(டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921)
1882-ம் ஆண்டு டிசம்பர் 11 சின்னசாமி ஐயருக்கும் லட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்த பாரதி (“சுப்பையா” என்று அழைக்கப்பட்டார்) தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார்.
பொருள் செய்வதையே நோக்கமாகக் கொண்ட தந்தை; பாரதி ஐந்து வயதுச் சிறுவனாய் இருக்கும் போதே உயிர்நீத்த தாய்; சிருங்காரச் சுவையில் ஈடுபட்டு அத்தகைய இலக்கியங்களைச் சுவைப்பதே வாழ்வெனக் கருதிய மன்னர்; தூதும் அந்தாதியும் கலம்பகமும் பாடிப் பரிசில் பெற்றுக் கொண்டிருந்த புலவர் கூட்டம் என்ற சூழலில் வாழ்ந்த பாரதியின் வாழ்க்கையில் மேலும் பல துன்பங்களை கடந்துவந்தவர்.
1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார் பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார்.
பின்னர் எட்டையபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார். ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகஸ்ட் 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றியே மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆகஸ்ட். 1905-ஆகஸ்ட் 1906 ), இந்தியா என்ற வார இதழில் (மே 1905-மார்.1906/செப்.1906, புதுச்சேரி: 10.19.1908- 17.05.1910), சூரியோதயம்(1910), கர்மயோகி (டிசம்பர் 1909-1910), தர்மம் (பிப்.1910),என்ற இதழ்களிலும் பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராக துணிச்சலான பத்திரிகைக்காராக பணியாற்றினார்.
தமிழ்,சமஸ்கிருதம்,இந்தி, ஆங்கிலம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளையும், பிற மொழி இலக்கியங்களையும், தமிழ்மொழியாக்கம் செய்துள்ளார். பழந்தமிழ்க் காவியங்களின்மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்ட மாமேதை.
செல்வத்தையும் பணத்தையும் ஒருபொருட்டாகக் கருதாதவர்,
மன்னரையும் செல்வந்தரையும் மதிக்காத சுயமரியாதை உணர்வு கொண்ட மாமனிதன்.
தமிழ்க் கவிஞர்:
புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன் பாரதி, புதுக் கவிதை என புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசன கவிதையை தமிழுக்குத் தந்தவன்.
தேசிய விடுதலைப் போராட்ட வீரர்:
அச்சமின்மையே இந்திய விடுதலைப் போரினை
உருவாக்கியது. அந்நிய அரசின் அடக்குமுறை பாரதியைக்
கட்டுப்படுத்த முடியவில்லை. உச்சிமீது வான் இடிந்து வீழினும்
அச்சமில்லை என்ற பாரதியின் பெயர் விடுதலை வரலாற்றில் நிலைத்து விட்டது.
சூரத்நகரில் நிகழ்ந்த காங்கிரஸ்மாநாட்டுப் பணி, வ.உ.சிதம்பரம்
பிள்ளை, சுப்பிரமணிய சிவா ஆகியோர் மீதான வழக்குகள் ஆகியன பாரதியின் புகழைப் மேன்மேலும் பெருக வைத்தன.
ஜாதி மதம் பாராதவர்:
புதுவையில் கனகலிங்கம் என்ற தாழ்த்தப்பட்ட இளைஞருக்கு அவர் பூணூல் போட்டுவிட்டதும், தம்போலா என்ற தோட்டி வீட்டில் போய் உட்கார்ந்து காற்று வாங்கியதும்,
தேசமுத்து மாரியம்மன் கோயிலில் சென்று பாட்டிசைத்ததும், வசன கவிதைகளுக்கு அடித்தளம் அமைத்ததும், எளிய நிகழ்ச்சிகளல்ல. வரலாற்றில் இவை பெரிய மாற்றங்களையும் திருப்பங்களையும் உண்டாக்கிவிட்டன.
பெண்களின் உரிமையை வற்புறுத்தியவர்:
தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதி தான் .
பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினான். போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான் என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றான்.
பெண்களின் கல்வியறிவுக்காகவும் சட்டங்களை செய்திடவும் கனவு கண்ட பாரதி.
கட்சி அமைப்புகளுக்குக் கட்டுப்படாதவர்:
தமிழ்நாட்டிலிருந்த காங்கிரஸ் இயக்கத்தோடு கூட அவர் உறவுடையவராக இல்லை; அவர் தாமே ஒரு தனி இயக்கமாக விளங்கினார். எவரிடமும் அனுமதி பெறாமல் நேரே சென்று காந்தியடிகளைக் கண்டு தாம் நடத்தும் கூட்டத்திற்கு வர இயலுமா என்றும் கேட்டார்.
தமிழைப் பெரிதும் போற்றியவர்:
பாரதியார் இன்றும் பேசப்பெறுவதற்குரிய நிலையில் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று அவரது எளிமையான நடை. பாரதிக்கு முன்‘பாட்டு இலக்கியம்’ இல்லை. செய்யுள் இலக்கியமே இருந்தது. அந்தச் செய்யுளுக்கு உரை இருந்தால்தான் புரிந்து கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. செய்யுட்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உரைகள் எழுந்தன. எவ்வளவுக் கெவ்வளவு எளிமையாக இல்லாமல் இருக்கிறதோ அவ்வளவுக் கவ்வளவு செய்யுள் இலக்கியம் மதிப்புடையதாகக் கருதப்பட்டது. பாரதிக்கு இந்தக் கருத்து உடன்பாடாக இல்லை. மக்கள் அனைவருக்கும் விளங்கும் எளிய தமிழில் பாட்டு இலக்கியப் படைப்பு இருக்க வேண்டுமென்று பாரதி கருதினார். பாரதியார் புதுவையில் அரவிந்தரிடம் ரிக் வேதப் பாடல்களை முறையாகக் கற்றுக் கொண்டார். அவற்றைத் தமிழில் மிக எளிமையாகப் பாட்டு வடிவத்தில் கொண்டு வந்தார்.
கவிதை
சக்திப்பாடல்கள்,
கண்ணன் பாட்டு,
குயில்பாட்டு,
பாஞ்சாலி சபதம்,
பெண்விடுதலைப் பாடல்கள்.
ஆகியன அவர் படைப்புகளில் சில.
இவைகளில் எனக்கு பிடித்தது இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த பாஞ்சாலி சபதம் படைப்புதான். அழகிய இலக்கிய நயத்தையும், மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாக பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது.
தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்கவேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றார். வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில்பயிர்செய்யும் நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர்.
விடுதலை போராட்ட காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளை படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசிய கவியாக போற்றப்படுகிறார்.
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று விடுதலைக்கு முன்பாகவே பாடிக்களித்த பாரதி, தேச விடுதலைக்கு முன்பாகவே உயிர்நீத்தவர்.
வாழ்க பாரதி ! வளர்க அவர் புகழ் !
என்றும் அன்புடன்
"ஸ்ரீ வைஷ்ணவன் "ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV

பாரதியின் பாடல்கள் இருக்கும் வரை தமிழ் இருக்கும்..தமிழ் இருக்கும் வரை பாரதியின் புகழ் இருக்கும்!
ReplyDeleteஅருமையான பதிவு..நன்றி! :)
அருமையான கட்டுரை.
ReplyDeleteஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.