ப் போரில் மே 4, 1799-இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆனதிப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார்.

ஏப்ரல் 18, 1792-இல் தான் வாங்கிய சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும்   தயாரிக்கப்பட்டன. தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார்.

போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாட்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800   அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.

இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன. சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது. அவர் கூட்டமைப்பில்வேளாளர், நாயக்கர், தேவர்,, வேட்டுவர்,வன்னியர், நாடார், தாழ்த்த பட்டோர் மற்றும் இஸ்லாமியர்  பலர் இருந்தனர். ஓமலூர் சேமலைப் படையாச்சி, கருப்பசேர்வை, ஃபத்தே முகம்மது உசேன், முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர். எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர். 

வெற்றி

1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். ஓடாநிலைப் போரில் ஆங்கிலத் தளபதி கர்னல் மேக்ஸ்வெல் தலையைக் கொய்து மொட்டையடித்துச் செம்புள்ளி கரும்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டது குறிப்பிடத்தக்கது. சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.
தூக்கிலிடப்படல் 


போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31,1805   அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப சேர்வையும் உடன் வீரமரணம் எய்தினர்.

சின்னமலை நினைத்திருந்தால் கொங்குநாட்டு நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வரிவசூலில் பத்தில் மூன்று பங்கு பெற்றுத் தொடர்ந்து ஆட்சி செலுத்தி சுதேச சமஸ்தானம்போல 1947 வரை விளங்கியிருக்கலாம். ஆங்கிலேயரும் அவ்வாறே வேண்டிக்கொண்டனர். ஆனால் மாவீரன் சின்னமலை அதை மறுத்து வீரமரணம் அடைந்தார். மாவீரன் சின்னமலை ஆங்கில வெள்ளத்தைத் தடுக்கும் பெருமலையாக விளங்கினார்.

கௌரவிப்பு

முன்பு தீரன் சின்னமலை நினைவாக திருச்சிராப்பள்ளியை  தலைமையிடமாக கொண்டு போக்குவரத்துக் கழகமும், கரூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமும் இருந்தது. தீரன் சின்னமலைக்குத் தமிழக அரசு சென்னையில் உருவச்சிலை ஒன்றை அமைத்ததுள்ளது. தமிழக அரசின் சார்பில் ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தீரன் சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.ஏப்ரல் 17  அன்று அவர் பிறந்த நாளிலும், அவர் மறைந்த ஆடிப் பதினெட்டு நாளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொங்கு மக்கள் தங்கள் நன்றியைச் செலுத்துகின்றனர்.


 இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 31 ஜூலை 2005 அன்று தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.

                                                  சாகித் உத்தம் சிங்



சாகித் உத்தம் சிங்  இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் மறைக்கப்பட்ட இன்னுமொரு தியாகி என்றே சொல்லலாம்.

உத்தம் சிங் 1899ல் பஞ்சாப்பில் உள்ள ஒரு சுனம் எனும் கிராமத்தில் தலால் சிங்க்குக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். தலால் இரயில்வே கேட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் தந்தை வைத்த பெயர் சேர் சிங். சேர் என்றால் இந்தியில் சிங்கம் என்று அர்த்தம், 
அவர் அப்பாவிற்கு தன் மகன் பிறந்தபொழுதே தெரிந்துவிட்டது இவன் பெரிய ஆளாக வருவான் என்று. ஆனால் சேர் சிங் இரண்டு வயதில் தன் தாயை இழந்தார், 8 வயதில் தந்தையையும் இழந்து. அமிர்த்சரில் ஒரு அனாதை விடுதியில் வளர்ந்தார். அனாதை விடுதியில் இவரது பெயரை உத்தம் சிங் என்று மாற்றினார்கள். இவருக்கு 18 வயதாகும் பொழுதே இவரது அண்ணனும் 1917ல் இறந்துவிட்டார் .
அதன் பிறகு இந்த இந்திய நாடே இவருக்கு இருந்த ஒரே சொந்தமாகி போனது. அதன் பிறகு தனது சொந்தமான இந்தியாவுக்காக வாழ்ந்தார் உத்தம் சிங். 1919ல் தனது பள்ளி படிப்பை முடித்து அனாதை விடுதியில் இருந்து வெளியில் வந்து தனது வாழ்க்கையை தொடங்கினார்.

 1919ம் வருடம் ஏப்ரல் மாதம் 13ம் நாள் ஜாலியன் வாலாபாக்கில் நடந்த கூட்டத்தில் 20000 அப்பாவி மக்களுக்கு மாலை 5.15 க்கு அனைத்தும் தலைகீழானது
ஜெனரல் ரெஜினாலட் டயர் இவர்கள் அனைவரும் கூடியிருந்த மைதானத்திற்கு இருந்த ஒரே வழியினை அடைத்துக்கொண்டு வந்து நின்று. எந்தவித முன்னறிவுப்பும் இன்றி கூடியிருந்த 20000க்கும் அதிகமான மக்களின் மீது குண்டு மழை பொழிந்தான். இதுவே இந்திய சுதந்திர போராட்டத்தில் நாம் அனைவரும் படித்த ஜாலியன் வாலாபாக் படுகொலை.

