Sunday, September 18, 2011

ஆபிரகாம் லிங்கனும் கென்னடியும்.






ஆபிரகாம் லிங்கனும் கென்னடியும் எப்படி இறந்தனர்?

இந்த பதிவு நிச்சயம் உங்கள் புருவங்களை உயர்த்தும். அமெரிக்க அதிபர்கள் ஆபிரகாம் லிங்கன்,கென்னடி ஆகிய இருவருக்கும் பலவிதங்களில் ஒற்றுமை இருக்கிறது.


இது  குறித்து சிலர் ஏற்கனவே படித்திருக்கலாம், இருப்பினும் மீண்டும் ஒரு மீள்பார்வை..

ஒரு வரலாறு நூறு ஆண்டுகள் கழித்து மீண்டும் நடைப்பெற்றக் கதையிது!


ஆபிரகாம் லிங்கன் 1846-ஆம் ஆண்டில் சட்டசபை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

சான் எஃப். கென்னடி 1946-ஆம் ஆண்டில் சட்டசபை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.


ஆபிரகாம் லிங்கன் 1860-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.

சான் எஃப்.கென்னடி 1960-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.


இவர்களிருவரும் குடிமக்களின் உரிமைகளில் அதிக கவனம் செலுத்தியவர்கள்.


இவர்களிருவரின் மனைவிமார்களும் அமெரிக்க வெள்ளை மாளிகையில் வாசம் செய்த காலத்தில்தான் தங்கள் பிள்ளைகளை இழந்தனர்.


இவ்விரு அதிபர்களும் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நாள் வெள்ளிக் கிழமையாகும்.


இவ்விருவருமே தலையில் சுடப்பட்டு இறந்தனர்.


ஆச்சரியமாக இருக்கிறதா...?



லிங்கனின் செயலாளரின் பெயர் கென்னடி.

கென்னடியின் செயலாளரின் பெயர் லிங்கன்.


இவ்விரு அதிபர்களுமே தென் மாநிலங்களைச் சார்ந்த நபர்களால் கொல்லப்பட்டுள்ளனர்.


லிங்கனுக்கு அடுத்து அதிபர் பதவியையேற்ற அண்ட்ரூ சான்சன் 1808-ஆம் ஆண்டில் பிறந்தவாராவார்.

கென்னடிக்கு அடுத்து அதிபர் பதவியையேற்ற லிண்டன் சான்சன் 1908-ஆம் ஆண்டில் பிறந்தவராவார்.



லிங்கனைக் கொலைச் செய்த சான் வில்க்ஸ் பூத் 1839-ஆம் ஆண்டு பிறந்தவராவார்.

கென்னடியைக் கொலைச் செய்த லீ ஆர்வீ ஓஸ்வெல்ட் 1939-ஆம் ஆண்டி பிறந்தவராவார்.



இவ்விரு கொலையாளிகளின் முழுப்பெயர்கள் ஒவ்வொன்றிலும் மூன்றுப் பெயர்கள் அடங்கியுள்ளன.

இவ்விரு கொலையாளிகளின் பெயர்களுமே 15 ஆங்கில எழுத்துகளால் அமைந்தவை.

(John Wilkes Booth , Lee Harvey Oswald)

என்ன, படிக்கப் படிக்க ஆச்சரியமாக உள்ளதா?

லிங்கன் - 'ஃபோர்டு' என்றழைக்கப்படும் ஒரு திரையரங்கில் கொல்லப்பட்டார்.

கென்னடி - 'ஃபோர்டு' நிறுவனம் தயாரித்த 'லிங்கன்' எனும் மகிழுந்தில் பயணம் செய்யும்போது கொல்லப்பட்டார்.

திரையரங்கில் லிங்கனைக் கொன்ற கொலையாளி ஒரு கிடங்கில் சென்று ஒளிந்துக் கொண்டான்.

கென்னடியைக் கொன்ற கொலையாளி ஒரு கிடங்கிலிருந்து துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, பின் ஒரு திரையரங்கில் சென்று ஒளிந்துக் கொண்டான்.

