( மே 9 , 1408 - பிப்ரவரி 23 , 1503 )
அன்னமய்யா பிறப்பால் சைவ பிராமணர் . பின்னர் அகோபில மடத்துப் பெரியவர் ஒருவரை குருநாதராகக் கொண்டு வைணவத்தைக் கற்றார்.
''ஸ்ரீநரசிம்ம அனுஷ்டுப் மஹா மந்திரத்தை'' பின்பற்றி அதிலுள்ள முப்பத்திரண்டு எழுத்துக்களுக்கு ஏற்ப, முப்பத்திரண்டாயிரம் கீர்த்தனைகள் ஏழுமலையான் மீது பாடியுள்ளார்.
வைணவ , சைவ தமிழ்ப் பாசுரங்களில் உள்ளதுபோல, நாயகன் - நாயகி பாவத்தில் இவரும் எண்ணற்ற பாடல்களை எழுதியுள்ளார். இப்பாடல்களில் சிருங்கார ரசம் மிகுந்திருக்கும்.
சிருங்கார மஞ்சரி,
இரண்டடி ராமாயணம்,
தசாவதார மகாத்மியம்
சங்கீர்த்தன லட்சணம்,
ஸ்ரீவெங்கடேஸ்வர சதகங்கள்,
ஸ்ரீவெங்கடேஸ்வர மகாத்மியம்,
அலர்மேல் மங்கை வெங்கட நரசிம்மர் பதிகம்,
உள்ளிட்ட எண்ணற்ற சங்கீதக் கீர்த்தனைகள் தெலுங்கிலும், சமஸ்கிருதத்திலும் இவர் இயற்றியுள்ளார்.
பிறப்பால் சைவரான அன்னமய்யா விசிஷ்டாத்வைத கருத்துக்களை ஏற்றுக்கொண்டு, வைணவ நெறியை கடைபிடித்தததாலும், வைணவ கீர்த்தனைகளை இயற்றியதாலும் "ஸ்ரீஅன்னமாச்சாரியார்'' என்று அழைக்கப்பட்டார்.
அன்னமய்யாவின் துணைவியாரான திம்மக்க அம்மையாரும், சுபத்ரா கல்யாணம் எனும் காவியத்தை எழுதி, தெலுங்குமொழியின் முதல் பெண் கவிஞர் என்ற சிறப்பைப் பெற்றார். இத்தனைக்கும் எந்த ஒரு சங்கீத அறிவும் பெறாதவர் இவர். கணவரின் கவித்திறனில் மனம் மயங்கி, தாமும் சிறிது சிறிதாக சங்கீத அறிவைப் பெற்றே மேற்கண்ட காவியத்தை எழுதினார்.
இவரது மகன் பெரிய திருமலாச்சாரியாரும்,பேரன் சின்ன திருமலாச்சாரியாரும் பல சங்கீத நூல்களையும், பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு நூலையும் இயற்றினர். அன்னமாச்சாரியார் பெரிய, சிறிய, திருமலாச்சாரியார்கள் மூவரையும் சேர்த்து, "தாளபாக மும்மூர்த்திகள்'' என்று அழைக்கின்றனர். அன்னமாச்சாரியார் பிறந்த கிராமத்தின் பெயர் தாளபாக்கம்.
சங்கீதப் பணிகள் தவிர திருக்கோயில் பணிகளையும், தாளபாக மும்மூர்த்திகள் செய்தனர். தங்களுக்கு சன்மானமாக வழங்கப்பட்ட கிராமங்கள், பொன்,பொருள் அனைத்தையும் திருமலைக் கோயிலுக்கே நன்கொடையாக வழங்கினர். திருமலையில் நடைபெற்று வரும் சுப்ரபாத சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஏகாந்த சேவை
ஆகியவற்றைத் துவக்கி வைத்த பெருமை அன்னமாச்சாரியரையே சேரும்.
அன்புடன் உங்கள் ,
"ஸ்ரீவைஷ்ணவன்" ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV

No comments:
Post a Comment