இந்த படுகொலையில் கொல்லப்பட்டவர்கள் கணக்கு 379 பேர் கொல்லப்பட்டதாகவும், இதில் 337 பேர் ஆண்கள், 41 சிறுவர்கள், ஒரு ஆறுவார கை குழந்தை என்றும் கணக்கு காட்டியது அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம். ஆனால் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். குண்டுகளில் இருந்து தப்பிக்க மைதானத்தில் இருந்த கிணற்றில் குதித்தவர்களில் இறந்து போனவர்களின் உடல்களின் எண்ணிக்கையே 120யை தொட்டது. பிரிட்டிஷ் அரசாங்க கணக்கின் படி மொத்தம் 1500 குண்டுகள் சுடப்பட்டதாக சொல்கிறது.

இந்த சம்பவத்தை பற்றி சொல்லும் பண்டிட் மதன் மோகன் மாலவியா , லாலா கிரிதரி லால் போன்றவர் சொல்லுவது 1000த்துக்கும் அதிகமான மக்கள் இறந்துவிட்டனர் என்று. ஏன் அப்பொழுது அமிர்த்சர் மருத்துவமனையில் சிவில் சர்ஜனாக இருந்த மருத்துவர் ஸ்மித் சொல்லுவது இவர்கள் சொல்லுவதை விட அதிகம். 1800க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் என்கிறார். துப்பாக்கி சூடு முடிந்தவுடன் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் இதில் அடிபட்டவர்களை காப்பாற்ற முடியவில்லை அதனால் மேலும் உயிர் சேதம் அதிகமானதாக சொல்லுகிறார்கள். இன்று வரை ஜாலியன் வாலாபாக்கில் மரணித்தவர்களின் எண்ணிக்கையோ இல்லை காயம்பட்டவர்களின் எண்ணிக்கையோ முழுமையாக தெரியவில்லை.
இந்த சம்பவத்திற்கு பிறகு ஜெனரல் டயர் இங்கிலாந்து திரும்பினார் அவருக்கு ஒரு மணிபர்ஸில் 26000 ஸ்டெர்லிங்க் பரிசாக கொடுக்கப்பட்டது. அப்பொழுது பஞ்சாப் மாநிலத்தின் கவர்னராக இருந்தவர் ஓ' ட்வையர் இவர் ஜெனரல் ரெஜினாலட் டயரின் நடவடிக்கையை ஆதரித்தவர் மேலும் இவரும் சேர்ந்து தான் இந்த படுகொலைக்கு திட்டம் தீட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இருவரும் இங்கிலாந்து சென்றுவிட்டனர்

ஆனால் அந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட ஒருவர் நினைத்தால் எதையும் செய்யலாம் என்பதை நிருபித்தவர்தான் இந்த உத்தம் சிங்.

1919ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்திற்கு பலிவாங்குவது என்று முடிவெடுத்த உத்தம் சிங் தன்னாலான அனைத்து முயற்சிகளிலும் இறங்கினார். 

1920ல் நைரோபி சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்ல முயற்சித்து முடியாமல் 1921ல் இந்தியா திரும்பினபிறகு
இந்தியாவில் சுதந்திரத்திற்காக போராட தொடங்கினார்.

1924ல் அமெரிக்கா சென்று மூன்று வருடங்கள் அங்கிருந்து புரட்சிக்கு வித்திட்டார்.

1927 ஜூலை மாதம் மேலும் 25 பேர்களுடன் இந்தியா திரும்பினார், அப்பொழுது அமெரிக்காவில் இருந்து ரிவால்வார்களும் குண்டுகளும் பெருமளவு வாங்கி வந்தார்.

1927 ஆகஸ்ட் மாதம் ஆயுதங்களுடன் பிரிட்டிஸ் அரசிடம் மாட்டி சிறைச்சாலை சென்றார். இவருக்கு 5 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறைசாலையில் இருந்தார்.

1931ல் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட பொழுது இவரும் அதே சிறைச்சாலையில் தான் இருந்தார்.சிறை தண்டனைக்கு பிறகு வெளியில் வந்து விளம்பர பலகை வரைபவராக வாழ்க்கையை தொடர்ந்தார். ஆனால் இவரை பிரிட்டிஷ் காவல்துறை கண்காணித்துக்கொண்டே இருந்தது.