இவ்விரு கொலையாளிகளும் (பூத், ஓஸ்வெல்ட்), நீதிமன்ற விசாரணைக்கு முன்பே கொல்லப்பட்டுவிட்டனர்.



இங்குதான் சுவாரசியமே உள்ளது... மேலும் தொடர்ந்து படியுங்கள்..



லிங்கன் இறப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்பு மான்றோ, மேரிலாண்ட் எனுமிடத்தில் இருந்தார்.

கென்னடி இறப்பதற்கு ஒருவாரத்திற்கு முன்பு மர்லின் மன்றோ எனும் நடிகையுடன் இருந்திருக்கிறார்.

Sunday, September 11, 2011

சுப்பிரமணிய பாரதி Samyuktha Singing Ninnai Charan Adaindhen


                                      சுப்பிரமணிய பாரதி
                           (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921)

1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார்.

பொருள் செய்வதையே நோக்கமாகக் கொண்ட தந்தை; பாரதி ஐந்து வயதுச் சிறுவனாய் இருக்கும் போதே உயிர்நீத்த தாய்; சிருங்காரச் சுவையில் ஈடுபட்டு அத்தகைய இலக்கியங்களைச் சுவைப்பதே வாழ்வெனக் கருதிய மன்னர்; தூதும் அந்தாதியும் கலம்பகமும்  பாடிப் பரிசில் பெற்றுக் கொண்டிருந்த புலவர் கூட்டம் என்ற சூழலில் வாழ்ந்த பாரதியின் வாழ்க்கையில் மேலும் பல துன்பங்களை கடந்துவந்தவர்.

1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார் பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார்.

பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட்  1906 வரை   பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகஸ்ட் 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியே மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆகஸ்ட். 1905-ஆகஸ்ட் 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906/செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (டிசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910),என்ற இதழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராக  துணிச்சலான பத்திரிகைக்காராக பணியாற்றினார்.

தமிழ்,சமஸ்கிருதம்,இந்தி, ஆங்கிலம்  மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளையும், பிற மொழி இலக்கியங்களையும், தமிழ்மொழியாக்கம் செய்துள்ளார். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்ட மாமேதை.


செல்வத்தையும் பணத்தையும் ஒருபொருட்டாகக் கருதாதவர்,
மன்னரையும் செல்வந்தரையும் மதிக்காத சுயமரியாதை உணர்வு கொண்ட மாமனிதன்.

தமிழ்க் கவிஞர்:

புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன் பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையை தமிழுக்குத் தந்தவன்.

தேசிய விடுதலைப் போராட்ட வீரர்:

அச்சமின்மையே இந்திய விடுதலைப் போரினை
உருவாக்கியது. அந்நிய அரசின் அடக்குமுறை பாரதியைக்
கட்டுப்படுத்த முடியவில்லை. உச்சிமீது வான் இடிந்து வீழினும்
அச்சமில்லை என்ற பாரதியின் பெயர் விடுதலை வரலாற்றில் நிலைத்து விட்டது.
சூரத்நகரில் நிகழ்ந்த காங்கிரஸ்மாநாட்டுப் பணி, வ.உ.சிதம்பரம்
பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீதான வழக்குகள் ஆகியன பாரதியின் புகழைப் மேன்மேலும் பெருக வைத்தன.

ஜாதி மதம் பாராதவர்:

புதுவையில் கனகலிங்கம் என்ற தாழ்த்தப்பட்ட இளைஞருக்கு அவர் பூணூல் போட்டுவிட்டதும், தம்போலா என்ற தோட்டி வீட்டில் போய் உட்கார்ந்து காற்று வாங்கியதும்,

தேசமுத்து மாரியம்மன் கோயிலில் சென்று பாட்டிசைத்ததும், வசன கவிதைகளுக்கு அடித்தளம் அமைத்ததும், எளிய நிகழ்ச்சிகளல்ல. வரலாற்றில் இவை பெரிய மாற்றங்களையும் திருப்பங்களையும் உண்டாக்கிவிட்டன.

