தமிழ் மதங்களில் ஒவ்வொரு மாதங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு . சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது .மேலும் வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இதுவே தேவர்களின் பகல் காலமாகும். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும். நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.ஆடி மாதத்தை "சக்தி மாதம்' என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சுமக் சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும். உயிர்களுக்கு ஆதார சக்தியை அதிகமாகத் தரும் மாதம் இதுவே.
சண்டி ஹோமம் செய்ய சிறந்த மாதம் :
ஆடி வெள்ளியன்று நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வார்கள். பராசக்தியின் ஒன்பது அம்சங்களை (சர்வபூதசமனி, மனோன்மணி, பலப்பிரதமணி, பலவிகாரணி, கலவிகாரணி, காளி, ரௌத்ரி, ஜேஷ்டை, வாமை) ஒன்பது சிவாச்சார்யர்கள், ஒன்பது வகை மலர்களால் ஒரே சமயத்தில் அர்ச்சிக்கும் "நவசக்தி அர்ச்சனை' நடைபெறும். ஆடி வெள்ளியில் "சண்டி ஹோமம்' போன்ற சக்தி ஹோமங்களும் செய்வார்கள்.
மேலும் வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்களுக்கும் ஆடி மாதம் சிறந்தது.
ஆடிமாத விழாக்கள் :
ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம், ஆடிப் பண்டிகைகளாகும்.
ஆடிமாத வழிபாடுகள் :
ஆடி மாதம் பண்டிகைகளை அழைக்கும் காலம்' எனலாம். மழைக்காலம் தொடங்குவதும் இப்பொழுதுதான்.
ஆடிப் பௌர்ணமி அன்றுதான் ஹயக்ரீவ அவதாரம் ஏற்பட்டது. இவர் கல்விக்குரிய கடவுள். இவர் வழிபாடு தொன்மையானது. திருமால் உடலிலிருந்து மதுகைடபர் என்பவர் வியர்வையில் தோன்றினர்.
பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார்.ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். ஆகவே இம்மாதத்தில் வரும் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகிழமைகளில் சக்திவழிபாட்டிற்கு நம்
ஆடி வெள்ளியன்று மகாலட்சுயை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை.
ஆடி வளர்பிறை துவாதசியில் துளசி பூஜை செய்வதால் பல நற்பலன்களைப் பெறலாம். துளசி மாடம்முன் கோலமிட்டு, மாடத்திற்குப் பொட்டிட்டு, துளசிக்கு மாலையிட்டுப் பூஜிக்க வேண்டும்.
சுக்ரவாரம் என்று அழைக்கப்படும் வெள்ளிகிழமை அள்ளி கொடுக்கும் சுக்கிரனுக்கு உகந்த நாள் ஆகும். அன்று சிம்மவாஹனத்தில் பவனி வரும் அம்பிகையை வழிப்பட்டால் நம் இல்லத்தில் நற்காரியங்கள் அரங்கேறும் என்பதும் ஐதிகம்.
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுதல் அதிகச் சிறப்பாகும். வெள்ளிக் கிழமைகளில்
ஆடி வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி, தெய்வங்களை வழிபடுவது சிறப்பு. அன்றையதினம் ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும்.பெண்கள் குழுக்களாக 108, 1008 குத்துவிளக்குப் பூஜைகளைச் செய்யலாம். அம்மன் பூஜை செய்யும் இல்லத்தில் செல்வம் சேரும்.
இம்மாதத்தில் அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்பாள் பாடல்களைப் பாடுவார்கள். பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்து அம்பாளை வழிபாடுவார்கள். பெண் குழந்தைகளை அம்பாளாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க அம்பாளின் அருள் கிடைக்கும்.
ஆடிமாதத்தில் சில கோவில்களின் சிறப்பு :
கோவை ஈச்சனாரியில் உள்ள மகாலட்சுமி மந்திரில் முத்தேவியர் ஒன்றாக அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். நடுவே மகாலட்சுமி யும் வலப்புறம் துர்க்கையும் இடப்புறம் சரஸ்வதியும் அமைந்துள்ளனர். தினமும் காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை நடுவேயுள்ள லட்சுமி முகத்தில் சூரிய ஒளி படும். பகல் 12.00 மணிக்கு மூன்று தேவியர் முகங்களிலும் சூரிய ஒளி படும் தரிசனத்தைக் கண்டு மகிழலாம். ஆடி மாதம் முழுதும் இவ்வாலயம் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.
