சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரி
(10 டிசம்பர் 1878 - 25 டிசம்பர் 1972),
தமிழகத்தில் அப்போதைய சேலம் மாவட்டத்தில் இருந்த தொரப்பள்ளி கிராமத்தில் சக்கரவர்த்தி வேங்கடார்யா, சிங்காரம்மா தம்பதியருக்கு 10 டிசம்பர் -1878ல் 3-வது மகனாக பிறந்தார். வாழ்க்கைத்துணைவர் அலர்மேலு மங்கம்மா.
இராஜாஜி என்றும் சுருக்கமாக சி.ஆர் என்றும் சேலத்து மாம்பழம் என்ற செல்லப் பெயர் கொண்டும் அழைக்கப்பட்டவர். சுதந்திரப் போராட்ட வீரர், வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர்.
இராஜாஜி ஓசூரில் அரசுப் பள்ளியிலும் பின்னர் பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியிலும் சென்னை பிரசிடென்சி கல்லூரியிலும் படிப்பை முடித்தார். 1900இல் தமது வழக்கறிஞர் தொழிலை நடத்தி வந்தார்.
சுதந்திரப் போராட்ட வீரராக :-
சுதந்திர வேட்க்கை கொண்டு ரௌலத் சட்டத்திற்கெதிரான இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம் போன்றவற்றில் ஈடுபட்டார்.
1930ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையை ஒட்டி வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடத்தி சிறை சென்றார்.
பிரிட்டன் ஜெர்மனிடன் போர் தொடுத்த வேளையில் காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்ட முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.போர்க்காலத்தில் பிரிட்டனுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது.
இந்திய சுதந்திரத்திற்கு பின் பாகிஸ்த்தான் என்ற தனி நாடு வேண்டும் என போர்க்கொடி தூக்கிய முகமது அலி ஜின்னாவுடனும் அகில இந்திய முசுலிம் லீக்குடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காண முக்கிய பங்காற்றினார் இவரது திட்டம் ராஜதந்திரி சி ஆர் பார்முலா என அழைக்கப்பட்டது.
அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர்.
அரசியல்வாதியாக :-
இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து கட்சியில் பெரும் பங்கு வகித்தார்.
காங்கிரசின் சோசலிச நோக்கிற்கும் எதிர்ப்பு தெரிவித்து ஜவகர்லால் நேருவுடன் கருத்து வேறுபாட்டின் காரணமாகவும் காங்கிரசிலிருந்து விலகினார்.
1962ல் ஸ்வதந்த்ராக் கட்சியினைத் துவங்கினார். காங்கிரசின் பெர்மிட்-கோட்டா ஆட்சிக்கு மாறான தாராளமயம் கொள்கையாகக் கொண்டதாக ஸ்வதந்த்ராக் கட்சி விளங்கியது.
1962, 1967 மற்றும் 1972 பொது தேர்தல்களில் போட்டியிட்டார்.
1967 தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிற்கு எதிரான அணியை ஒருங்கிணைத்து தமிழக அரசியலில் முதன்முறையாக காங்கிரசல்லாத ஆட்சி மலர துணை நின்றார்.
அவருடன் கூட்டணி கண்ட திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்த சி. என். அண்ணாதுரை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
நாடாளுமன்றபொதுதேர்தலிலும் ஸ்வதந்த்ராக் கட்சி 45 இடங்களைப் பிடித்து முதன்மை எதிர்கட்சியாக விளங்கியது.
இராஜாஜி வகித்த பதவிகள் :-
சேலம் நகராட்சி உறுப்பினராகவும் பின்னர் நகரதந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1937ஆம் ஆண்டு மதராச மாகாணத்தின் முதன்மை மந்திரியாக பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார்.
1946ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில்,வழங்கல்,கல்வி மற்றும் நிதித் துறை அமைச்சராக பணியாற்றினார்.
1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுனராக பணியாற்றினார்.
1948 முதல் 1950 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும்பணியாற்றினார்.
1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
1952 -54 காலகட்டத்தில் கேரளம், தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகம் இணைந்த பகுதிகளைக் கொண்ட சென்னை மகாணத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார்.