பெண்களின் உரிமையை வற்புறுத்தியவர்:

தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதி தான் .
பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினான். போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான் என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றான்.
பெண்களின் கல்வியறிவுக்காகவும் சட்டங்களை செய்திடவும் கனவு கண்ட பாரதி.

கட்சி அமைப்புகளுக்குக் கட்டுப்படாதவர்:

தமிழ்நாட்டிலிருந்த காங்கிரஸ் இயக்கத்தோடு கூட அவர் உறவுடையவராக இல்லை; அவர் தாமே ஒரு தனி இயக்கமாக விளங்கினார். எவரிடமும் அனுமதி பெறாமல் நேரே சென்று காந்தியடிகளைக் கண்டு தாம் நடத்தும் கூட்டத்திற்கு வர இயலுமா என்றும் கேட்டார்.

தமிழைப் பெரிதும் போற்றியவர்:

பாரதியார் இன்றும் பேசப்பெறுவதற்குரிய நிலையில் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று அவரது எளிமையான நடை. பாரதிக்கு முன்‘பாட்டு இலக்கியம்’ இல்லை. செய்யுள் இலக்கியமே இருந்தது. அந்தச் செய்யுளுக்கு உரை இருந்தால்தான் புரிந்து கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. செய்யுட்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உரைகள் எழுந்தன. எவ்வளவுக் கெவ்வளவு எளிமையாக இல்லாமல் இருக்கிறதோ அவ்வளவுக் கவ்வளவு செய்யுள் இலக்கியம் மதிப்புடையதாகக் கருதப்பட்டது. பாரதிக்கு இந்தக் கருத்து உடன்பாடாக இல்லை. மக்கள் அனைவருக்கும் விளங்கும் எளிய தமிழில் பாட்டு இலக்கியப் படைப்பு இருக்க வேண்டுமென்று பாரதி கருதினார். பாரதியார் புதுவையில் அரவிந்தரிடம் ரிக் வேதப் பாடல்களை முறையாகக் கற்றுக் கொண்டார். அவற்றைத் தமிழில் மிக எளிமையாகப் பாட்டு வடிவத்தில் கொண்டு வந்தார்.

கவிதை
சக்திப்பாடல்கள்,
கண்ணன் பாட்டு,
குயில்பாட்டு,
பாஞ்சாலி சபதம்,
பெண்விடுதலைப் பாடல்கள்.
ஆகியன அவர் படைப்புகளில் சில.

இவைகளில் எனக்கு பிடித்தது இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த பாஞ்சாலி சபதம்  படைப்புதான். அழகிய இலக்கிய நயத்தையும், மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது.

 தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில்பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.

விடுதலை போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளை படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார்.

ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.

                                     வாழ்க பாரதி ! வளர்க அவர் புகழ் !
                                                                      

                                                   என்றும் அன்புடன்
               "ஸ்ரீ வைஷ்ணவன் "ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV 

Thursday, September 8, 2011

படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே !




படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
கொடுத்தானே கொடுத்தானே பழரசம் ஆண்டவன் கொடுத்தானே
பிரித்தானே பிரித்தானே மனதையும் கவலையும் பிரித்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
குரங்காய் இருந்த மனிதன் மனதில் குழப்பம் ஏதுமில்லை
குடும்பம் மனைவி அண்ணன் தம்பி கூட்டம் சிறிதுமில்லை
ஆசை பாசம் காதலில் விழுந்தான் அமைதியைக் காணவில்லை
அலைந்தான் தவித்தான் துடித்தான் மடிந்தான் யாருக்கும் லாபமில்லை
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
தன்னந்தனியே பிறந்தவன் நெஞ்சில் சஞ்சலம் இல்லையடா
இன்னொரு உயிரை தன்னுடன் சேர்த்தால் என்றும் தொல்லையடா
இத்தனை சிறிய மனிதனின் தலையில் எத்தனை சுமைகளடா
இருபதில் தொடங்கி எழுபது வரைக்கும் என்றும் மயக்கமடா
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
மனதினில் கவலையை வளர்த்தானே
ம்...ம்ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்ம்.

பாடல்: படைத்தானே படைத்தானே
திரைப்படம்: நிச்சய தாம்பூலம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
ஆண்டு: 1961 .


Thursday, September 1, 2011

ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி

விநாயகா ! விநாயகா !!




                             ''ஓம் வக்ர துண்டாய ஹும்''

ஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு சிறுவனை உருவாக்கி உயிர்கொடுத்து காவலுக்கு நிக்கச்சொன்னார். யாரையும் உள்ளே விடவேண்டாம் எனவும் கட்டளையிட்டார். அப்போது அங்கே வந்த சிவபெருமானை தடுத்தான் அந்தச் சிறுவன். கோபமுற்ற சிவபெருமான் அவன் தலையை துண்டித்தார். பின்னர் பார்வதியின் மைந்தன் என்பதை அறிந்த சிவபெருமான் கோபம் தணிந்து , தன் பூதகணங்களை அழைத்து அவர்கள் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து எடுத்துவருமாறு கூறினார். அவர்கள் முதலில் பார்த்ததோ ஒரு யானையை. சிவபெருமானின் கட்டளைப்படி அந்த யானையின் தலையை துண்டித்து எடுத்துவந்தனர். அதனை சிவபெருமான் அந்த சிறுவனின் உடம்பில் ஒட்டவைத்து மீண்டும் உயிர் கொடுத்தார். அப்போது வெளியே வந்த பார்வதி பிள்ளை யாரு? எனக் கேட்டார். அதுவே அச்சிறுவனுக்கு பெயராகிவிட்டது. அச்சிறுவன் தான் பிள்ளையார் ஆவணியில் பிள்ளையார் அவதரித்த நாளையே விநாயக சதுர்த்தியாக கொண்டாடி மகிழ்கிறோம்.இவரது ஜன்ம நட்சத்திரம் அஸ்தம்,கன்னிராசி விருச்சிகம் இவருடைய லக்னம். முதற்கடவுள் என்பதால் விநாயகரின் ஜாதகத்தை எல்லாருமே வழிபாடு செய்து வரலாம்.

முழுமுதல் கடவுள்:


மூலாதாரத்திற்கு உரியவராக விளங்கும் விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். இவரை வணங்கி விட்டே எச்செயலையும் தொடங்குவர். எந்த சுபவிஷயத்தை செய்யத் தொடங்கினாலும், தொடங்கும் செயல் தடையேதும் இல்லாமல் இனிதே நிறைவேற்றி அருள்வாய்! என்று வணங்கிவிட்டே செயல்படுவர். எழுதத் தொடங்கினாலும், பிள்ளையார்சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு என்று குழந்தைகளுக்கு வீட்டுப் பெரியவர்கள் வழிகாட்டுவர்.

விநாயகரும் சிறந்த எழுத்தாளராகப் பணியாற்றி இருக்கிறார். தன் தந்தத்தை ஒடித்து எழுத்தாணியாக்கி வியாசர் சொல்ல மகாபாரதத்தை எழுதியவர் விநாயகர். சதுர்த்திநாளில் வணங்குவோருக்கு விநாயகப் பெருமானின் அருளால் செல்வாக்கும், சொல்வாக்கும் உண்டாகும்.

விநாயகப் பெருமான், மந்திரமூர்த்தியாகவும் இருக்கிறார். எந்த தெய்வத்திற்குரிய மூல மந்திரமாக
இருந்தாலும், அம்மந்திரம் ஓம் என்னும் பிரணவத்தோடு தான் தொடங்கும். ஓம் என்னும் பிரணவத்தின் சொரூபம் விநாயகர். வி என்றால் மேலான என்று பொருள்.இவருக்கு மேலான நாயகர்(தலைவர்) வேறு இல்லை என்பதால் தான் இவரை விநாயகர் என்று வணங்குகிறோம்.  எட்டெழுத்து, ஆறெழுத்து, ஐந்தெழுத்து, என்று எத்தனை எழுத்துகள் அடங்கிய மந்திரங்களாக இருந்தாலும் ஓம் உடன் சேர்த்து சொல்வதே மரபாகும்.

ஐந்து கைகள் ஏன்?



இறைவன் செய்யும் தொழில்கள் பஞ்சகிருத்யங்கள் எனப் பெயர் பெறும். அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாகும். விநாயகர் 4 கரங்களுடன், தும்பிக்கை என்னும் ஐந்தாவது கரத்தையும் கொண்டுள்ளவர். அதனால் ஐங்கரன் என்று பெயர் பெற்றார். விநாயகர் தன் நான்கு கரங்களில் அங்குசம், பாசம், எழுத்தாணி, கொழுக்கட்டை ஆகியவையும், ஐந்தாவது கரமாகிய தும்பிக்கையில் அமுத கலசமும் வைத்திருப்பார். இதில் எழுத்தாணி உலகை சிருஷ்டி செய்வதையும், கொழுக்கட்டை காத்தல் தொழிலையும், அங்குசம் அழித்தலையும், பாசம் மறைத்தலையும், தும்பிக்கையில் ஏந்தி யிருக்கும் அமுதகலசம் அருளலையும் காட்டுகின்ற குறியீடுகளாகும்.

நிவேதனம் அதன் தத்துவம் :




அப்பா சிவனுக்கு அபிஷேகம் என்றால் பிரியம். மாமா திருமாலுக்கு அலங்காரம் என்றால் பிரியம். அதுபோல, விநாயகருக்கு நைவேத்யம் என்றால் பிரியம்.

பெரும்பாலான வீடுகளில் விநாயகர் சிலை இருக்கும் . அது அளவில் பெரிதோ, சிறிதோ அதுபற்றி கவலையில்லை.  அந்தப் பிள்ளையாருக்கு கட்டாயம் ஏதாவது ஒரு நைவேத்யம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு பழமாவது வைக்க வேண்டும். சதுர்த்தி திதிகளில் முடிந்தவரை மோதகம், கோதுமை அப்பம், பழவகைகள், பொரி ஏதாவது ஒன்றை வைக்க வேண்டும்.

மோதகம்: இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் படைக்கப்படுகிறது.

கரும்பு: கடிப்பதற்கு கடினமானாலும் இனிப்பானது. வாழ்க்கையும் இப்படித்தான். கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்ற தத்துவத்தின் படி படைக்கப்படுகிறது.

அவல், பொரி: ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

யானை முகத்துடன் குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டும் விநாயகருக்குரிய எல்லா நைவேத்யங்களுமே, குழந்தைகளுக்கு தான் முன்னுரிமை அவர்களுக்கு போக மீதித்தான் பெரியவர்களுக்கு ; விநாயகருக்கு சிதறுகாய் உடைக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இப்படி சிதறிப்போகும் காயை பெரியவர்கள் எடுக்கலாமா என்றால் கூடாது. அதுவும் குழந்தைகளுக்கே சொந்தம்.

வழிபாடுகளும் பலன்களும் :



1. வெள்ளிக்கிழமை விரதம்
2. செவ்வாய்க்கிழமை விரதம்
3. சதுர்த்தி விரதம்
4. குமார சஷ்டி விரதம்
5. தூர்வா கணபதி விரதம்
6. சித்தி விநாயகர் விரதம்
7. துர்வாஷ்டமி விரதம்
8. நவராத்திரி விரதம்
9. வெள்ளிப் பிள்ளையார் விரதம்
10. செவ்வாய்ப் பிள்ளையார் விரதம்
11. சங்கடஹர சதுர்த்தி விரதம்.
இதில் ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி விரதம் முக்கியமானதாகும்.

குட்டுவதற்குரிய ஸ்லோகம்: விநாயகரை வணங்கும் போது, தலையில் குட்டிக் கொள்வது வழக்கம். அப்படி குட்டும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் மிகவும் இலகுவானது. இதோ, அந்த ஸ்லோகம்.

சுக்லாம்பரதரம், விஷ்ணும்,
சசிவர்ணம், சதுர்புஜம்!
ப்ரஸந்ந வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோபசாந்தயே!!

இந்த ஸ்லோகத்தைச் சொல்லும் போது, சுக்லாம்பரதரம் துவங்கி ப்ரஸந்ந வதநம் வரையான ஐந்து சொற்கள் வரை தலையில் ஐந்துமுறை குட்டிக் கொள்ள வேண்டும். இந்த ஸ்லோகம் விநாயகருக்கு ரொம்பவும் பிடிக்கும். இதைச் சொன்னால், நாம் துவங்கும் செயல்கள் தங்குதடையின்றி நடக்கும்.

எளிமையான பிள்ளையார் வழிபாடு ! இருக்கிற இடத்திலேயே மூன்றே மூன்று தோப்புக்கரணம் போட்டால் போதும்.

இந்த தோப்புக்கரணத்தை முதன்முதலில் போட்டவர் விநாயகரின் மாமனரான திருமால் தான். ஒருமுறை, இவர் தன் சக்கரத்தை கையில் சுழல விட்டு விநாயகருக்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தார். குழந்தை விநாயகன், அதை தும்பிக்கையால் பிடுங்கி வாயில் போட்டுக் கொண்டார். திரும்பக் கேட்டால் தர மறுத்து அடம் பிடித்தார். மருமகனை சிரிக்க வைத்தால் சக்கரம் கீழே விழுந்து விடும் என்ற அனுமானத்தில், காதுகள் இரண்டையும் கை மாற்றி பிடித்துக் கொண்டு, அமர்ந்தார், எழுந்தார், அமர்ந்தார். இந்த வேடிக்கையைப் பார்த்து சிரித்த விநாயகரின் வாயில் இருந்து சக்கரம் கீழே விழ மீண்டும் எடுத்துக் கொண்டார். இந்த வேடிக்கை விளையாட்டே சமஸ்கிருதத்தில் தோர்பிகர்ணம் என்ற பெயர் பெற்றது. தோர்பி என்றால் கைகளால். கர்ணம் என்றால் காது. கைகளால் காதை பிடித்துக் கொள்ளுதல் என்பது இதன் பொருள். தமிழில் இது தோப்புக்கரணம் ஆகிவிட்டது.

விநாயகரை வெள்ளிக்கிழமை மற்றும் சதுர்த்திதிதிகளில் வணங்கும் போது, நம்  நினைவிற்கு வரவேண்டியவர் அவ்வையார். அவர் சீதக்களப செந்தாமரைப்பூம் என்று துவங்கும் விநாயகர் அகவல் என்னும் பாமாலையை எழுதியவர். இதை சதுர்த்தியன்று பாடினால், நீங்கள் பிள்ளையாரிடம் ஏதாவது வேண்டினால், அவர் இரட்டிப்பாகத்தருவார்.

விநாயகப் பெருமானை சதுர்த்தியன்று அஷ்டோத்ர நாமாக்கள் (108 பெயர்கள்) சொல்லி வழிபடுவது மரபு. அது முடியாவிட்டால் பரவாயில்லை. 16 நாமாக்கள் கொண்ட ஒரே ஒரு எளிய ஸ்லோகத்தைச் சொன்னாலே அஷ்டோத்ரம் சொன்ன பலன் கிடைக்கும்.

ஸுமுகச்ச ஏகதந்தச்ச கபிலோ கஜகர்ணக:!
லம்போ தரச்ச விகடோ விக்நராஜோ விநாயக:!!
தூமகேதுர் கணாத்யக்க்ஷ பாலசந்த்ரோ கஜாநந:!
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ!!