சக்தி பீடங்களில் ஒன்றான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய அம்மன் அகிலாண்டேஸ்வரிக்கு ஆடி வெள்ளியில். ஸ்ரீ வித்யா பூஜை வைதீக முறைப்படி நடத்து கின்றனர். இவ்வம்மன் காதுகளில் உள்ள தாடங்கங்களில் ஸ்ரீ சக்கரம் உள்ளது. ஆடி வெள்ளியன்று, இவ்வம்மன் மாணவியாக இருக்க, ஈசன் குருவாக இருந்து உபதேசம் செய்தார். எனவே பள்ளிப் பிள்ளைகள் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர்.மேலும் ஆடி வெள்ளியன்று அம்பாள் காலையில் லட்சுமிதேவி யாகவும், உச்சிக்கால வேளையில் பார்வதி யாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி அளித்து அருள்பாலிக்கிறார்.
தகடூரில் உள்ள கோட்டை கல்யாணகாமாட்சி ஆலயத்தில் உள்ள சூலினி துர்க்கை அம்மனின் முழு உருவத்தை ஆடி மாதம் மூன்றாம் செவ்வாயில் மட்டுமே மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 வரை தரிசிக்கலாம். மற்ற நாட்களில் முகதரிசனம் மட்டுமே.
திருச்சி அருகேயுள்ள திருநெடுங்கள நாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுதும் சூரிய ஒளி மூலவர்மீது பட்டு சூரிய பூஜை நடைபெறும். இது ஒரு சிறப்பு என்றால், இவ்வாலய இரு விமானங்கள் காசி ஆலய விமானம்போல அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு ஆகும்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத் தில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். விழா நாட்களில் அம்மன் வீதி வலம் வருவது சிறப்பான ஒன்றாகும்.
ஔவை விரதம்:
ஆடி செவ்வாயில் ஒளவையாருக்கு மேற்கொள்ளும் நோன்பு குறிப்பிடத் தக்கது. இந்த ஒளவை நோன்பை கடைபிடிப்பதால் விரைவில் திருமணம் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். இந்த நோன்பில் பச்சரிசி மாவுடன், வெல்லம் கலந்து உப்பில்லாமல் கொழுக்கட்டை செய்வார்கள். பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் இந்த விரதம் இரவு பத்து மணிக்கு மேல் துவங்கும். அச்சமயத்தில் ஆண்கள் யாரும் அவ்விடத்தில் இருக்ககூடாது. பின்னர் ஒளவையார் கதையை வயதான பெண்மணி கூறுவார். ஒளவையை வேண்டி கொழுக்கட்டை நிவேதனம் செய்து இரவைக் கழிப்பர். இதுவே ஒளவை நோன்பு.
வரலட்சுமி விரதம் :
ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த விரதத்தால் மாங்கல்ய பலமும், மங்களமும், நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கை கூடும். அஷ்ட ஐஸ்வர்யங்கள் சேரும். கணவன், குழந்தைகளுக்கு நன்மை கிட்டும். மகாலட்சுமி வீட்டில் வாசம் செய்வாள். வரலட்சுமி பூஜையின் போது லட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் போன்ற ஸ்தோத்திரம் படிப்பது மிகச் சிறப்பு!அப்போது சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், ஆகியவற்றோடு ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது நலம் தரும்.
இம்மாதத்தில் நற்காரியங்களுக்கு உகந்தது அல்ல என்பது தவறானது , சகல ஐஸ்வய்ரங்களையும் பெற்றுத்தரும் இறைவழிப்பாடுதான் நாம் செய்யும் நற்காரியங்களில் முதன்மையானது .
ஆடியின் சிறப்பு அளவில்லாதது !
அனைத்து நலன்களையும் வழங்குவது !
அனைவரும் பலன் பெருக !
அன்புடன் உங்கள்,
''ஸ்ரீ வைஷ்ணவன்'' ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா.SRV

அருமையான பதிவு.
ReplyDeleteமனப்பூர்வமான வாழ்த்துக்கள்.