(24 -2 - 1955 5 -10 - 2011)
உலகின் பிரபல கணினித் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான, ஆப்பிள் நிறுவனத்தை கூட்டாக உருவாக்கியவர்களில் ஒருவரான, ஸ்டீவ் ஜாப்ஸ் ( 56 வயது) சுமார் 7 வருடங்கள் புற்று நோயுடன் போராடி வந்த ஸ்டீவ் ஜாப்ஸ் புதன் அன்று (நேற்று இரவு) அவர் காலமானதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது.
ஆப்பிள் மேக் கணினி,ஐ-பாட், ஐ-போன், ஐ-பேட் போன்ற நுட்பமான தொழில்நுட்பங்களைக் கொண்ட கருவிகளை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய முயற்சிகளுக்கு அவர் தலைமைத்துவம் முக்கியமானதாக இருந்தது.
ஜாப்ஸின் அறிவு, உற்சாகம் மற்றும் தொழிலில் அவர் காட்டிய ஆர்வம் ஆகியவைதான், இந்த நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உந்துதலாக அமைந்தன என்று , ஆப்பிள் நிறுவனம் கூறியது.
ஆப்பிள் நிறுவனம் சிறந்த படைப்பாற்றல் மிகுந்த உலகின் மிக ஆச்சரியமான மனிதனை இழந்துவிட்டதாக அதன் இணையத்தளத்தில் ஸ்டீவ் ஜாப்ஸை கெளரவப்படுத்தியிருக்கிறது.
ஸ்டீவ் ஜாப்ஸின் மரணம் குறித்து பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக இணைய தளங்களில் அஞ்சலிக் குறிப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. சீனவில் ட்விட்டருக்கு இணையான சமூக இணைய தளம் ஒன்றில், அவரது மரணம் குறித்து 5 கோடிக்கும் மேலான அஞ்சலிக் குறிப்புகள் பதியப்பட்டுள்ள்ன.
ஸ்டீவ் ஜாப்ஸ் நமது வாழ்க்கையை மாற்றியவர், ஒட்டுமொத்தமாக பல தொழிலக்ளுக்கு புது அர்த்தம் தந்தவர் என்று தமது அஞ்சலியில் அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பிட்டார்.அவரது மரணம் குறித்து அவர் கண்டுபிடித்த கருவியிலேயே உலகில் பெரும்பாலோனோர் தெரிந்து கொண்டனர் என்பதைவிட அவருக்கு பெரிய அஞ்சலி எதுவும் இருக்க முடியாது என்றும் ஒபாமா கூறினார்.
ஆப்பிள் நிறுவனத்தின் போட்டி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தொழில்துறை சகாக்களிடமிருந்தும் அஞ்சலிகள் வந்திருக்கின்றன.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவியர்களில் ஒருவரான, பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் செலுத்திய தாக்க்ததைப் போல உலகில் வேறொருவரைக் காண்பது அபூர்வம் என்றார்.
பேஸ் புக் இணைய தளத்தின் நிறுவனரான, மார்க் ஸுக்கர்பெர்க், தனது பேஸ் புக் பக்கத்தில், ஸ்டீவ் ஜாப்ஸை தனது ந்ண்பர் மற்றும் ஆலோசகர் என்று குறிப்பிட்டு, " நாம் ஒன்றை உருவாக்குவதன் மூலம் உலகை மாற்ற முடியும்ென்று காட்டியதற்கு நன்றி" என்று கூறியிருக்கிறார்.
ஸ்டீவ் ஜாப்ஸை, தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் ஐன்ஸ்டீனோடு ஒப்பிட்டு புகழஞ்சலி செலுத்தினார் நியூ யார்க் மேயர் மைக்கேல் புளூம்பர்க்.
அவரின் வாழ்க்கை குறிப்பு ;
1955 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ல் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் பிறந்த ஸ்டீவ் ஜாப்ஸ், அருகில் உள்ள ஒரு ஊரை சேர்ந்த தம்பதியரால் பிறந்த ஒரு வார காலத்திலேயே தத்தெடுக்கப்பட்டார்.
பள்ளி படிப்பின்போதே கம்ப்யூட்டர் விவகாரங்களில் ஆர்வம் காட்டிய ஸ்டீவ் ஜாப்ஸ், தாம் வசித்த நகருக்கு அருகில் உள்ள பாலோ ஆல்டோ என்ற ஊரில் இருந்த கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் கணினி நிபுணர்கள் உரையாற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஆர்வமுடன் சென்று வருவார்.பின்னர் கோடை விடுமுறையில் ஸ்டீவ் வாஸ்னிக் என்ற பொறியாளருடன் சேர்ந்து பணியாற்றினார்.
இந்நிலையில் போர்ட்லாண்டில் உள்ள கல்லூரி ஒன்றில் சேர்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ், முதல் செமஸ்டருடனேயே தமது படிப்புக்கு மங்களம் பாடிவிட்டு கம்ப்யூட்டர் தொடர்பான வடிவமைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் காட்ட தொடங்கினார்.
இந்த ஆர்வம் அவரை வீடியோ கேம் டெக்னீசியன்களில் முன்னோடி எனக் கூறப்படும் அடாரி என்பவருடன் சேர்ந்து பணியாற்ற வைத்தது.அதன் பின்னர் தம்மை போன்றே கல்லூரி படிப்பை பாதியில்விட்ட வோஜ்னியாக் என்பவருடன் சேர்ந்து கம்ப்யூட்டர் கிளப் ஒன்றில் சேர்ந்தார்.
கம்ப்யூட்டர் மீதான இவர்கள் இருவரது ஆர்வமும் ஒரே அலைவரிசையில் ஒத்துப்போன நிலையில், 1976 ஆம் ஆண்டு இருவரும் சேர்ந்து தொடங்கியதுதான் " ஆப்பிள் கம்ப்யூட்டர்".
இந்த நிறுவனத்தை தொடங்கியபோது ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு வயது 21; அவரது சகாவான வோஜ்னியாக்கின் வயது 26.
பின்னர் 1980 ஆம் ஆண்டு இருவரும் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டரை உருவாக்கி வெளியிட, அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் கணினி தொழில் நுட்பத்தை மாற்றிய பெருமை இவருக்கே உரியது. சாதாரணமான கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமாக உருவாகிய ஆப்பிள் நிறுவனத்தில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஐ பாடு மற்றும் ஐ டியூன்ஸ், ஐபோன் உருவாக்கி மாபெரும் கண்டுபிடிப்பு புரட்சி நிகழ்த்தியவரும், இவரே.
பொறியியல் படிப்பில் எவ்வித முறையான பட்டமும் பெறாத ஸ்டீவ் ஜாப்ஸின் 10 கண்டுபிடிப்புகள்தான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
2003 ஆம் ஆண்டு ஐ பாடு உருவாக்கபட்ட பிறகு இசை உலகில் ஒரு மாற்றமே ஏற்பட்டது. சுமார் 20 கோடி பேர் இதில் பதிவு செய்து ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட பாடல்களை பதிவிறக்கம் செய்து ரசித்து வருகின்றனர்.
2007 ஆம் ஆண்டு ஐ போனை இவர் உருவாக்கினார்.ஸ்மார்ட் போன் உருவாக இது ஒரு முன்னோடியாக விளங்கியது. 2011ல் உருவாக்கப்பட்ட ஐ டியூன்ஸ் சேவை மேலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து முழு கம்ப்யூட்டர் பயன்பாட்டை கையடக்க வடிவில் கொண்டு வரும் வகையில் இவர் உருவாக்கிய ஐ பேடு வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பம், கணினி யுகத்தில் புதிய வரலாற்றைப் படைத்தது.
கடந்த ஆண்டு வரை பிரபலமாக இருந்த டேப்லட் பிசி என்ற கம்ப்யூட்டரை, ஐ பேடு பின்னுக்குத் தள்ளி, 2010 இறுதியில் ஒன்றரை கோடி விற்பனையானது. இவர் கடந்த ஆகஸ்ட் வரை அதன் தலைவராகவும் இருந்தார்.
"உங்கள் வாழ்க்கைக்கான நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே மற்றவர்களுக்காக வாழ்ந்து அதை வீணாக்காதீர்கள்" என்பது ஸ்டீவ் ஜாப்ஸின் பிரபலமான வார்த்தைகளில் ஒன்று.
சாதனையாளர்களை விதி அதிக நாட்கள் வாழவிடுவதில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது ஸ்டீவ் ஜாப்ஸின் மரணம். ஆனால் அவரது சாதனைகளுக்கு அழிவில்லை!
வாழ்க அவர் புகழ்
உங்கள்
ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV



No comments:
Post a Comment