நாம் முற்பிறவியில் செய்த செயல்களின் அடிப்படையில் இப்பிறவியில் கிரகங்கள் நன்மை தீமைகளை வழங்கி வருகின்றன. கிரக சஞ்சாரம் நமக்கு சாதகமாக இல்லாவிட்டால், அதிலிருந்து நம்மை விடுவித்து காத்தருள்பவரே நவக்கிரகவிநாயகர். இவர் நவக்கிரக நாயகர்களை தன் உடம்பில் அடக்கிக் கொண்டு அருள்பாலிக்கிறார். இவரை சதுர்த்திநாளில் வழிபட்டவர்கள் கிரகதோஷம் நீங்கப்பெறுவர். நவக்கிரக விநாயகரின்
நெற்றியில் சூரியன்,
நாபிக்கமலத்தில்  சந்திரன்,
வலது தொடையில் செவ்வாய்,
வலது கீழ்க்கையில் புதன்,
தலையில் குரு,
இடது கீழ்க்கையில் சுக்கிரன்,
வலது மேல்கையில் சனி,
இடது மேல்கையில் ராகு,
இடது தொடையில் கேது வீற்றிருக்கின்றனர்.
வாரத்தின் எந்த நாளில் இவரை வழிபட்டாலும் பலன் உண்டு .

விநாயகருக்கு மந்திரபிரதிஷ்டை கூடத் தேவையில்லை. மஞ்சள், சாணம், அரிசிமாவு, வெல்லம், களிமண் என்று எதில் செய்தும் இவரை வழிபட்டாலும் பலன் தரக்கூடியவர். இதனை, பிடிச்சு வைத்தால் பிள்ளையார் என்றே குறிப்பிடுவர். அருகம்புல்லும், எருக்கம்பூவும் விரும்பிஅணிபவர். எளிமையும், பக்தியும் அவர் விரும்பும் ஆராதனை

மஞ்சளில் பிடித்த பிள்ளையாரை வழிபட்டால் திருமண தடை நீங்கும்.
மண் பிள்ளையாரைப் பூஜித்தால் நல்ல பதவி கிடைக்கும்.
புற்று மண்ணில் செய்த பிள்ளையாரை பூஜித்தால் வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடையலாம்.
வெல்லத்தால் செய்த பிள்ளையாரை பூஜித்தால் சகல பாக்கியத்தையும் அடையலாம்.
பசுஞ்சாணியால் செய்த பிள்ளையாரை  பூஜித்தால் எண்ணிய காரியங்கள் கைகூடும்.
உப்பினால் செய்த பிள்ளையாரை வணங்கினால் எதிரிகளை வெல்லலாம்.
வெள்ளெருக்குப் பிள்ளையாரை பூஜித்தால் ஞானம் பெறலாம்.
வெண்ணெயில் பிள்ளையார் செய்து பூஜித்தால் நோய்கள் நீங்கும்.

சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது :




சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்று சொல்வதற்கு காரணம் உண்டு, சதுர்த்தியன்று அதாவது பிறந்த நாள் ஒன்றின் போது விநாயகரை தேவலோகத்தினரும், பூலோக மக்களும் வாழ்த்தியும், வழிப்பட்டும் வந்தார்கள். இவ்வாறு வழிபாடு நடப்பதை கண்ட விநாயகர், ஆனந்தத்தில் தன் மனமகிழ்ச்சியை நடனமாக வெளிப்படுத்தினார். அவர் நடனமாடியதை கண்ட சந்திரன்,விநாயகரைப் பார்த்து கேலியாக சிரித்தான். இதைப் பார்த்து கோபம் கொண்ட விநாயகர் தனது கொம்புகளில் ஒன்றை ஒடித்து அதை சந்திரனை நோக்கி எறிந்தார். விநாயகர் சதுர்த்தியன்று சந்திரனை யாரும் பார்க்க கூடாது என்று சபித்தார். அவ்வாறு பார்த்து விட்டால் அன்றைய நாள் முழுவதும் விக்னேஸ்வரனுக்கு செய்த பூஜையும் பெற்ற புண்ணியமும் பலன் இல்லாமல் போய்விடும்.

அதனால் தெரியாமல் நாம் விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனை  பார்த்துவிட்டால், அதற்கு பரிகார நிவர்த்தியாக சங்கடகர சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் தந்து வணங்கினால், தோஷம் நிவர்த்தியாகும்.

அவருடைய அருளால் வீடெங்கும் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் தவழட்டும் என உங்களுக்கும் எனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளுடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.


                           என்றும் அன்புடன் உங்கள் ,
    "ஸ்ரீ வைஷ்ணவன்"ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV