சமஸ்கிருதத்தில் ஏகாதசி என்பது தமிழில் பதினொன்று எனப்பொருள். பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியை ஒரு பக்ஷம் என்கிறோம். கிருஷ்ண பக்ஷம் (தேய்பிறை), சுக்லபக்ஷம் (வளர்பிறை) ஆகிய இந்த இரண்டு பக்ஷங்களில் ஒவ்வொன்றிலும் 11வது நாளின் (திதியில்) வருவது ஏகாதசி ஆகும். இந்நாளில் கட்டாயம் விரதம் இருப்பதை இந்துமதத்தின் அனைத்து சாஸ்த்திரங்களும் வழியுருத்துகின்றன. மற்ற விரதங்களை விட ஏகாதசி விரதம் கடைபிடிப்பது அதிமுக்கியமானதாகும்.
''ந காயத்ர்யா : பரம் மந்த்ரம் ந மாது : பர தைவதம்
ந காச்யா : பரமம் தீர்த்தம் நைகாதச்யா : ஸமம் வ்ரதம்''
அதாவது
''காயத்ரியைக் காட்டிலும் சிறந்த மந்திரம் இல்லை.
தாயை விஞ்சிய தெய்வம் இல்லை.
காசியை விஞ்சிய புண்ணிய தீர்த்தம் இல்லை.
ஏகாதசியை விஞ்சிய வேறு விரதமும் இல்லை''
என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்திருப்பதன் காரணம் என்ன ?
கர்மேந்திரியங்கள் ஐந்து,
- வாக்கு
- கைகள்
- கால்கள்
- கருவாய்
- எருவாய்
- மெய்
- வாய்
- கண்
- மூக்கு
- செவி
ஆகிய இந்த பதினொரு இந்திரியங்களால் செய்யபடும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் ஏகாதசி விரதம் இருந்தால் நம்மை விட்டு நீங்கி விடும் என்பதுத்தான் அதற்க்கு காரணம்.
வைகுண்ட ஏகாதசி,
இராவணனின் இன்னல்களை சகிக்க முடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழி மாத சுக்லபக்ஷ (வளர்பிறை) ஏகாதசியன்று நாராயணனை வணங்கித் தங்கள் துன்பங்களை கூறினர். பகவானும் பிரம்ம தேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்தருளினார். முக்கோடி தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு. தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற வேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைந்த போது அமுதம் வெளிப்பட்டது. துவாதசியன்ற மஹாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து தேவர்களுக்கு, திருக்காட்சி அளித்து அவர்களுக்கு அருளாட்சி புரிந்தாள். ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு இந்தப் பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுபிறவியில் வைகுண்டவாசம் சொர்க்கவாசல் வழங்குவதாக முக்கியமாக மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம் என்பது திருமால் வாக்கு. இதனால் இவ்விரதம் மகிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.ஆண், பெண் அனைவரும் பின்பற்ற வேண்டிய பெருமைமிக்கது வைகுண்ட ஏகாதசி விரதம்.
ஏகாதசி பற்றி பத்ம புராணம் என்ன கூறுகிறது ?
திரேதாயுகத்தில் முரன் என்ற பெயரில் ஒரு கொடிய அரக்கன் வாழ்ந்து வந்தான். அவன் தேவர்களுக்கும், தவ முனிவர்களுக்கும் பல கொடுமைகள் செய்தான். அவனது தொல்லைகளைத் தாங்க முடியாத தேவர்களும், முனிவர்களும் திருமாலிடம் சென்று முறையிட்டனர். அரக்கன் முரனை அழித்து தேவர்களைக் காக்க திருமால் முடிவு செய்து சக்கராயுதத்துடன் முரனுடன் போருக்கு புறப்பாட்டார்.
அசுரனுக்கும், திருமாலுக்கும் கடும்போர் நடந்தது. ஆண்டவனின் சக்கராயுதத்திற்கு முன் அரக்கன் சக்தியற்றுப் போனான். இருந்தாலும் அவன் பல மாய வடிவங்களில் போர் புரிந்து வந்தான். தினமும் காலையில் சூரிய உதயத்தில் இருந்து சூரிய அஸ்தமனம் ஆகும்வரை போர் நடக்கும்.
தினமும் போர் முடிந்ததும் திருமால் வத்திரிகாசிரமத்தில் உள்ள ஒரு குகைக்கு சென்று இளைப்பாறுவார். பொழுது விடிந்ததும், அரக்கனுடன் போர் புரிய போர்களத்திற்கு செல்வார்.ஒரு நாள் ஆசிரமத்தில் திருமால் படுத்து இருந்த போது அங்கு வந்த முரன், அவரை திடீரென்று தாக்கத் தொடங்கினான். அப்போது பெருமாளின் உடலில் இருந்து ஒரு மகத்தான சக்தி, பெண் வடிவில் எழுந்து அரக்கன் முன் வந்து நின்றாள். அழகியைக் கண்டதும் அவளது அழகில் அரக்கன் மயங்கினான். ஆனால் படைக்கலங்களுடன் விசுவரூபத்துடன் தோற்றமளித்த அந்தப் பெண் ஆங்காரத்துடன் அரக்கனை அழித்தாள்.
திருமால் மனம் மகிழ்ந்தார். தமது எதிரில் நின்ற சக்தியை நோக்கி, சக்தியே, அசுரனை அழித்த உனக்கு ஏகாதசி என்று திருநாமம் சூட்டுகிறேன். அரக்கன் முரனை அழித்த இம்மார்கழி மாதத்தில் உன்னை விரதம் இருந்து வழிபடுவோருக்கு, யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம் என்று கூறினார். திருமால் கொடுத்த வரமே ஏகாதசியின் மகிமைக்கு காரணமாயிற்று. அரக்கனை வென்று சக்தி வெளி வந்த மார்கழி மாதம் பதினோராவது நாளாக இருந்ததால், திருமாலின் சக்திக்கே ஏகாதசி என்ற பெயர் ஏற்பட்டது.தேவர்களும், முனிவர்களும் ஏகாதசியன்று விரதம் இருந்து இழந்த தங்களது சக்தியை மீண்டும் பெற்ற வரலாறும் உண்டு.
பரமபதவாசல் (சொர்க்கவாசல்) திறக்கப்படுவது ஏன் ?
அவதார புருஷரான எம்பெருமானுடன் போரிட்டு, அவரின் அருள் பெற்ற மதுகைடவர்கள் என்ற அரக்கர்கள் இருவர், தாம் பெற்ற வைகுண்ட இன்பத்தை உலகில் உள்ள எல்லோரும் பெற வேண்டும் என்று விரும்பி ஆண்டவனிடம் வைகுண்ட ஏகாதசி தினத்தில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக தாங்கள் அர்ச்சாவதாரத்தில் வெளிவரும்போது தங்களை தரிசிப்பவர்களும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களும் அவர்கள் எத்தகைய பாவங்கள் செய்து இருந்தாலும் அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோளை பெருமான் ஏற்றுக் கொண்டார். அதன் காரணமாகவே வைகுண்ட ஏகாதசியன்று பரமபதவாசல் திறக்கப்பட்டு ஸ்வாமி பவனிவருகிறார்.
ஏகாதசி விரதமுறை என்ன ?
1) ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்று பகலில் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு மற்றும் ஏகாதசியன்று அதிகாலையில் கண்விழித்து குளித்துவிட்டு, பகவான் கை கொடுப்பான் என்று நம்பி தைர்யமாகப் பூர்ண நியமத்தோடுதான் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். ஏகாதசி திதி முழுவதும் அன்னம் உண்ணாமல் இருக்க வேண்டும். மற்ற உபவாசங்களில் அதமபக்ஷமாக ஒருவேளை அன்னம், ஒரு வேளை இட்லி தோசை என்று வைத்துக்கொள்ளும் அளவுக்கு ஏகாதசியை கொண்டு வந்து விடக்கூடாது. ஏகாதசியில் அன்னத்தை சாப்பிட்டால் பிராயச்சித்தமே கிடையாது என்றிருக்கிறது. சிலவிதமான நோயாளிகள், பலஹீனர்கள், அன்னம் தவிர எதுவுமே ஜெரித்துக்கொள்ள முடியவில்லையென்று நிர்பந்தம் ஏற்பட்டால் சாதத்தைக் கஞ்சி வடிக்காமல் ஹவிஸ்ஸாகப் பண்ணி அதில் உப்பு, புளி, காரம் எதுவுமே சேர்க்காமல் ஒரு வேளை மட்டும் ஸ்வல்பம் ஏகாதசியன்று சாப்பிடலாம். ரொம்பவும் அசக்தமானவர்களுக்குதான் இந்த விலக்கு மற்றவர்களுக்கில்லை.
2) ஏகாதசி இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், பகவான் நாமங்களை சொல்லுவதுமாக இருக்க வேண்டும்.
3) ஏகாதசிக்கு மறுதினம் துவாதசி என்பர். துவாதசி அன்று உணவு அருந்துவதை பாரணை என்று கூறுவார்கள்.
4) துவாதசியன்று அதிகாலையில் உப்பு, புளிப்பு முதலிய சுவையற்ற உணவாக சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத்திக்கீரை இவைகளைச் சேர்த்து பல்லில் படாமல் ""கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!! என்று மூன்று முறை கூறி ஆல் இலையில் உணவு இட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
5) துவாதசி அன்று வைஷ்ணவ நாட்காட்டியில் காட்டியபடி குறிப்பிட்ட நேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்க வேண்டும். விரதத்தை முடிப்பது என்பது நீர்கூட அருந்தாதவர்கள் துளசி தீர்த்தத்தையும், மற்றவர்கள் பகவான் கிருஷ்ணருக்கு தானிய உணவை படைத்து (பிரசாதமாக) உண்ணலாம்.
ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது போலவே விரதத்தை முடிப்பது மிகமிக முக்கியம் இல்லாவிடில் விரதம் இருந்த முழுபலனும் கிடைப்பதில்லை.
6) உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும். அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும்.
7) தீட்டுக்காலத்தில் ஏகாதசி விரதம் மேற்கொண்டாலும் பயன் உண்டு
8) எட்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள், என்பது வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள் ஆகியோர் விரதம் மேற்கொள்ளத் தேவையில்லை என்று சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
''ப்ரதிக்ராஸம் அலௌ புங்க்தே கிஷ்பிஷம் ச்வாந விட் ஸமம்''
"ஸ்ரீ வைஷ்ணவன்"ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV






No comments:
Post a Comment