1933 - ல் பிரிட்டிஷ் காவல்துறை அனைவரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு காஷ்மீர் வழியாக இத்தாலி சென்று அங்கு 3 மாதங்கள் தங்கியிருந்து  1934 - ல் இலண்டன் சென்றடைந்தார். இதனிடையில் 1927ல் ரெஜினால்ட் டயர் மரணமடைந்துவிட்டார். ஆனால் ஓ' ட்வையர் விடுவதில்லை என்ற ஒரே குறிக்கோளுடன் காலம் கனிவதற்காக இலண்டனிலேயே காத்திருந்தார்.

1940 மார்ச் 13ம் தேதி இலண்டனில் உள்ள காக்ஸ்டன் ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் இஸ்ட் இந்தியா கம்பெனியும் ராயல் சென்ட்ரல் ஆசியாவும் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் முடிந்த பிறகு அங்கு பேச வந்திருந்த ஓ' ட்வையர்ரை சுட்டு கொன்றார். மேலும் அப்பொழுது இந்தியாவிற்கான ஸ்டேட் செகரட்டரியாக இருந்த லார்ட் ஜெட்லான்ட்டையும் சுட்டார். ஜெட்லான்ட் காயத்துடன் தப்பிவிட்டார்.

உத்தம் சிங் சுட்டுவிட்டு தப்பிக்க முயற்சிக்காமல் அங்கேயே நின்றார். காவலர்கள் வந்து அவரை பிடித்து சிறையில் அடைத்தனர். நீதிமன்றத்தில் வழக்கு வந்த பொழுது உத்தம் சிங் நான் செய்த செயலுக்காக வருத்தப்படவில்லை, மேலும் இந்த தண்டனை ஓ' ட்வையர்  கொடுக்க படவேண்டியதே என்று தெரிவித்தார். இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு
1940ல் ஜூலை மாதம் 31ம் தேதி  துக்கிலடப்பட்டு இலண்டனிலேயே கொல்லப்பட்டார்..


ஓ' ட்வையர் கொலை செய்யப்பட்டது இந்தியாவிலும் அரசியல்வாதிகளால் விவாதிக்கப்பட்டது காந்தி முதற்கொண்டு அனைவரும் இதற்கு கண்டணம் தெரிவித்தனர் 1940ல். நேரும்  இந்த சம்பவத்திற்கு ஓ' ட்வையர் கொல்லப்பட்டது தவறு இது தவறான முன்னுதாரணம் என்றார்.

 1962ல்  நேருவே முழுவதுமாக தனது கருத்தை மாற்றி அதுவும் சிறந்த சுதந்திர போராட்ட வீரகள் பகத்சிங், ராஜ்குரு போன்றவர்களுக்கு வழங்கப்பட்ட  சாகித் என்ற பட்டத்தை வழங்கி. சாகித் உத்தம் சிங்கின் எதிரியின் மூக்கின் கீழ் சென்று நடத்திய போராட்டமே இந்தியாவின் விடுதலைக்கான மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும் என்று சொன்னார் .

1940ல் தூக்கிலடபட்டு இலண்டனில் புதைக்கப்பட்ட சாகித் உத்தம்சிங்கின் உடல் 1974 பஞ்சாபை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏவின் முயற்சியாலும் இந்திய அரசின் முயற்சியாலும் இந்தியா கொண்டு வந்து சேர்க்கப்பட்டது அப்பொழுது அந்த மாவீரனின் உடலை வரவேற்க அப்போதைய காங்கிரஸ் கட்சியின் தலைவரான சங்கர் தயாள் சர்மா, அப்போதைய பஞ்சாப் மாநில முதல்வர் ஜெயில் சிங் (இருவரும் பின்னாளில் ஜனதிபதியாக பதவி வகித்தார்கள்) அப்பொழுதைய பிரதமர் இந்திரா காந்தியும் விமானநிலையம் வந்து வரவேற்றார்கள்.

சாகித் உத்தம் சிங் ஜாலியன் வாலாபாக்கில் தனது மக்களை சுட்டு கொன்ற ஜெனரல் டயர் எந்தளவுக்கு எதிரியோ அதே போல் அன்று கவர்னராக இருந்த ஓ' ட்வையர்ரும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பொறுப்பு என்றே நினைத்தார். எய்தவன் இருக்க அம்பை நோவானேன் என்பது தமிழில் நாம் அறிந்த ஓர் பழமொழி அதையே சாகித் உத்தம் சிங் செய்தார். அதாவது அம்பான ஜெனரல் டயர் கொல்லப்படுவது எவ்வளவு முக்கியமோ அதற்கு காரணமான கவர்னர் ஓ' ட்வையர்க்கு தண்டனை கொடுப்பதே அதைவிட முக்கியம் என்று முடிவெடுத்தார் அவரை முடிக்கும் வரை தொடர்ந்து போராடி வெற்றியும் கண்டார்.

                       இந்நாளில்  இவ்வீரர்களை  போற்றி  நினைவு கூறுவோம் .

                                                              அன்புடன் உங்கள் ,
                                                    ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV

Friday, July 29, 2011

J. R.D டாடா அவர்கள் பிறந்தநாள் .


                                     ஜூலை 29, 1904 - நவம்பர் 29, 1993
என்னைப்போல் பல தொழில் முனைவோருக்கு இன்றைய  சிறந்த வழிகாட்டி .

தன்னுடைய அசாத்திய திறமையினால் அனைத்தையும் விரைவிலேயே கற்றுக்கொண்டவர் .
தொழில் துறையின் லாபத்தை விட அதன் மீது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிறந்த மதிப்பே உயர்ந்தது என்ற உயர்ந்த கருத்தை தனது நிறுவனத்தின் மூலம் நிலைநிறுத்தியவர் .

ஒரு தொழிலில் வரும் லாபத்தை கொண்டு அடுத்த ஒரு தொழிலை உருவாக்கி பலருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடு்ப்பதை  அவர் தனது கொள்கைகளில் ஒன்றாகவே கடைபிடித்தவர்.

உலகமே  தமது  தொழில்நிறுவனத்தின் மீது மதிப்பும் மரியாதையும் கொள்ளும் அளவிற்க்கு பல தொழில் வியூகங்களை அமைத்தவர் . 
இந்திய தொழில் துறையில் தன்னை தவிர்க்கமுடியாத ஒரு சக்தியாக நிலை நிறுத்தி கொண்டவர் .
 
தொழில் துறையில் மட்டுமின்றி சமூக நலனிலும் இந்தியாவின் மீதும் கடைசி வரை மிகுந்த அக்கரை கொண்ட மனிதராகவே நடந்து கொண்டவர்.
சுதந்திரம் அடைந்த பிறகு உள்நாட்டு உற்பத்தி  தேவை அதிகரிக்க அப்போதைய பிரதமர் நேருவுடன் இணைந்து இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க செய்தவர்.

 அவர்தான்  J R D TATA என்று எல்லோராலும்  அழைக்கபடும்  ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா.

இவர் ரத்தன்ஜி தாதாபாய் டாடாவின் மகன் ஆவார்  1904 ஆம் ஆண்டு .  பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரத்தில் பிறந்தார். இவரது தாயார் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் என்பதால்  இவர் தனது சிறுவயதில் பிரான்சிலேயே வாழ்ந்தார்.பிரான்சிஸ் பிறந்து பள்ளி படிப்பு அங்கே முடித்து கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் பட்டம் பயில வந்தஆவர் பாதியிலே அதை கைவிட்டு தனது 21ம் வயதில் டாடா ஸ்டில் நிறுவனத்தில் சக ஊழியர்களுடன் இணைந்து வேலை செய்தார்.

1929இல் இவர் இந்தியாவின் முதல் வானூர்தி ஓட்டுனர் உரிமம் பெற்றவர் .
ஜே.ஆர்.டி. 1932ல் இந்தியாவில் முதன் முதலாக டாடா ஏர்லைன்ஸ் என்ற விமான சேவையை தொடக்கி அக்டோபர் 15ம்தேதி விண்ணில் பறந்தது அதை ஓட்டியவர்  
திறமையான இளைஞர்களை கண்டுபிடித்து அவர்களை டாடாவினுள் அழைத்து வந்து அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை நம்பி ஒப்படைப்பது இதுவே அவரது பல தொழில் வளர்ச்சிக்கு வெற்றியாக அமைந்தது
வாழ்நாள் முழுவதும் .

இந்திய தொழில் துறைக்கே அவருடைய வழிகாட்டுதல் மிகப்பெரிய பலமாக அமைந்தது. இந்திய தொழில் துறை வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பங்கிற்கு 1992 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான'' பரத ரத்னா'' வழங்கபட்டது.இவிருதினை பெற்ற முதல் தொழில் அதிபர் இவர்த்தான்

டாடா என்ற ஒரு நிறுவனம் மட்டும் இந்தியாவில் இல்லையென்றால் இந்தியத் தொழில்துறை பல ஆண்டுகள் பின்னோக்கிய நிலையில் இருந்திருக்கும். அதுதான் இன்றும்  டாட்டா நிறுவனத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு கரணம் ..

J R D TATA  தன்னுடைய 89ஆம் வயதில் 1993ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாடில் உள்ள ஜெனீவாவில் இறந்தார்.

                                                   என்றும் அன்புடன் ,
                                        ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV



ஆடி மாதம் சிறப்பு என்ன ? எப்படி ? எதற்கு ?




தமிழ் மதங்களில் ஒவ்வொரு மாதங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு . சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது .மேலும் வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இதுவே தேவர்களின் பகல் காலமாகும். ஆடி முதல் மார்கழி  வரை தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும். நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.ஆடி மாதத்தை "சக்தி மாதம்' என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சுமக் சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும். உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவே.

சண்டி ஹோமம் செய்ய சிறந்த மாதம் :

ஆடி வெள்ளியன்று நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வார்கள். பராசக்தியின் ஒன்பது அம்சங்களை (சர்வபூதசமனி, மனோன்மணி, பலப்பிரதமணி, பலவிகாரணி, கலவிகாரணி, காளி, ரௌத்ரி, ஜேஷ்டை, வாமை) ஒன்பது சிவாச்சார்யர்கள், ஒன்பது வகை மலர்களால் ஒரே சமயத்தில் அர்ச்சிக்கும் "நவசக்தி அர்ச்சனை' நடைபெறும். ஆடி வெள்ளியில் "சண்டி ஹோமம்' போன்ற சக்தி ஹோமங்களும் செய்வார்கள்.

மேலும் வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்களுக்கும் ஆடி மாதம் சிறந்தது.

ஆடிமாத விழாக்கள் :

ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், ஆடிப் பண்டிகைகளாகும்.

ஆடிமாத வழிபாடுகள் :

ஆடி மாதம் பண்டிகைகளை அழைக்கும் காலம்' எனலாம். மழைக்காலம் தொடங்குவதும் இப்பொழுதுதான்.

ஆடிப் பௌர்ணமி அன்றுதான் ஹயக்ரீவ அவதாரம் ஏற்பட்டது. இவர் கல்விக்குரிய கடவுள். இவர் வழிபாடு தொன்மையானது. திருமால் உடலிலிருந்து மதுகைடபர் என்பவர் வியர்வையில் தோன்றினர்.

பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார்.ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். ஆகவே இம்மாதத்தில் வரும் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகிழமைகளில் சக்திவழிபாட்டிற்கு நம்

ஆடி வெள்ளியன்று மகாலட்சுயை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை.

ஆடி வளர்பிறை துவாதசியில் துளசி பூஜை செய்வதால் பல நற்பலன்களைப் பெறலாம். துளசி மாடம்முன் கோலமிட்டு, மாடத்திற்குப் பொட்டிட்டு, துளசிக்கு மாலையிட்டுப் பூஜிக்க வேண்டும்.

சுக்ரவாரம் என்று அழைக்கப்படும் வெள்ளிகிழமை அள்ளி கொடுக்கும் சுக்கிரனுக்கு உகந்த நாள் ஆகும். அன்று சிம்மவாஹனத்தில் பவனி வரும் அம்பிகையை வழிப்பட்டால் நம் இல்லத்தில் நற்காரியங்கள் அரங்கேறும் என்பதும் ஐதிகம்.

வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுதல் அதிகச் சிறப்பாகும். வெள்ளிக் கிழமைகளில்

ஆடி வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி, தெய்வங்களை வழிபடுவது சிறப்பு. அன்றையதினம் ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும்.பெண்கள் குழுக்களாக 108, 1008 குத்துவிளக்குப் பூஜைகளைச் செய்யலாம். அம்மன் பூஜை செய்யும் இல்லத்தில் செல்வம் சேரும்.

இம்மாதத்தில் அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்பாள் பாடல்களைப் பாடுவார்கள். பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்து அம்பாளை வழிபாடுவார்கள். பெண் குழந்தைகளை அம்பாளாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க அம்பாளின் அருள் கிடைக்கும்.

ஆடிமாதத்தில் சில கோவில்களின் சிறப்பு :

கோவை ஈச்சனாரியில் உள்ள மகாலட்சுமி மந்திரில் முத்தேவியர் ஒன்றாக அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். நடுவே மகாலட்சுமி யும் வலப்புறம் துர்க்கையும் இடப்புறம் சரஸ்வதியும் அமைந்துள்ளனர். தினமும் காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை நடுவேயுள்ள லட்சுமி முகத்தில் சூரிய ஒளி படும். பகல் 12.00 மணிக்கு மூன்று தேவியர் முகங்களிலும் சூரிய ஒளி படும் தரிசனத்தைக் கண்டு மகிழலாம். ஆடி மாதம் முழுதும் இவ்வாலயம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.

சக்தி பீடங்களில் ஒன்றான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய அம்மன் அகிலாண்டேஸ்வரிக்கு ஆடி வெள்ளியில். ஸ்ரீ வித்யா பூஜை வைதீக முறைப்படி நடத்து கின்றனர். இவ்வம்மன் காதுகளில் உள்ள தாடங்கங்களில் ஸ்ரீ சக்கரம் உள்ளது. ஆடி வெள்ளியன்று, இவ்வம்மன் மாணவியாக இருக்க, ஈசன் குருவாக இருந்து உபதேசம் செய்தார். எனவே பள்ளிப் பிள்ளைகள் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர்.மேலும் ஆடி வெள்ளியன்று அம்பாள் காலையில் லட்சுமிதேவி யாகவும், உச்சிக்கால வேளையில் பார்வதி யாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி அளித்து அருள்பாலிக்கிறார்.

தகடூரில் உள்ள கோட்டை கல்யாணகாமாட்சி ஆலயத்தில் உள்ள சூலினி துர்க்கை அம்மனின் முழு உருவத்தை ஆடி மாதம் மூன்றாம் செவ்வாயில் மட்டுமே மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 வரை தரிசிக்கலாம். மற்ற நாட்களில் முகதரிசனம் மட்டுமே.

திருச்சி அருகேயுள்ள திருநெடுங்கள நாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுதும் சூரிய ஒளி மூலவர்மீது பட்டு சூரிய பூஜை நடைபெறும். இது ஒரு சிறப்பு என்றால், இவ்வாலய இரு விமானங்கள் காசி ஆலய விமானம்போல அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு ஆகும்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத் தில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். விழா நாட்களில் அம்மன் வீதி வலம் வருவது சிறப்பான ஒன்றாகும்.

ஔவை விரதம்:

ஆடி செவ்வாயில் ஒளவையாருக்கு மேற்கொள்ளும் நோன்பு குறிப்பிடத் தக்கது. இந்த ஒளவை நோன்பை கடைபிடிப்பதால் விரைவில் திருமணம் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். இந்த நோன்பில் பச்சரிசி மாவுடன், வெல்லம் கலந்து உப்பில்லாமல் கொழுக்கட்டை செய்வார்கள். பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் இந்த விரதம் இரவு பத்து மணிக்கு மேல் துவங்கும். அச்சமயத்தில் ஆண்கள் யாரும் அவ்விடத்தில் இருக்ககூடாது. பின்னர் ஒளவையார் கதையை வயதான பெண்மணி கூறுவார். ஒளவையை வேண்டி கொழுக்கட்டை நிவேதனம் செய்து இரவைக் கழிப்பர். இதுவே ஒளவை நோன்பு.

வரலட்சுமி விரதம் :




ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த விரதத்தால் மாங்கல்ய பலமும், மங்களமும், நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கை கூடும். அஷ்ட ஐஸ்வர்யங்கள் சேரும். கணவன், குழந்தைகளுக்கு நன்மை கிட்டும். மகாலட்சுமி வீட்டில் வாசம் செய்வாள். வரலட்சுமி பூஜையின் போது லட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் போன்ற ஸ்தோத்திரம் படிப்பது மிகச் சிறப்பு!அப்போது சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், ஆகியவற்றோடு ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது நலம் தரும்.

இம்மாதத்தில் நற்காரியங்களுக்கு உகந்தது அல்ல என்பது தவறானது , சகல ஐஸ்வய்ரங்களையும் பெற்றுத்தரும் இறைவழிப்பாடுதான் நாம் செய்யும் நற்காரியங்களில் முதன்மையானது .

                                ஆடியின் சிறப்பு அளவில்லாதது !
                         அனைத்து நலன்களையும் வழங்குவது !
                                  அனைவரும் பலன் பெருக !

                                              அன்புடன் உங்கள்,
              ''ஸ்ரீ வைஷ்ணவன்'' ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா.SRV


Thursday, July 28, 2011

ஸ்ரீரங்கம் மஹாபுன்யசேத்ரம்.




ஸ்ரீரங்கத்தின் மரபு வழி வரலாறு :

ஸ்ரீரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய புஜை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறுது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவேரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.


கோவிலின் அமைப்பு,
 

ஸ்ரீரங்கம்; திவ்ய தேசங்கள் அனைத்திலும் தலையாயது.
ஸ்வயம்வ்யக்த ஸ்தலங்கள் எட்டிலும் முதன்மையானது ஸ்வயம்வ்யக்த மூர்த்திகள் மனிதரால் செய்யப்படாதவை; தாமே தோன்றியவை.


ஆலயத்தி்ன் ஏழு திருச்சுற்றுகளுக்குள் கருவறையில் அரங்கன் தென்திசை நோக்கிப் பள்ளி கொ...ண்டுள்ளார். திருவுண்ணாழி (தர்ம வர்மன்) திருச்சுற்று, ராஜமகேந்திரன் திருச்சுற்று, குலசேகரன் திருச்சுற்று, திருமங்கை ஆழ்வார் அமைத்தருளிய நான்காவதான ஆலிநாடன் திருச்சுற்று, அகளங்கன் திருச்சுற்று, திரிவிக்கிரமன் திருச்சுற்று, கலியுகராமன் திருச்சுற்று என்னும் ஸப்த ப்ராகாரங்கள்; அவற்றை உள்ளடக்கியதாக (156 ஏக்கர் பரப்பு) அடைய வளைந்தான் திருச்சுற்று. ராஜகோபுரத்தோடு கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது.

236 அடி உயரத்தில் 13 கலசங்கள், 13 நிலைகளோடு நெடிதுயர்ந்த ராஜகோபுரம். நாயக்க மன்னர்கள் ஆரம்பித்த இத்திருப்பணி தொடராமல் நின்று விட்டது. பின்னர் அஹோபில மடம் ஜீயரால் கட்டி முடிக்கப் பட்டது.

21 கோபுரங்கள்; நம்பெருமாள் ஸந்நிதி், தாயார் ஸந்நிதி, ஸுதர்சநர் ஸந்நிதி ஆகியவை அளவில் பெரியவை; இவை தவிர ஐம்பத்தைந்து சிறிய ஸந்நிதிகள்;

கருவறைக்கு முன் உள்ளது ரங்க மண்டபம். இதை காயத்ரி மண்டபம் என்பர். காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்கள் போல் இதில் 24 தூண்கள் உள்ளன.

தென்னக வைணவ மரபின் புகழ்பெற்ற இரு ஆசார்ய புருஷர்கள் ஸ்வாமி தேசிகனும், ஸ்வாமி மணவாள மாமுனிகளும் ஆவர்; இவ்விருவருக்கும் தாயார் ஸந்நிதியருகே தனி ஸந்நிதிகள் உள்ளன.

ஆலயத்தைச் சீர் குலைத்த அந்நியனைத் தந்திரமாகக் கோபுரத்தின் மேலேறச் செய்து அங்கிருந்து கீழேதள்ளிக் கொன்றாள் வெள்ளையம்மாள் என்ற கணிகை; பின்னர் தானும் கீழே விழுந்து உயிர் துறந்தாள். அவளது புகழை இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறது வெள்ளைக் கோபுரம்.

கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் கோயில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை. வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களுக்குள்ளும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் என்பவை கொண்ட முழு நகரமும் அடங்கியுள்ளது.

‘தென்னாடும், வட நாடும் தொழநின்ற திருவரங்கம்’ எனவும், ‘பொன்னரங்கம் போற்றாதார் புலையர்தாமே’ எனவும் அடியார்கள் இதைப் புகழ்ந்துள்ளனர்.

இங்குதான் உடையவர் கத்யத்தை அருளினார். ஈடு விளைந்த இடம்; பெரிய நம்பிகள், பட்டர், சீராமப்பிள்ளை, லோகாசார்யர் போன்ற மஹநீயர்களின் அவதார ஸ்தலம் இது.

அத்ரைவ ஸ்ரீரங்கே ஸுகமாஸ்வ’ என்பதற்கிணங்கக் கடைசிவரை அரங்கனின் கடைத்தலை பற்றி வாழ்ந்த அடியார்கள் எண்ணற்றவர். ஸ்ரீ பராசர பட்டர் ‘ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவம்’ என்னும் துதி நூலில் அரங்க நகரப்பனின் அருமை பெருமைகளை அழகுற வர்ணித்துள்ளார்.

இவ்வாலயத்திலிருந்து 644 கல்வெட்டுக்களை மைய அரசு படி எடுத்துள்ளது; இவை அனைத்தும் தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் தொகுதி 24ல் பதிவாகியுள்ளன. 9ம் நூற்றாண்டி லிருந்து 18ம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் வாழ்ந்த பல மரபுகளையும் சார்ந்த மன்னர்களின் கல்வெட்டுக்களும், காகதிய, கஜபதி, தெலுங்குச் சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களும் இவ்வாலயத்தில் உள்ளன.

ஸ்ரீ ப்ருந்தாவனத்திலும், ஸ்ரீ ரங்கத்திலும் உண்டுறங்கி வாழ்வதே கிடைத்தற்கரிய ஸாதனை என்பார் பரனூர்ப் பெரியவர். காளியன் ப்ருந்தாவன வாஸத்தாலேயே கண்ணபிரானின் திருவடி ஸ்பர்சம் பெற்றான். ஸாது க்ருஷ்ண ப்ரேம் இவ்வாலயத்தில் இறையனுபவம் பெற்றார்; இவர் அயல் நாட்டவர்.


பூஜை முறைகள், 
 


ஸ்ரீரங்கநாதபெருமாளுக்குச் சாத்தப்படும் மாலைகளுக்கான மலர்கள் தொண்டரடிப் பொடியாழ்வார் திரு நந்தவனத்திலிருந்து பெறப்படுகிறது. மலர் கொய்வோர் தும்மல், மூச்சுக் காற்று, எச்சில் படாமல் துணியால் மறைத்துக் கொண்டு மலர் பறிப்பர்.


பெருமாளுக்கான நிவேதனம்... மட்பாண்டங்களில் தயாராகின்றன. நம்பெருமாள் நீராட்டம் கண்டருளுவது இளஞ்சூடு கொண்ட வெந்நீரில்.