1952 முதல் 1953 வரை சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்தார். அப்போது அவர் இந்து கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய அனுமதிக்க 1939 ல் இராஜாஜி "Temple Entry Authorization and Indemnity Act" என்னும் சட்டத்தை கொண்டு வந்தார். அவர் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்திற்காக மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளானார்.
இராஜாஜி மதராஸ் மாநிலத்தின் முதல்வராக ஆட்சி செய்த காலத்தில் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தினார். அந்த மதுவிலக்குக் கொள்கை 30 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்வர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் தான் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இராஜாஜி அவர்கள் எழுத்தாளராக :-
தமது எழுத்தாற்றலால் ஆங்கில இலக்கியத்திற்கு சிறப்பாக பங்களித்துள்ளார். தமிழிலும் இராமாயணம் மற்றும் மகாபாரதம் காவியங்களை மொழிபெயர்த்துள்ளார்.
கல்கி மற்றும் இரசிகமணி டி.கே.சியுடன் இணைந்து குற்றாலத்தில் இலக்கிய ஆய்வுகள் நடத்தினார்.
புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடலான "குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா" இவர் இயற்றிய பாடலே.
இராஜாஜி அவர்கள் பெற்ற விருதுகள் :-
1954ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்றார். நம் நாட்டின் மிக உயரிய தேசிய விருதான பாரதரத்னா முதன்முதலில் இவருக்குத்தான் அளிக்கப்பட்டது.
1958ம் ஆண்டு இவரது "சக்ரவர்த்தி திருமகன்" காப்பியத்திற்காக "சாகித்ய அகாடமி" விருது வழங்கப் பட்டது.
இராஜாஜி அவர்களின் இறுதி காலம் :-
ரத்தத்துடன் சிறுநீர் கலந்துவிடும் "யூரிமியா" என்ற நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக, 17_12_1972 அன்று சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் இராஜாஜி சேர்க்கப்பட்டார். தொடக்கத்தில் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டபோதிலும், பிறகு பின்னடைவு ஏற்பட்டது.
மூன்று நாட்கள் மரணத்துடன் போராடினார். டாக்டர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், குணம் ஏற்படவில்லை. டிசம்பர் 25_ந்தேதி மாலை 5_44 மணிக்கு தனது 95ம் வயதில் இராஜாஜி மரணம் அடைந்தார். உயிர் பிரியும்போது மகன் சி.ஆர்.நரசிம்மன், மகள்கள் நாமகிரி, லட்சுமி, பேரப்பிள்ளைகள், குடும்ப நண்பர் "கல்கி" சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் கதறி அழுதபடி இருந்தனர்.
அப்போதைய தமிழக முதல்_அமைச்சர் கருணாநிதி, பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர் ஆகியோரும், அமைச்சர்களும், ஸ்வதந்த்ராக் கட்சி பிரமுகர்களும் கண் கலங்கிய படி அருகில் இருந்தனர்.
பெரியாருடன் கொள்கைகளில் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் இராஜாஜி தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர். இராஜாஜியின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெரியார், மயானம் வரை சென்று அஞ்சலி செலுத்தினார். இராஜாஜியின் உடலிற்கு தீ வைக்கும் போது பெரியார் தேம்பித் தேம்பி அழுதது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கொள்கை ரீதியான தனது எதிரியாக திகழ்ந்த இராஜாஜி, பெரியாரின் மனதில் நாணயமான எதிரியாகவும் (அப்படித்தான் பெரியார் கூறியுள்ளார்), அதே நேரத்தில் அன்பு குன்றா நண்பராகவும் இருந்துள்ளார்.
நிகழ்வுகள் :-
மூதறிஞர் இராஜாஜி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் தொரப்பள்ளியில் அவரது இல்லத்தை நினைவு இல்லமாகவும், உடல் அடக்கம் செய்யப்பட்ட சென்னை கிண்டியில் அவருக்கு நினைவு மண்டபமும் தமிழக அரசு அமைத்துள்ளது. மேலும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழக அரசின் மண்டபத்திற்கு ராஜாஜி மண்டபம் என்று பெயர் சூட்டியுள்ளது.
என்றும் அன்புடன்,
"ஸ்ரீ வைஷ்ணவன்"ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV

அருமையான பதிவு.
ReplyDeleteஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி ஐயா.