நம்பெருமாள் விசேட தினங்களில் அணி்யும் பாண்டியன் கொண்டையும், கிளி மாலையும் கலை நயம் மிக்கவை.

மூலவர் - ஸ்ரீரங்கநாதர்,

உத்ஸவர் - அழகிய மணவாளன்

தாயார் - பெரியபிராட்டியார்

தீர்த்தம் - சந்த்ர புஷ்கரிணி ,காவேரி

பெருமாள் – பெரிய பெருமாள்

தாயார் – பெரிய பிராட்டியார்

வாஹனம் – பெரிய கருடன்

அரங்கனின் ஆசார்யர் – பெரிய ஜீயர் (மாமுனிகள்)

தளிகை – பெரிய அவசரம்

 

விழாக்காலங்கள்,
 
இவ்வாலயத்தில் ஆண்டின் இருநூறு நாள்களுக்கும் மேலாகத் திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் .

தை, பங்குனி, சித்திரை ஆகிய மூன்று மாதங்களில் மூன்று ப்ரம்மோத்ஸவங்கள் .

சித்திரையில் வஸந்தோத்ஸவம் - விருப்பன் திருநாள்,

வைகாசியில் விசாக உத்ஸவம், தொடர்ந்து ஸ்ரீரங்க நாச்சியாருக்கும் வஸந்த உத்ஸவம்,

ஆனியில் கேட்டை நக்ஷத்ரத்தில் ஜ்யேஷ்டாபிஷேகம்,

ஆடிப் பெருக்கு - அம்மா மண்டபத்திற்குத் தங்கப்பல்லக்கில் உலா,

ஆவணியில் ஆகமங்கள் வலியுறுத்தும் பவித்ரோத்ஸவம்,

புரட்டாசியில் நவராத்திரி உத்ஸவம்,

ஐப்பசியில் ஊஞ்சல் உத்ஸவம்,

கார்த்திகை - மார்கழி மாதங்களில் திருவாய்மொழித் திருநாள், வைகுண்ட ஏகாதசித் திருவிழா,

தை மாதத்தில் பூபதித் திருநாள் என்றழைக்கப்படும் தேரோட்டம், தெப்பத் திருவிழா; நம்பெருமாள் திருமுன்னிலையில் புதிதாக அறுவடையான நெல்லைக் கொட்டி அளப்பார்கள்

மாசி மாதம் நடைபெறும் கருட சேவை மிகவும் புகழ் பெற்றது

பங்குனியில் ஆதி ப்ரம்மோத்ஸவம், பங்குனி உத்திர தினத்தில் உடையவர் செய்யும் சரணாகதி; ஏகாஸநத்தில் தாயாரும், நம்பெருமாளும் வீற்றிருப்பர்.

அயலிடங்களில் வாழ்வோருக்கும், மதக் கடமைகளைச் செவ்வனே நிறைவேற்ற இயலாதவருக்கும் அரங்கமே கதி; திருவரங்கம் திகழும் திசை நோக்கித் தொழுவதே ஸர்வபாப ப்ராயஸ்சித்தம்; இது அற நூல்களின் ஸாரத்தை ஓதாமல் உணர்ந்த பரனூர்ப் பெரியவர் முடிவாகக் காட்டும் வழி.

அறிவிலா மனிசரெல்லாம் அரங்கமென்றழைப்பராகில்
பொறியில் வாழ்நரகமெல்லாம் புல்லெழுந் தொழியுமன்றே !

உறுசகட முடையவொரு காலுற்றுணர்ந்தன
உடன் மருத மொடியவொரு போதிற்றவழ்ந்தன
உறிதடவுமளவிலுரலோடுற்று நின்றன
உறுநெறியோர் தருமன் விடுதூதுக்குகுகந்தன
மறநெறியர் முறிய பிருதானத்து வந்தன
மலர்மகள் கைவருட மலர் போதிற் சிவந்தன
மறுபிறவி யறுமுனிவர் மாலுக்கிசைந்தன
மனுமுறையில் வருவதோர் விமானத்துறைந்தன
அறமுடைய விசயனமர் தேரில் திகழ்ந்தன
அடலுரக படமடிய வாடிக்கடிந்தன
அறுசமய மறிவரியதானத்தமர்ந்தன
அணிகுருகை நகர் முனிவர் நாவுக்கமைந்தன
வெறியுடைய துளவ மலர் வீறுக்கணிந்தன
விழுகறியோர் குமரனென மேவிச் சிறந்தன
விறலசுரர் படையடைய வீயத்துரந்தன
விடலரிய பெரிய பெருமாள் மென்பதங்களே !

                                       ஸ்ரீரங்கவாஸே ரமதாம் மநோ மே !

                                                   அன்புடன் உங்கள் ,
                    "ஸ்ரீவைஷ்ணவன்" ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV